ஆகஸ்ட் 16, 1947 – திரையில் ஒரு இலக்கியம்!

இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தியாக பூமிக்கு முன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உட்பட மிகச்சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன.

உண்மைக் கதைகளாகவோ அல்லது சில தகவல்களின் அடிப்படையில் அமைந்த புனைவுகளாகவோ அவை இருந்திருக்கின்றன.

பெரும்பாலும் அவற்றில் வழக்கமான கமர்ஷியல் பட உள்ளடக்கம் இருக்காது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணம் தவிடுபொடியாகி வருகிறது.

தெலுங்கு மசாலா படங்களுக்குச் சவால் விடும் வகையில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் காட்டப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ ட்ரெய்லர் கூட, அது சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்த கமர்ஷியல் படம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.

இப்படம் நம் காதில் பூ சுற்றுகிறதா அல்லது தேசப்பற்றை உணரச்செய்யும் நேர்த்திமிக்க படைப்பாக விளங்குகிறதா?

செங்காட்டு பூமியிலே..!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்வதாக நீள்கிறது இப்படத்தின் கதை.

மெட்ராஸ் மாகாணத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புளியங்குடி அருகே இருக்கும் மலைப்பிரதேசம் செங்காடு. அங்கு ஒரு பருத்தி நூல் ஆலையொன்றை நடத்தி வருகிறார் ஆங்கிலேய அதிகாரி ராபர்ட் கிளைவ் (ரிச்சர்ட் ஆஸ்டன்).

அங்குள்ள மனிதர்களை 16 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்குவதன் மூலமாக மட்டுமே அதிகளவில் உற்பத்தியைச் செயல்படுத்துகிறார் ராபர்ட்.

அவ்வாறு வேலை செய்ய வைப்பதற்காகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள்கிறார்.

அங்கிருக்கும் ஜமீன் (மதுசூதன் ராவ்) குடும்பத்தினரும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் கரிகாலனும் அதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.

ராபர்ட்டின் மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா), செங்காட்டில் இருக்கும் பெண்களைச் சீரழிப்பதையும் காட்டுக்குள் சென்று வேட்டையாடுவதையும் தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அவரது கொடுமைகளுக்கு அஞ்சி, சிலர் தங்களது பெண் பிள்ளைகளைக் கொன்று விடுகின்றனர்.

ஜமீன் கூட தனது மகள் தேன்மொழி (ரேவதி) இறந்துவிட்டதாக நாடகமாடுகிறார். மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்த்து வருகிறார்.

ஜமீன் வீட்டில் வேலை செய்துவரும் பரமனுக்கு (கௌதம் கார்த்திக்) அந்த உண்மை தெரியும். அவர் தேன்மொழியை ஒருதலையாகவும் காதலிக்கிறார்.

ஒருநாள் தன் காதலைத் தேன்மொழிக்கு தெரியப்படுத்த முனையும்போது, புளியங்குடி ஜமீன் வாரிசோடு அவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

தன் காதலை மனதுக்குள்ளேயே புதைக்கும் பரமன், தேன்மொழி நலமாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், தேன்மொழி உயிரோடிருக்கும் விஷயம் ஜஸ்டினுக்கும் ராபர்ட்டுக்கும் தெரிய வருகிறது.

ஜஸ்டின் கொடுங்கரம் நீள்வதற்கு முன்பாக, தேன்மொழியை உயிரோடு சமாதி செய்யும் முடிவுக்கு வருகிறார் ஜமீன்.

ஜஸ்டினோ தேன்மொழியை அடைந்தே தீர்வதென்ற முடிவில் இருக்கிறார்.

இந்தச் சூழலில், சுதந்திரத்திற்குப் பிறகான நூல் ஆலையின் செயல்பாடு குறித்து விவாதிக்க ராபர்ட்டை புளியங்குடிக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளும் நடக்கிறது.

ஆனால், தேன்மொழி ஜஸ்டின் வசமாகும் வரை இந்தியா சுதந்திரமடைவது குறித்த சேதி ஜமீனுக்கோ, செங்காட்டு மக்களுக்கோ தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ராபர்ட்.

