– கவியரசர் கண்ணதாசன்
ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள். ஊடலும் உண்டு கூடலும் உண்டு.
அப்போது கவிஞர், தனது பெயராலேயே ‘கண்ணதாசன்’ என்னும் இலக்கிய மாத இதழ் ஒன்றினை நடத்தி வந்தார். அவ்விதழின் ஏப்ரல் 1976 இதழை ஜெயகாந்தன் சிறப்பு மலராக வெளியிட்டார்.
நானறிந்த வரையில் ஜெயகாந்தன் பிறந்த நாளை ‘சிறப்பு மலர்’ வெளியிட்டு சிறப்பித்தவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே.
அப்போது ஜெயகாந்தனுக்கு நாற்பத்து மூன்று வயதுதான். சிறப்பு மலரின் தலையங்கத்தைக் கவிஞரே “எண்ணம்” என்னும் தலைப்பில் எழுதியிருந்தார்.
அதில், “அரசியல் துறையிலும், இலக்கியத்துறையிலும் எப்போதுமே கேள்விக்குறியாகக் காட்சியளிக்கிறவர்கள் சிலருண்டு. அவர்களிலே மிகப் பெரிய கேள்விக்குறி நண்பர் ஜெயகாந்தன்.
சுயேட்சையான அபிப்பிராயங்கள் எவ்வளவு வலுவுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு.
வளைந்தும், குழைந்தும் நேரத்திற்குத் தக்க படியும் அனுசரித்துப் போகும் உலகத்தில், அவர் ஒரு நிமிர்ந்த தென்னை.
பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையிலே கூடத் தனக்குச் சரியென்று படும் விஷயம் அவர்கள் அனைவருக்கும் தவறென்று படுமா யினும் அதைச் சொல்லக்கூடிய ஆற்றல் ஜெய காந்தனுக்கு உண்டு.
இலக்கியத் துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒரு முன்னுதாரணம் கிடையாது.
இன்னொருவருடைய பாணி இவருக்கிருக்கிற தென்று எவரையும் சொல்ல முடியாது.
பிறமொழிக் கதாசிரியர்களில்கூட எவரையும் ஜெயகாந்தன் பின்பற்றியதாகத் தெரியவில்லை.
அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு, அவரே விதை; அவரே நீர்; அவரே உரம்.
1944-ல் நான் எழுதத் தொடங்கினேன். இன்று வரை நூற்றுக்கணக்கான கதாசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலோர் சம்பவக் கதைகளிலே பெயர் வாங்கியவர்களே தவிரப் பாத்திர சிருஷ்டியை அறிந்தவர்களாகக்கூட இல்லை.
எனக்குத் தெரிந்த வரையில் பாரதியின் சின்னச் சங்கரனும், புதுமைப்பித்தனின் கந்த சாமிப் பிள்ளையும், கல்கியின் வந்தியத் தேவனும், சிவகாமியும் பெற்றுள்ள இடம் பாத்திரப் படைப்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
பங்கிம் சந்திரரின் ‘இந்திரா’, ‘தேவி சௌது ராணி’, சரத் சந்திரரின் ‘அமூல்யன்’, ‘சரயூ’, காட் கரியின் ‘வசுந்தரா’, ‘விருந்தாவன்’ – இவர்களெல்லாம் அந்தந்த மாநிலங்களில் மிகப் புகழ் பெற்ற பாத்திரங்கள்.
தமிழ்நாட்டில் அப்படிச் சில பாத்திரங்களை நினைவு கூரத் தொடங்கினால், அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் என்பது அவருக்குள்ள தனிச் சிறப்பாகும்.
பிடிவாதக்காரர், எதையும் எடுத்தெறிந்து பேசுகிறவர் என்னும் அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள் பெரும்பாலான சுயேட்சை உணர்வு மிக்க எழுத்தாளர்களைப் பற்றிய அபிப்பிராயங்களின் பிரதிபலிப்பே.
இந்தச் சுபாவம் புதுமைப்பித்தனிடம் கூட இருந்தது. ஜெயகாந்தனிடம் கொஞ்சம் அதிகம்; அவ்வளவுதான்.
ஆனால் முன்னொருவரில்லை, பின்னொரு வரில்லை என்ற இடத்தை ஜெயகாந்தன் பிடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பெண்கள் கூடப் படிக்கும் கதை, அவருடைய கதை.
அவருக்கு 43 – வயதாகிறது; இன்னும் நீண்ட காலத்திற்கு அவர் எழுத முடியும்.
பிறமொழிகளுக்குப் போகும் வல்லமை அவர் கதைகளுக்கு அதிகம் இருப்பதால், அவர் எழுத வேண்டும்.
‘கண்ணதாசன்’ மாத இதழ் அவரது பிறந்த நாள் மலராக வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாம் வல்ல கண்ணன் அவருக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுளைத் தர இறைஞ்சுகிறேன்.
(ஜெயகாந்தனின் 43-வது பிறந்த தினத்தையொட்டி சிறப்பு மலர் வெளியிட்ட ‘கண்ணதாசன்’மாத இதழில் கண்ணதாசன் எழுதியதிலிருந்து…)
– நன்றி: கீற்று இதழ்