அம்பேத்கருக்கு நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி பயின்றார்.
கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்திலும் மேல் படிப்பு படித்தார். 1923-ல் வக்கீல் தொழில் மேற்கொண்டார். 1930-32-ல் லண்டனில் கூடிய இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாக அம்பேத்கர் கலந்து கொண்டார்.

அப்போது தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள்.

ஆனால், காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார்.

இது பற்றி 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும்” என்று நேரடியாகச் சாடினார்.

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதன்பிறகே அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன்பிறகு சமூக மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அம்பேத்கர், 1951, செப்டம்பரில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

ஹிந்து மத சீர்திருத்த மசோதாவை அப்படியே மொத்தமாக நிறைவேற்றாவிட்டாலும், அதை ஒப்புக்கொண்டு திருமணம், விவாகரத்து ஆகிய பகுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அதுவும் நிறைவேறாமல் போகவே மந்திரி சபையிலிருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்தார்.

1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி புதுடெல்லியில் காலமானார் டாக்டர் அம்பேத்கர். மூன்று வருட காலம் முனைந்து மகத்தான அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த டாக்டர் அம்பேத்கருக்கு பாரத நாடு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

– நன்றி: ஆனந்த விகடன் 17.11.1963 இதழ்

You might also like