கணேசன் முதல் காதல் மன்னன் வரை!

– ஜெமினியின் பிளாஷ்பேக்

ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது.
*

“ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மேக்கப் டெஸ்டும் மூவி டெஸ்ட்டும் போட்டுப் பார்த்துவிட்டு ஜெமினி கதை இலாகாவினர் இந்த இளைஞனை கதாநாயகனாக ஆக்க இயலாது என்று கைவிட்டுவிட்டார்கள்.

அவர் புதுக்கோட்டைவாசி. அங்கு கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர். நல்ல குடும்பம். வசதியான வீடு, திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் அப்போதே இருந்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அதுவும் அந்த மூன்று பெண் குழந்தைகளுக்கு வயதிலிருந்து பத்திலிருந்து பதினான்கிற்குள்.

‘காதல் மன்னன்’ உருவானது இப்படித்தான்.
ஜெமினி ஸ்டூடியோவில் பல உயர் பதவிகளில் ஒன்றில் கே.ராம்நாத் என்ற கேமராமேன். மேன் என்று சொல்லக்கூடாது கேமரா மேதை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தக் காலத்தில் அவர் கேமரா, டைரக்ஷன் என்று படத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பல அற்புதமான படங்களை (ராம்நாத் – சேகர் என்ற பெயர்களில்) தயாரித்து தென்னிந்திய படங்களுக்கு தனி மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

கே.ராம்நாத் புதுக்கோட்டை இளைஞருக்கு கதாநாயக வேலை இல்லாவிட்டாலும் இவருக்கென்றே ஒரு இலாகாவை (கேஸ்டிங்க் அசிஸ்டண்ட்) ஏற்படுத்தி ஒரு அறை, ஓர் உதவியாளர், ஒரு ஆபீஸ் பாய் என்று உருவாக்கிக் கொடுத்தார்.

அவருடைய வேலை இதுதான். தினந்தோறும், “எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம். இத்துடன் என் போட்டோவும் அனுப்பி உள்ளேன். எனக்கு தயவுசெய்து ஒரு சான்ஸ் தாருங்கள்” என்று இதுபோன்ற கடிதங்கள் வரும்.

இவைகளை அகர வரிசைப்படி அடுக்கி வைத்து, காட்சிக்குத் தகுந்தபடி, டைரக்டர்களும், புரோக்கர்களும் ஆபீஸர்களிடம் சொல்வார்கள். இவர் கடிதங்களையும் போட்டோக்களையும் பார்த்து, நிர்வாக ஆபீசுக்கு அனுப்பி விடுவார். இவர் கொடுத்த விலாசங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து விடுவார்கள்.

அக்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோவிலேயே எம்.கே.ராதா தான் மிக அழகானவர். அவர் ‘தாசி அபரஞ்சி’ என்ற படத்தில் (ஜெமினி படம்) விக்ரமாதித்த மகாராஜாவாக அற்புதமாக நடித்தார். அது முதல் ராதாவை எல்லோரும் மகாராஜா என்றே அழைப்பார்கள்.

ராதாவிற்கு அடுத்தபடி புதுக்கோட்டை கணேசன் தான் அழகானவர் என்று பேசப்பட்டவர்.

‘மிஸ் மாலினி’ படத்தில் முதல் முறையாக ஒரு நாடகத்தை டைரக்ட் செய்யும் டைரக்டராக நடித்தார்.

இந்தப் பாத்திரத்திற்கு உதவியாளராக வந்து நாடக டைரக்டரிடம் இப்படி வசனம் பேசுவார், “சார் இன்று ஹவுஸ்ஃபுல் சார். எல்லா கிளாஸ் டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன சார்” என்று சந்தோஷமாகப் பேசுவார் புதுக்கோட்டை ப்ரொஃபஸர் கணேசன்.

படத்தில் மொத்தம் இவர் வரும் காட்சிகள் நான்கிற்கு மேல் இராது. அதே சமயம் நாகையா நடித்த ‘சக்கரதாரி’ என்ற ஒரு பக்தி படம். ‘பக்த கோராகும்பர்’ என்ற கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம் இது. கணேசனுக்கு இரண்டாவது படம். இதில் கிருஷ்ணனாக நடித்தார் கணேசன்.

இந்தப் படம் வெளிவந்ததும் கிருஷ்ண வேஷதாரியை எல்லா பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. 1947 சுதந்திரத்திற்குப் பின் ராம்நாத், சேகர் இருவரும் ஜெமினி ஸ்டூடியோவை விட்டு விலகி வெளியில் வந்ததும் ‘தாயுள்ளம்’ என்ற ஒரு படம் எடுத்தார்கள். அதில் கதாநாயகன் மனோகர். ஒரு சிறிய வில்லன் மாதிரி ஒரு வேடத்தில் கணேசனுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள் ராம்நாத்-சேகர்.
கணேசனும் ஜெமினி ஸ்டூடியோவை விட்டு தைரியமாக வெளியே வந்துவிட்டார்.

