நடிகர் நாகேஷ்
நாகேஷ், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர்.
திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள் கழிந்த பின், இந்த ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நாகேஷ் பெற்றிருக்கிறார். நம்மவர் திரைப்படம் அதை பெற்றுத் தந்தது.
ஆனால், “விருது கமல்ஹாசனுக்குத் தான் கிடைத்திருக்க வேண்டும்” என்கிறார் நாகேஷ்.
சிரிப்பையும் சோகத்தையும் சம அளவில் அற்புதமாக வெளிப்படுத்துவதற்கு நாகேஷை விட்டால் வேறு ஆளில்லை. அவரது கோணங்கித்தனம் ரசிகர்களை ஈர்த்தது.
அசட்டுத்தனமாக அவர் உதிர்த்த முத்துக்களின் மூலம் சில நல்ல சேதிகள் மக்களைப் போய் அடைந்திருக்கின்றன. ஆனால் “நான் ஒன்றும் ஜோக்கரல்ல” என்கிறார் நாகேஷ்.
வாழ்வில் சந்தித்த தோல்விகள்தான் அவரது சிரிப்புக்குப் பின்னணி, பசியிலிருந்தும் நிராகரிப்பிலிருந்தும் பிறந்தது அது. இளம்வயதில் அவர் நன்றாகப் படிக்கக் கூடியவர்தான்.
ஆனாலும், வீட்டிற்கு அவர் ‘உதவாக்கரை’. தன் முதல் படமான தாமரைக்குளத்தில் நடித்துவிட்டு சொந்த ஊரான கோவைக்குத் திரும்பியபோது, அவர் அன்னை மறைந்துவிட்டார். அது, எல்லாவற்றையும்விட பெரிய சோகமாகியது.
“இனிமேல் வாழ்க்கையில் சிரிக்கவே மாட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்” என்று அந்த நாட்களை நினைவு கூர்கிறார் நாகேஷ். ஆனால் மீண்டும் அவர் திரைக்குத் திரும்பினார்.
கோவையில் குடியேறிய கன்னட பிராமணரான நாகேஷ், தமிழ்க் காதலர். கம்பனை கரைத்துக் குடித்தவர்.
ரயில்வேயில் அவர் வேலை செய்தபோது சென்னை மேற்கு மாம்பலத்தில் அவர் கண்டகாட்சியை நினைவுபடுத்துகிறார்:
“பஞ்சத்தில் அடிபட்டதைப் போல கிடந்த ஒருத்தன் நாடக வசனங்களை உரக்கப் பேசிக் கொண்டிருந்தான். அது திடகாத்திரமானவனான குகன் பாத்திரத்துக்கான வசனம்!
இதைப் பார்த்த நான் நேராக ரயில்வே பண்பாட்டு மன்றத்தில் போய் நாடகத்தில் எனக்கும் ஒரு வேடம் வேண்டும் எனக் கேட்டேன்.
வயிற்றுவலியால் அவதிப்படும் நோயாளிக்கான, ஒரே ஒரு நிமிடம் வந்துபோகும்வேடம் கிடைத்தது.
ஆனால் நாடக மேடையில் அது 7 நிமிடம் நீடித்தது. அந்த நாடகத்திற்கு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அது எனக்கு ஒரு திருப்புமுனையாகியது.
காதலிக்க நேரமில்லை-யில் அவர் சினிமாக் கதை சொல்வது, திருவிளையாடலில் தருமியாக வந்து கலக்கியது, சர்வர் சுந்தரத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக மனதைப் பிசைந்தது, மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடித்தே பார்வையாளர்களின் வயிற்றை வலிக்கச் செய்தது, நம்மவரில் புத்திர சோகத்தைக் காட்டி கண்களைக் குளமாக்கியது. பன்முகப்பட்ட நடிப்பில் நாகேஷ் ஓர் அசகாய சூரர்.
“எனது தொழிலையும் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை” என்கிறார் அவர். இன்று, வீட்டில் நாகேஷ் ஒரு ஜாலியான தாத்தா. ரமண மகரிஷி, இயேசு, விநாயகர் ஆகியோரின் ஒட்டுமொத்த பக்தர்.
தற்காலத்தில் நகைச்சுவை உணர்வு குறைந்து வருவதைப் பார்த்து அச்சமடைகிறார்.
எதிலும் ஒழுங்கை, அழகை கடைபிடிப்பதும் நாகேஷின் பாணி. தான் சிரிக்காமல், மற்றவர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் நாகேஷ் அமைதியாகச் சொல்கிறார்: “நான் ஒரு நல்ல மாணவன்.”