வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள்.
அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது என்று உணர்த்துவார்கள்.
தமிழ் திரையுலகில் பாகவதர் காலம் தொட்டு அத்தகையவர்களின் வெற்றிகள் தொடர்ந்து வருகிறது.
வெற்றிகரமான நடன வடிவமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கி இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல அவதாரங்களை வெளிக்காட்டிய ராகவா லாரன்ஸும் அவர்களில் ஒருவர்.
அவரது காஞ்சனா படங்கள் படைத்த வசூல் சாதனை மிகப்பெரியது. அந்த வரிசையில், தற்போது ‘ருத்ரன்’ படம் வெளியாகப் போகிறது.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முழுக்க முழுக்க ஆக்ஷன் நாயகனாகத் தோன்றியிருக்கிறாராம். அதற்கு ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைக்கும்?
நம்ப முடியாத உயரம்!
சென்னை ராயபுரத்தில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ், எண்பதுகளின் இறுதியில் சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்தவர்.
அப்போதே நன்றாக நடனம் ஆடுவார். படப்பிடிப்புத் தளங்களிலும் அதனைச் செய்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு அந்த விஷயம் தெரிய வந்தபோது, லாரன்ஸ் நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சேர்வதற்கு உதவி செய்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, பிரபுதேவா மற்றும் ராஜு சுந்தரம் குழுவில் லாரன்ஸ் பணியாற்றியதும், இரண்டே ஆண்டுகளில் குரூப் டான்சராக இருந்து டான்ஸ் மாஸ்டராக உருமாறியதும் செவி வழிச் செய்திகள் தான்.
சிரஞ்சீவியின் உதவியினால், தெலுங்கு மொழியில் தயாரான ‘ஹிட்லர்’ படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார் லாரன்ஸ்.
தமிழில், சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ அதனைச் சாதித்தது. ‘மகா கணபதிம்’ பாடலைத் தொடர்ந்து ‘சொல்லு தலைவா’, ‘ஏலே அழகம்மா’, ’சுப்பம்மா சுப்பம்மா’, ‘நான் ரெடி நீங்க ரெடியா’ போன்ற படங்களில் நடனமாடித் தன் முகத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தார்.
‘மாயா மாயா’ பாடலில் ரஜினிகாந்தை ஆட வைத்தவர், ‘அண்ணாமலை தம்பி’ மற்றும் ‘தாம்தக்க தீம்தக்க’ பாடல்களில் விஜய்யை சுற்றிச் சுழல வைத்தார்.
அதே நேரத்தில் ’பார்த்தேன் ரசித்தேன்’, ‘பார்த்தாலே பரவசம்’ மூலமாக நடிகராகவும் முத்திரை பதித்தார். அதன் தொடர்ச்சியாகத் தமிழில் ‘அற்புதம்’, ‘ஸ்டைல்’ படங்களில் நாயகனாகவும் தோன்றினார்.
இதெல்லாமே 1997 முதல் 2004ஆம் ஆண்டுக்குள் நிகழ்ந்தன என்று சொல்லும்போது, நிச்சயம் நம் விழிகள் விரியும். அந்த காலகட்டத்தில் ராகவா லாரன்ஸ் அடைந்த உயரம் எவரும் நம்ப முடியாத வகையில் அமைந்தது.
2004இல் நாகார்ஜுனா, ஜோதிகா, சார்மியைக் கொண்டு ‘மாஸ்’ படத்தைத் தெலுங்கில் இயக்கினார் ராகவா லாரன்ஸ்.
அதுவரை கொஞ்சம் வித்தியாசமாக நடனமாடுவார், நடனக் காட்சியை வடிவமைப்பார் என்ற பெயர்தான் அவருக்கிருந்தது. ஆனால், அவரால் முழுநீள ஆக்ஷன் படம் எடுக்க முடியும் என்பதை அறிந்தபோது திரையுலகமே ஆச்சர்யப்பட்டுப் போனது.
எடுபடுமா ஆக்ஷன் அவதாரம்?
2006ஆம் ஆண்டு தனது நடன குரு பிரபுதேவா உடன் சேர்ந்து ‘ஸ்டைல்’ எனும் தெலுங்கு படத்தை நடித்து இயக்கினார் லாரன்ஸ். நடனத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்றபோதும், அதிலும் கொஞ்சம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருந்தது.
ஆனால், மீண்டும் நாகார்ஜுனா உடன் இணைந்த ‘டான்’ படம் என்.டி.ஆர். காலத்து திரைக்கதை அமைப்பால் சரிவைச் சந்தித்தது.
அந்த படத்தில், நாகார்ஜுனாவின் சகோதரராகப் படம் முழுக்க வரும் பாத்திரம் அவருடையது.
2012இல் பிரபாஸை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய ‘ரிபெல்’ படமும் அதே கதிக்கு ஆளானது. அதேபோல, இயக்குனர் சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படம் தியேட்டர்களில் வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால், அதிலுள்ள கதாபாத்திரங்கள், திரைக்கதை பாணியைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட ‘காஞ்சனா’ பெரும் வெற்றியை ஈட்டியது.
இரண்டு படங்களிலுமே கோவை சரளாவுக்கான முக்கியத்துவம், நாயகி உடனான காதல் பகுதி, கவர்ச்சி நிறைந்து வழியும் பாடல்கள், பேய் ஓட்டும் வழிமுறைகள் என்று பல ஒற்றுமைகள் இருந்தன.