ஒவ்வொரு பாத்திரமும் நேர்கோடாகத் தன் பயணத்தைத் தொடர, திடீரென்று ஒரு திருப்பம் அனைத்தையும் கலைத்துப் போடுகிறது.

ஜஸ்டின் பிடியை மீறி தேன்மொழியைப் பரமன் காப்பாற்றினாரா? புளியங்குடி சென்ற ராபர்ட் எப்போது செங்காடு திரும்பினார்? அதற்குள் இந்தியா சுதந்திரமடைந்த விஷயம் அங்குள்ள மக்களுக்குத் தெரிய வந்ததா என்பதைச் சொல்கிறது ‘ஆகஸ்ட் 16 1947’.

ஆகஸ்ட் 15 அன்றே இந்தியா முழுவதும் கொண்டாட்டம் நிறைந்தாலும், எவ்விதத் தொடர்புமற்று தனித்த தீவு போன்றிருக்கும் செங்காட்டு பூமியை ஒருநாள் தாமதமாகவே அந்தச் சேதி வந்தடைகிறது என்பதே இப்படத்தின் ஆதாரம்.

அசத்தல் மேக்கிங்!

ஆகஸ்ட் 16 1947 படத்தின் முதல் சிறப்பம்சம், ஒவ்வொரு பிரேமையும் காட்சிப்படுத்தியிருக்கும் என்.எஸ்.பொன்குமாரின் மேதமை.

நிச்சயமாக, இப்படம் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் சார்ந்து உருவாக்கப்பட்ட புனைவுகளுள் முக்கியமானதாக இருக்கும்.

முதல் பத்து நிமிடங்களுக்குள்ளேயே அடுத்தடுத்து பல தகவல்களைச் சொல்லி, நம்மை செங்காட்டு பூமியில் உலாவும் ஒருவராக்கிவிடுகிறார் இயக்குனர்.

அதனாலேயே, கொஞ்சம் செயற்கையாகத் தெரியும் கதை மாந்தர்களையும் களத்தையும் உடனடியாக நாம் நேசிக்கத் தொடங்குகிறோம்.

ஒவ்வொரு பாத்திரத்திற்குமான தனிப்பட்ட சிந்தனை, அதனால் ஏற்படும் முரண், மனதுக்குள் புதைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் தருணங்கள், வரலாற்றின் பல பக்கங்களில் இடம்பெற்ற தகவல்களைப் புள்ளிகளைக் கொண்டு வரையப்பட்ட அழகான கோலம் போன்ற திரைக்கதை எல்லாம் சேர்ந்து தொடக்கம் முதல் இறுதி வரை படத்தை ரசிக்கச் செய்கின்றன.

அதில் மிளிரும் நேர்த்தி திரையில் ஒரு இலக்கியமாகவே இப்படத்தைக் கொண்டாடச் செய்கிறது.

புதைந்த பிணத்தைத் தோண்டியெடுத்து அழும் காட்சியில், உயிரோடிருக்கும் நபரின் உடை மீது புழுக்கள் ஏறுவது விஎஃப்எக்ஸ் செய்திருப்பது இயக்குனரின் நுட்பமான பார்வைக்கு ஒரு உதாரணம்.

போலவே, ஆங்கிலேய அதிகாரியின் காம வேட்கைக்குப் பயந்து அடைக்கலமான பெண்ணொருத்தியை எந்தச் சூழலில் காட்டிக் கொடுத்தோம் என்று ஒரு பெண் அழுதவாறே சொல்லும் காட்சி பல அடுக்குகள் கொண்ட மனித மனதில் எத்தனையெத்தனை எண்ணங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதைச் சொல்லும்.

இயக்குனரின் எண்ணத்தில் உள்ளதை உயிரோட்டமுள்ள வாழ்வாக மாற்றும் வித்தையைச் சாதித்திருக்கின்றனர் நடிப்புக் கலைஞர்கள்.

கௌதம் கார்த்திக்கைப் பொறுத்தவரை, அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படம் இது.

