காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!

நதிமூலம் :
*

“தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள்.

“என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”

அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் வில்லிசை அந்த அளவுக்குப் பிரசித்தம். காந்தியின் மீது அவருக்கு ஈடுபாடு இருந்ததால் வில்லிசையிலேயே தேசியப் பாடல்களையும் பாடுவார். தம்பிகளுடன் இணைந்து கோவில் கோவிலாகப் பாடியும் கூடப் போதுமான வருமானம் இல்லாத நிலை.

நாகர்கோவிலுக்கு காந்தி வந்திருந்தபோது தனது மூத்த பையன் அனந்த கிருஷ்ணனையும் தூக்கிக்கொண்டு போனார் ஹரி கிருஷ்ணன். காந்தி கதர் உடுத்தச் சொன்னதை வேதவாக்காக ஏற்று கதர் மயமானது குடும்பம். வீட்டிலேயும் கதரை உருவாக்கத் தனித் தறிகள். சுழலும் கை ராட்டினங்கள்.

அப்போதுதான் பேசப் பழகிக் கொண்டிருந்த அனந்த கிருஷ்ணனின் நாக்கில் வசம்பை தடவி விட்டிருக்கிறார் அனந்த கிருஷ்ணனின் தாயாரான தங்கம்மை. அவரது தாலியை உரசி அந்தத் துகளுடன் தண்ணீரை அனந்தனுக்கு கொடுத்திருக்கிறார். “பையன் நல்லாப் பேசணும்.”

“அப்போ எங்க வீட்டிலே 18 தறிகள் இருந்தன. அனந்தகிருஷ்ணன் தான் மூத்த பையன். ஆனால் வீட்டில் ‘அப்பாவு’ என்று தான் கூப்பிடுவோம். எல்லோருக்கும் கதர். வீட்டிலேயே கதர்த்துணி தயாரித்து அதையே அணிந்திருப்போம்.

அனந்தனுக்குச் சின்ன வயசிலேயே பொறுப்புகள் அதிகம். பக்கத்து ஊர்களில் நூற்ற நூலை வாங்கித் தலைச்சுமையாகக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போவான். வீட்டில் எல்லோருமே நெசவு வேலையில் ஈடுபட்டிருப்போம். இரவு நேரங்களில் புன்னைக்காயிலிருந்து எடுத்த எண்ணெயை ஊற்றி விளக்கேற்றி வைத்திருப்போம். அந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து படிப்பான் அப்பாவு…” – 85 வயதுக்கான தளர்ச்சியுடன் தனது மகனைப் பற்றிச் சொல்கிறார் தங்கம்மை.

வீட்டில் சகலத்திலும் கதர், தலையணை உறையில் இருந்து சட்டை வரை. அதிலும் முரட்டுக் கதரைப் போட்டுக்கொண்டு அனந்த கிருஷ்ணன் பள்ளிக்குப் போகும்போது, கூடப் படிக்கும் பையன்கள் ‘சாக்கு மூட்டை’ என்று கூப்பிடும்போது சங்கடமாய் இருக்கும் அனந்த கிருஷ்ணனுக்கு. சட்டைப் பொத்தானைக் கூட ’விதேசி’ என்று உபயோகிக்கத் தகப்பனார் தடை விதித்து விட்டதால், தேங்காய்ச் சிரட்டையை சின்னதாக வெட்டி இழைத்து, கைராட்டைக் கதிரால் அதில் துளையிட்டு –அது தான் ‘சட்டைப் பொத்தான்’.

படித்து ஓய்ந்துவரும் அனந்தகிருஷ்ணனிடம் தகப்பனார் கேட்டார்.
“நீ படிக்கிறேல! அதனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீயே ஏதாவது பேசணும்”

தறி நெய்கிற நெசவாளிகள் சூழ்ந்திருக்க வீட்டிலேயே சின்னக் கூட்டம். முதலில் இருந்த கூச்சம் அகன்று படிப்படியாக பேச்சு இயல்பாக வந்தது அனந்த கிருஷ்ணனுக்கு. பிறகு ஊரில் இருந்த வாசக சாலையில் போய் அங்கும் வாராவாரம் கூட்டம்.

“ஏய்… நம்ம ‘தறிப்புரை அப்பாவு’ பேசுறான்லே… வாங்க” என்று கூட்டம் சேர அந்த ஊரில் தனி மவுசு.

அப்போது உவரியில் சுயம்புலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா. சைக்கிளை மிதித்துக் கொண்டு அனந்தகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் போனார்கள்.
அப்போது திருவிதாங்கூர் சமஸ்தான அமைச்சரான சிதம்பரநாதன் வந்திருந்தார்.

அனந்தகிருஷ்ணனைச் சிலர் உசுப்பி விட்டு பேசச் சொன்னார்கள்.

அனந்தகிருஷ்ணன் பேசினார்.

அந்தப்பேச்சு அமைச்சர் சிதம்பர நாதனுக்குப் பிடித்துப் போய், உடனே கோவில் அறக்கட்டளை துணைத் தலைவர் பதவிக்கு அனந்தகிருஷ்ணனை நியமிப்பதாக அறிவித்தார்.