பின்னர் மாடர்ன் தியேட்டர்சாரின் ‘மகேஸ்வரி’ இன்னும் சில படங்கள் நாராயணன் கம்பெனியாரின் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கணேசனை கதாநாயகனாக தேர்வு செய்தார்கள்.

அதில் ஒருவருக்கு சந்தேகம். கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூ வராத நேரம். அதே சமயம் கணேசன் நடித்த எந்தப் படமும் தோல்வியும் அடையவில்லை.

இதை அரைகுறையாகக் கேள்விப்பட்ட கணேசன் அவர்கள் எடுக்கப்போகும் ஒரு காட்சிக்கான மேக்கப், காஸ்டியூம் எல்லாம் அணிந்து கொண்டு, அப்போது அவரிடம் இருந்த ஒரு சிறிய காரை தானே ஓட்டிக் கொண்டு, நாராயணன் கம்பெனியின் முக்கியஸ்தரான பட்டண்ணாவிடம் போய் நின்று ‘குட் மார்னிங்’ என்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பட்டண்ணா திகைத்து, “யார் நீ?” என்று ஆங்கிலத்தில் கேட்கவும், கணேசன் சிரித்தபடியே பட்டண்ணாவின் கைகளைக் குலுக்கியபடி பேசியதும், கணேசன் மீதிருந்த அவநம்பிக்கை பறந்துவிட்டது.
கணேசன் கதைப்படி ஒரு கூன் விழுந்த குருபியாக வரவேண்டிய காட்சிக்கான மேக்கப்புடன் போய் அவர்களைத் திகைக்க வைத்த படம் தான் மிகப் பிரமாத வெற்றி அளித்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’.

பிறகு ‘மனம் போல் மாங்கல்யம்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என பல ‘ம’ வரிசைப் படங்கள் பெற்ற வெற்றி. இச்சமயம் வாகினியின் ‘மிஸ்ஸியம்மா’ சாவித்திரி, கணேசன் ஜோடியுடன் சமூகப்படம் மகா வெற்றி.

இந்தப் படம் ஓடிய பல தியேட்டர்கள் பிரசவ ஆஸ்பத்திரியாக மாறின. (கர்ப்பிணிகள் படத்தில் வந்த ஹாஸ்ய காட்சிகளைப் பார்த்ததால்) இது உண்மை. இந்தப் படத்தின் (மிஸ்ஸியம்மா) மூலம் ஜெமினி கணேஷ் – சாவித்திரி கணேஷ் ஆகி பல படங்களில் காதல் ஜோடியாகவே நடித்தனர்.

இச்சமயம் சாவித்திரிக்கு உறவினர் (கார்டியனாக) இருந்த ஒருவர் இவர்களைப் பிரிப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட்டார். முடியவில்லை.
இதற்குப் பிறகு சட்டப்படி சாவித்திரி – சாவித்திரி கணேஷ் என்று பகிரங்கமாக அறிவித்தார். தனக்காக காயமடைந்த டிரைவரை கடைசிவரை தன்னிடமே வைத்திருந்தார் ஜெமினி.

எந்த ஜெமினி கதை இலாகா இவரை கதாநாயகனாக ஆக்க இயலாது என கை விரித்ததோ, அதே ஜெமினி ஸ்டூடியோ கணேஷை ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

‘வாழ்க்கைப் படகு’ என்ற படத்தில் கதாநாயகனாக அவர் நடித்து 25 வாரங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இன்னும் சில படங்கள் ஜெமினியில் எடுக்கப்பட்டன.

ஜெமினி கணேசனும் நடிகர் திலகமும் சேர்ந்து நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. ஸ்ரீதர் ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினியை ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஜெமினிக்கு உடல்நலக் குறைவு. காய்ச்சல் வந்து படப்பிடிப்பு ஒரு வாரம் தாமதமானது.

ஸ்ரீதர் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார். ஜெமினியின் உடல் சரியாகவில்லை.

ஜெமினி ஸ்ரீதரை அழைத்தார், “என்னால் தான் உங்களுக்குத் தாமதம், நஷ்டம். ஆகையால் என்னைத் தவிர்த்து, வேறு யாரையாவது போட்டுப் படத்தை முடித்து விடுங்கள்” என்று பலமுறை சொன்னார்.

அதற்கு ஸ்ரீதர், “எத்தனை காலமானாலும் சரி. காத்திருக்கிறேன். ‘கல்யாணப் பரிசு’க்கு நீங்கள் தான் ஹீரோ. இதில் மாற்றமே இல்லை” என்றார்.