கௌதமின் நண்பராக வரும் புகழ், ஜமீனாக வரும் மதுசூதன் ராவ். ஜேசன் ஷா மற்றும் ரிச்சர்ட் ஆஷ்டன், போஸ் வெங்கட் மற்றும் செங்காட்டு மக்களாக நடித்த பல கலைஞர்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாயகியாக வரும் ரேவதி, தன் பருக்கள் நிறைந்த முகத்தைக் கொண்ட பருவ வயதுப் பெண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

வட்டமான முகம், அதற்கேற்ற ஒப்பனை, பாரம்பரிய உடைகள் என்று ரவிவர்மாவின் ஓவியத்தில் இடம்பெற்ற பெண்கள் போலத் திரையில் வந்து போகிறார்.

செங்காட்டிலுள்ள நூல் ஆலை எப்படியிருக்கும் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் ஷாட்களில் ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே.வின் உழைப்பு.

செங்காட்டு ஆலை தொடங்கி அதில் வேலை பார்க்கும் மக்களின் குடிசைகள் வரை, நாம் பார்க்கும் களம் முற்றிலும் வேறானது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது கலை இயக்குனர் டி.சந்தானம் குழுவினரின் உழைப்பு.

அதேபோல மிகச்சரியாக, நேர்த்தியாக காட்சிகளை ‘கட்’ செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுதர்சன்.

’கிராபிக்ஸ்’ என்று தியேட்டரில் ரசிகர்கள் கத்திவிடாத வகையில் அமைந்திருக்கிறது விஎஃப்எக்ஸ்.

இன்னும் ஒலி ஒலிக்கும் விதம் என்று பல வகையில் நேர்த்தி கூட்டியிருக்கிறது இப்படம்.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அபாரமாக இருக்கும்போது, திரையில் நேர்த்தியாகக் கதை சொன்னாலே தப்பிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

அசத்தலான மேக்கிங் நிச்சயம் உண்டு எனும் தெம்பில், திரைக்கதையில் இருக்கும் தொய்வுகளை எல்லாம் கடாசி எறிந்துவிட்டு தன் வேலையில் கவனம் குவித்திருக்கிறார் என்.எஸ்.பொன்குமார்.

நிகழ்காலப் பிரச்சனைகள்!

ஜமீன் வம்சத்தினருக்கும் சாதாரண மக்களுக்குமான முரண்கள் வர்க்கம் சார்ந்தது மட்டுமல்ல, சாதி சார்ந்ததும் கூட. அது இந்தப் படத்தில் பூதாகரப்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

நூறாண்டுகளுக்கு முன்னர் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் தலைவிரித்தாடிய ஆங்கிலேய அதிகாரிகளின் அடக்குமுறைகள் குறித்த தகவல்களை செங்காட்டு மக்கள் பட்ட பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

பணியிடத்தில் நிகழும் கொடுமைகளை எண்ணித் தொழிலாளர்கள் துயருற்றுப் புலம்புவதும், அதிகமான வேலைப்பளுவை எண்ணி மனம் குமைவதும், சுதந்திரத்திற்குப் பிறகும் நிகழ்காலப் பிரச்சனைகளாகத் தொடர்கின்றன.

இப்படத்தில் வரும் காட்சிகள், திரைக்கதை நகர்வு, பாத்திர வடிவமைப்பு உட்படப் பல அம்சங்கள் தமிழ் ரசிகர்களுக்குப் புதிதல்ல.

அவற்றில் பலவற்றை எளிதாகக் கிண்டலடித்துவிட முடியும் என்பதே உண்மை.

அதையும் மீறி, வழக்கமான மசாலா படம் தரும் அனுபவத்தைத் தாண்டி வேறொரு உலகத்தை நம் கண் முன்னே காட்டுகிறது இப்படம் என்பதையும் மறுக்க முடியாது.

அந்த வகையில், வணிகரீதியான வெற்றியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட, இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்த, மிக நேர்த்தியான கதை சொல்லலையும் காட்சியாக்கத்தையும் கொண்ட திரைப்படம் என்று ‘ஆகஸ்ட் 16 1947’ஐ சொல்லலாம்.

அந்த நேர்த்தியைச் சாத்தியமாக்கிய இயக்குனர் என்.எஸ்.பொன்குமாருக்கு வாழ்த்துகள்!

– உதய் பாடகலிங்கம்

You might also like