அப்போது அனந்த கிருஷ்ணனின் வயது 16.

“எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த நேரம். அனந்தனுக்கு இந்தி ஒரு சப்ஜெக்ட். ஆனால் இரண்டு தடவையும் அதில் தேறவில்லை. இந்த அவமானம் தாங்க முடியாமல் கிராமத்தை விட்டு சென்னைக்குச் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். அங்கே போய் ஸ்டூடியோ அது இதுவென்று சுற்றிவிட்டு அனந்தனோட அப்பா வாங்கி கொடுத்த பேனாவிலிருந்த தங்க நிப்பை மூர் மார்க்கெட்டில் விற்றுவிட்டுக் கிராமத்துக்கே வந்துவிட்டார்.

பிறகு மதுரைக் கல்லூரியில் பி.ஏ. படிச்சிட்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்தார். அதுக்குள்ளேயும் பேசுவதில் பெயர் வர ஆரம்பித்துவிட்டது. குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து பட்டிமன்றங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார்.

கஷ்டப்பட்ட நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து வந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குமரி அனந்தன் ஆரம்ப காலங்களில் அவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது” என்கிறார் அகஸ்தீஸ்வரத்திலுள்ள அனந்தனின் தாய் மாமாவான நாராயண பெருமாள் (73).

அகஸ்தீஸ்வரத்தில், ஓடு வேய்ந்தபடி, அதிக மாற்றங்கள் இல்லாமல் அப்படியே இருக்கிறது குமரி அனந்தன் பிறந்து வளர்ந்த வீடு.

முன்னாள் நெசவுத் தறிக் கூடம். ‘வில்லுபாட்டுகாரன் வீடு’ என்று ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அந்த வீடு, இருக்கும் வடக்குச் சாலை இப்போது ‘குமரி அனந்தன்’ சாலையாக பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது.

இன்றைக்கும் ஊர்க்காரர்கள் அவர்களது செல்லமான பாஷையில் குமரி அனந்தனைக் கூப்பிடுவது “அப்பாவு” என்றுதான்!

எம்.ஏ. படித்து முடிக்கும் முன்பே கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்வு எழுதியதில் அனந்தனுக்கு வெற்றி. மதுரை மத்தியக் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு உசிலம்பட்டிக்கு மாறினார்.

கூட்டுறவுச் சங்கத்திற்குச் செலுத்தவேண்டிய கடனை வசூலிக்க வேண்டியது இவரது பொறுப்பு. கடனைக் கட்ட முடியவில்லை உசிலம்பட்டியில் இருந்த ஒரு குடும்பத்திற்கு. ஜப்தி அறிவிக்கப்பட்டு அனந்தனும், இதர போலீசாரும் அந்த வீட்டிற்குப் போனார்கள். அங்கிருந்த மாடுகளைப் பிடித்து வரப் போனபோது, அந்த வீட்டுக்காரப் பெண் வளர்த்த மாட்டைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதது அனந்தனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

மாட்டையும் அந்தப் பெண்ணையும் பிரிக்க முயன்றவர்களைத் தடுத்து அலுவலகத்திற்கு வந்தபோது அனந்தனின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன.

“ஏன் ஜப்தி செய்யவில்லை?” என்று மேலதிகாரிகள் கேட்டதும், வேலையை ராஜினாமா செய்தார். அதுவரை வாங்கிய சம்பளத்தைக் கட்டச் சொன்னார்கள்.
ஒருவழியாகக் கட்டிவிட்டு மதுரையிலிருந்த டுட்டோரியல் காலேஜில் தமிழாசிரியராகப் போய்ச் சேர்ந்தார். ஒரு வருஷம்தான். பிறகு அம்மா பெயரில் ‘தங்கம்’ தனிப் பயிற்சிக் கல்லூரியைச் சாத்தூரில் ஆரம்பித்து விட்டார்.

அதோடு வெளியிடங்களுக்குப் பேச போய்க் கொண்டிருந்தார் அனந்தன். வடக்கன் குளத்தில் ‘சங்கு’ கணேசன் கட்டியிருந்த அதிசய விநாயகர் கோவிலுக்குப் போய்ப் பேசப் போயிருந்தார். பேசினதும் அனந்தன் பேச்சைக் கேட்ட கணேசன் அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார்.

“மருமகனாக்கி விடலாமா?” என்று அவருடைய மனதில் ஒரு யோசனை.
மேலும் விசாரிக்க சாத்தூருக்கு கணேசன் போனபோது, கடுமையான மழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது. நேரே டுட்டோரியலுக்குப் போனால் அங்கு வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி மண்வெட்டி எடுத்து மழைநீர் உள்ளே வராமல் இருக்க மாணவர்களுடன் மண் அள்ளிக் கொண்டிருந்தார் அனந்தன்.

‘பிளைமூத்’ காரில் மாமனார். மண்வெட்டியுடன் மருமகன். மாப்பிள்ளை பிடித்துப்போய் வடக்கன் குளத்திலேயே திருமணம்.