பிறகு உடல் நலம் சரியாகி நடித்த ‘கல்யாண பரிசு’ இமாலய வெற்றி பெற்றது.
அந்தகால கட்டத்தில் இவருக்கு வர வேண்டிய பணம் முதலாளிகளிடம் இருந்து சுமார் 2 கோடி வரை பாக்கி என்று ஜெமினி கணேசனே ஜெமினி ஸ்டுடியோவில் புரோகிராம் ஆபிஸராக வேலை பார்த்து வந்த, பி.வி.எஸ்.மணி என்பவரிடம் கூறியிருக்கிறார்.

பிவிஎஸ் மணி எனக்கு நண்பர். ஜெமினி கணேசன், ஜெமினி ஸ்டூடியோவில் கேஸ்டிங் அசிஸ்டண்ட்டாக பணியில் இருந்த சமயம் ஒரு நடிகை தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி தன்னுடைய போட்டோவும் அப்ளிகேஷனும் அனுப்பினார்.

இதையும் வழக்கம்போல் பார்த்துவிட்டு அகர வரிசையில் வைத்து விட்டார்கள். (இந்த சமயம் தெலுங்கில் ஒரு படம் பல்லாவரம் ஜனதா டாக்கீஸில் பிரமாதமாக ஓடியது.

அதில் கதாநாயகியும் அவளுடைய தோழிகளும் காரில் பாடிக் கொண்டே போகும்படியான ஒரு காட்சியில் ஒரு துணை நடிகையாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் பெயர்தான் ‘சம்சாரம்’. அதை அப்படியே தமிழில் சம்சாரம் என்ற பெயரில் வாசன் அவர்கள் ஒரு காட்சியைக் கூட மாற்றாமல் ஹிந்தியிலும் எடுத்தார்.

இரு மொழிகளிலும் படம் மகத்தான வெற்றி பெற்றது.
அவர்தான் சாவித்திரி.

சென்னை, அண்ணா சாலையில் காஸ்மோபாலிடன் கிளப்பில் அங்கத்தினராக மிகவும் கடினம். அக்காலத்தில் மிக செல்வாக்குப் பெற்ற ஒரு கதாநாயக நடிகர் இந்தக் கிளப்பில் அங்கத்தினராக விருப்பம் தெரிவித்து சபா காரியதரிசிக்குக் கடிதம் எழுதினார்.

காரியதரிசியின் பதில் இப்படி வந்தது, “மன்னிக்கவும், இந்த காஸ்மோபாலிடன் கிளப்பின் விதிகள் தங்களை அங்கத்தினராக அனுமதிக்கவில்லை. மீண்டும் மன்னிக்கவும்.”

அப்படி காஸ்மோபாலிடன் கிளப்புக்காக விண்ணப்பித்தவர் ஜெமினி கணேஷ்.
இது மட்டுமில்லாமல் 1961-இல் இங்கிலாந்து இளவரசியும், அவருடைய கணவர் பிலிப்ஸ் கோமகனும் இந்தியப் பயணத்தின் போது, சென்னை ராஜாஜி மண்டபத்தில், இங்கிலாந்து மன்னர் தம்பதிகளுக்கு ஒரு வரவேற்பு. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

இந்தத் தேநீர் விருந்தில் ஜெமினி கணேஷ் ஒருவர்தான் சினிமா உலகம் சார்பாக அழைக்கப்பட்டவர்.

ஏதோ ஒரு படவிழாவில் இரு கணேசன்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஜெமினி கணேசன் பேசும்போது சிவாஜியைப் பற்றிய பேச்சு வந்தது.

“சிவாஜியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு… அமைதியாக சிரித்தபடியே “அந்த மாபெரும் நடிகரின் பெயரே எனக்கும் இருப்பது என் பாக்கியம்” என்றார்.

ஜெமினியை ஸ்டில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த சாரி என்பவரின் உதவியாளர் அமிர்தம் என்பவரின் திருமணத்திற்கு ஜெமினி கணேசன் வந்திருந்தார்.

அச்சமயம் நான் அருகில் போய் “நமஸ்காரம் அண்ணா” என்று சொல்லிய படியே, “நினைவிருக்கிறதா?” என்று கேட்டதும் “சரியா போச்சு. உங்களை எல்லாம் மறக்க முடியுமா” என்றார்.

அவரை ஜெமினி மெஸ்ஸில் இருந்து நான் பல ஆண்டுகள் பார்த்துப் பேசி, தினம் சாப்பாடு, டிபன் எல்லாம் பரிமாறி இருக்கிறேன். பின்னர் அவர் விலகி பெரிய ஹீரோவாக காதல் மன்னனாகவும் பல கோடி ரூபாய்க்கு அதிபதியான பிறகும்கூட, என்னைப் போன்ற ஒரு சாதாரண மெஸ் தொழிலாளியைக் கூட மறக்காமல் இருந்தது சினிமா உலகில் காணமுடியாத ஒன்று.

– ஏ.என்.எஸ்.மணியன்

நன்றி: புதிய பார்வை ஏப்ரல் 2005

You might also like