அடுத்தடுத்த பாகங்களிலும் கூட இதனைத் தொடர்ந்தார் லாரன்ஸ். தற்போது வரை இதன் மூன்று பாகங்கள் வெளியாகிப் பெரும் லாபத்தையும் பெயரையும் நாயக அந்தஸ்தையும் லாரன்ஸுக்கு சம்பாதித்துத் தந்துள்ளது.
’முனி’ சீரிஸ் என்றழைக்கப்படும் இப்படங்களில் அவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாகவே தோன்றினார்; அதற்கு ரசிகர்களும் வரவேற்பு தந்தார்கள். ஆனால், வேறு வகைமை படங்களில் லாரன்ஸ் தோன்றியதை ரசிகர்கள் வெகுவாக வரவேற்கவில்லை.
தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த படங்களில் ‘பாண்டி’ மற்றும் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ இரண்டும் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.
பி மற்றும் சி சென்டர் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ‘ராஜாதி ராஜா’வில் நடித்த நினைவுகள், இன்று அவர் மனதில் மிச்சமிருந்தால் ஆச்சர்யம் தான்.
‘காஞ்சனா’ வரிசைப் படங்களால் ஆக்ஷன் அந்தஸ்தை எளிதாக அடைந்த ராகவா லாரன்ஸ், வழக்கமான மசாலா படங்களில் சோபிக்க முடியாமல் போனது ஏன்? இதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தென்படலாம்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நாயகர்கள் ரொமான்ஸ், காமெடி, குடும்ப சென்டிமெண்ட் படங்களில் நடித்தபிறகே ஆக்ஷன் பாதையில் காலடி வைத்தனர். அதனால், அவர்களது படங்களில் ‘பில்ட் அப்’ காட்சிகள் கண்டு எவரும் முகம் சுளிக்கவில்லை.
அந்த வரவேற்பு இன்றும் தொடர்கிறது. ஆனால், அதே போன்ற ‘பில்ட் அப்’ ஷாட்கள், காட்சிகளில் மற்ற நடிகர்கள் தோன்றினால் ரசிகர்கள் ஏற்பதில்லை.
அதனை உணராமல் திரையில் தோன்றிய பல நடிகர்கள் ரசிகர்களின் அதிருப்தியைச் சந்தித்திருக்கின்றனர். லாரன்ஸுக்கும் அது பொருந்தும்.
டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் போல, தன்னுடைய படத்தைத் தானே நடித்து இயக்கும் வழக்கம் லாரன்ஸிடம் இருந்து வருகிறது. ஆனால், ஹாரர் தவிர்த்து வழக்கமான கதையம்சம் கொண்ட படங்களை அவர் இயக்கி நடிக்கவே இல்லை.
அதனாலேயே, வேறு இயக்குனர்களின் படங்களில் அவர் தலைகாட்டுவதை வரவேற்கத் தயங்குகின்றனர் ரசிகர்கள்.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ படங்களே இதற்கான உதாரணம்; இத்தனைக்கும் இந்த படங்கள் தெலுங்கு, கன்னட மொழிகளில் பெருவெற்றியைப் பெற்ற படங்களின் ரீமேக் ஆக அமைந்தன.
மாற்றம் வேண்டும்!
திரைத்துறை செயல்பாடு தவிர்த்து, சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் ராகவா லாரன்ஸின் செயல்பாடுகள் கொண்டாடப்படுகின்றன. அது, சமூகத்தில் அவருக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில், அவர் நடிக்கும் படங்கள் இளைய தலைமுறையினரிடத்தில் உருவாக்கும் மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கேற்ப, அவர் நடிக்கும் படங்களின் உள்ளடக்கமும் அமைய வேண்டும்.
வரும் நாட்களில் லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன. அவை எல்லாமே ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகமாக உருவாக்கப்படுகின்றன.
அப்படங்களில் லாரன்ஸின் பாத்திரங்கள் இதுவரை பார்த்திராதவையாகத் திரையில் வெளிப்படும்போது நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பு வேறுவிதமாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது வெளியாகும் ‘ருத்ரன்’ படமும் வித்தியாசமான கூறுகளைக் கதையில் கொண்டிருக்கும் என்று நம்புவோம்.
நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒரே அடியில் பல அடியாட்களை அந்தரத்தில் பறக்கவிடும் தெலுங்குப் படங்களைப் பிரதியெடுக்கும் வகையில் ‘ருத்ரன்’ அமையலாம்;
ஒருவேளை அத்தகைய ‘கோங்குரா சட்னி’ வகையறா ட்ரீட்மெண்ட் திரைக்கதையில் இருந்தால் ரசிகர்களின் மனம் பப்படமாகிவிடும்; ஏனென்றால், தெலுங்கு ரசிகர்களே ‘புஷ்பா’ போல வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தரும் ஆக்ஷன் படங்களையே விரும்புகிறார்கள்.
அப்படியிருக்க நம்மவர்களின் ரசனையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆதலால், நாம் வேண்டும் மாற்றங்கள் ‘ருத்ரன்’ படத்தில் நிறைந்திருக்கட்டும்!
– உதய் பாடகலிங்கம்