தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எதையும் அனுமதிக்க முடியாது!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும், கழிவுகளை நீக்க அனுமதிக் கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கழிவுகளை நீக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என ஆலை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான ஜோசப் அரிஸ்டாட்டில்,

“ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர்கள் அகற்றவில்லை.

ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு தடையாக இல்லை. அரசு கொடுத்த கால அவகாசத்தையும் ஆலை தரப்பில் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்றுத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்த உத்தரவில், “ஸ்டெர்லைட் விவகாரத்தை பொருத்தவரை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் உயர்மட்டக் குழு அனுமதி வழங்கியுள்ளபடி மட்டுமே கழிவுகளை நீக்க வேண்டும். அது ஆலையின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்காது.

அதுசார்ந்த எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்றுத் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

You might also like