ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் டேவன் கான்வே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 52 ரன்கள் விளாசினார். ரகானே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ், வாய்னே பார்னெல், விஜயகுமார் வைஷாக், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல், டூ பிளசிஸ் அதிரடியில் மிரட்டினர். மேக்ஸ்வெல் 36 பந்தில் 76 ரன்களும், டூ பிளசிஸ் 33 பந்தில் 62 ரன்களும் எடுத்தனர்.
தினேஷ் கார்த்திக் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.