“திருமணமானதும் திரும்பவும் மதுரைக்கு குடும்பத்துடன் வந்து விட்டார் அனந்தன். வெற்றி தனிப் பயிற்சிக் கல்லூரியில் வந்து தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது அவருடன் நானும் பணிபுரிந்தேன்.

வகுப்புகளுக்குச் செல்வதுடன் பட்டிமன்றங்களுக்குக் குன்றக்குடி அடிகளாருடன், சாலமன் பாப்பையாவுடன் சேர்ந்து போவோம். அனந்தன் தனிச் சொற்பொழிவாகவும் பேசுவார். அப்போது மதுரையில் இருந்தபடி அனந்தன் ஆரம்பித்த பத்திரிக்கை ‘குமரி’ வாரம் இருமுறை வரும் இதழ். கலை இலக்கியத்தைத் தாங்கி இரண்டு வருடங்கள் வந்த அந்தப் பத்திரிகையைப் பல சிரமங்களுக்கு இடையே நடத்தினார்.

இவரது மனைவியின் நகைகள் பலவற்றை விற்று நடத்திய ‘குமரி’ பத்திரிகையால் இவருக்கு எக்கச்சக்க நஷ்டம். ஒரே லாபம், ‘குமரி’ என்கிற பெயர் அனந்தனுடன் இணைந்து இவர் குமரி அனந்தன் ஆனதுதான்.”- 35 வருஷத்திற்கு மேலான நட்புடன் அனந்தனைப் பற்றிச் சொல்கிறார் புலவர் மு.சதாசிவம்.
நஷ்டம் தாங்காமல் குமரி பத்திரிகையை நிறுத்தி இருந்த நேரம்.

மதுரை கீழமாசி வீதியில் ஒரு கூட்டம். குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியில் சுற்றுப்பயணம் செய்து வந்த காமராஜர் வர பேச்சை நிறுத்துகிறார் அனந்தன். பேச்சைத் தொடரச் சொல்கிறார் காமராஜர். ஈ.வி.கே.சம்பத்துடன், அனந்தனின் பேச்சை நிதானித்துக் கேட்கிறார் காமராஜர்.

கிளம்பின பிறகு காரில் பயணித்தபடியே அனந்தனைப் பற்றி சம்பத்திடம் விசாரிக்கிறார். கொஞ்ச நாட்களிலேயே சென்னையிலிருந்து அனந்தனுக்கு அழைப்பு. சென்னைக்குப் போய் திருமலைப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் காமராஜரைச் சந்திக்கிறார்.

“கிருஷ்ணசாமி நாயுடுவைப் போய்ப் பார்” என்று சொல்கிறார் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கிருஷ்ணசாமி நாயுடுவைச் சந்தித்தபோது, “இனிமேல் நீ தான் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்” என்கிறார்.

ஆச்சரியத்துடன் சென்னைக்கு வந்து குடியேறுகிறார் அனந்தன்.
காமராஜரின் இறுதிக் காலத்தில் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த குமரி அனந்தனுடன் பிறந்தவர்கள் 6 பேர். 5 தம்பிகள், ஒரு சகோதரி. அதில் ஒரு தம்பி தான் படிப்படியாக உழைத்து தொழிலும், அரசியலிலும் முன்னேறியவரான வசந்தகுமார்.

இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமுடைய குமரி அனந்தன் பி.எச்.டி. பட்டத்திற்காகப் பதிவு செய்திருக்கிறார். பி.எச்.டி ஆய்வுக்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர்களின் நிலை’.

வீட்டில் ஒரு நூலகம். இன்றும் நூலுடன் அதாவது புத்தகங்களுடன் வாழ்க்கை தொடர்கிறது. எங்கு போனாலும் கைவசம் கொத்தாகச் சில புத்தகங்களை எடுத்துப் போகிறார் அனந்தன்.

பேசும்போது பலதரப்பட்ட அபிநயங்களுடன் குரலை ஏற்றி இறக்கிப் பேசும் குமரி அனந்தனுக்கு ‘தமிழ் மயமான’ குடும்பம். மனைவி கிருஷ்ணகுமாரி, தமிழிசை, அமுதா, தாமரை, ஞானசௌந்தரி என்று நான்கு மகள்கள். சீதன் என்ற ஒரே மகன்.

இதில் தமிழிசை அனந்தனால் பயிற்றுவிக்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தவர்.
“எனக்கு இன்றைக்கு இருக்கிற எல்லாத் தகுதிகளையும் என்னோட ஊரும் அங்கே இருந்த என்னோட உறவினர்களும் தான் உருவாக்கினார்கள். என்னோட மேடைப்பேச்சு துவக்கமானதே அங்கு தானே…” நேசத்துடன் கடந்தகாலம் இழையோடப் பேசுகிறார் குமரி அனந்தன்.

– மணா-வின் ‘நதிமூலம்’ நூலில் இருந்து ஒரு கட்டுரை.

You might also like