சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் – துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கர்த்தூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிடுகின்றன. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.
சூடான் முழுவதும் ஆங்காங்கே நான்காவது நாளாக சண்டை நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு 200 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கர்த்தூமில் உள்ள விதிகளில் இன்னும் ஏராளமான உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
இதனிடையே ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.