ஏப்ரல் – 7 : உலக சுகாதார தினம்
சுகாதாரமான வாழ்க்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கொரோனா எனும் ஒற்றைச்சொல் உணர்த்தியிருக்கும் உண்மை இது.
ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல்நலத்துடனும் நிம்மதியான மனதுடனும் வாழ வேண்டும். இதுவே, இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரது ஆசையாகவும் இருக்கிறது.
இதற்கான தேடலே மருத்துவம், கலை, விளையாட்டு முதல் தினசரி வாழ்க்கை வரை ஒவ்வொன்றைத் தேடியும் அழைத்துச் செல்கிறது.
பொதுவாக, சுகாதாரம் என்பது சுத்தமாக இருப்பது என்று கொள்கிறோம். அதையும் தாண்டி, நமது தினசரி வாழ்வையே ஒரு ஒழுங்குக்கு உட்படுத்துவதுதான் சுகாதாரம் நிறைந்ததாக இருக்க முடியும்.
நான்கு காரணிகள்!
ஒரு மனிதன் சுகமாக வாழ்வதற்கு நல்ல சத்தான உணவு, நிம்மதியான தூக்கம், சாந்தமான மனம், துறுதுறுப்பான உடல் செயல்பாடு ஆகியன முக்கியம். எந்தவொரு மருத்துவரும் பெரும்பாலும் இதைச் சார்ந்தே தம் நோயாளிகளை அணுகுவார்கள்.
சாதி, மத, இன, மொழி பாகுபாட்டினால் வேறுபட்டிருக்கும் நம் நாட்டில், சுதந்திரமடைந்தது முதல் இன்று வரை பல்வேறு தலைவர்கள் இவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்யப் பாடுபட்டிருக்கின்றனர்.
இந்நான்கும் கிடைத்துவிட வேண்டுமென்றுதான் நம் முன்னோர்களும் ஆசைப்பட்டிருக்கின்றனர்.
பாட்டி வைத்தியம் முதல் மரபு சார்ந்த உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, கலாசார நிகழ்வுகள் அனைத்தும் இதையே நமக்கு சொல்கின்றன.
மன ஆரோக்கியம் முக்கியம்!
கடந்த 50 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை பெருமளவு மாற்றம் கண்டிருக்கிறது. அவ்வாறு மாற்றத்தை உணராதவர்களின் வாழ்வை மாற்றுவதற்கான முயற்சிகளைப் பலரும் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களில் கார்பரேட் சமூகப் பொறுப்பு பிரிவுகளும் இது தொடர்பான பணிகளை மேற்கொள்கின்றன.
இவற்றினால் மேற்கண்ட நான்கு காரணிகளும் ஒவ்வொருவரையும் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சத்தான உணவு கிடைக்க, ஒரு நல்ல வேலைவாய்ப்போ, தொழிலோ வழி வகுத்துவிடும். ஆனால், அதனை உண்ணுவதற்கு சரியான நேரத்தைச் செலவழிப்பது அவசியம். அப்படிச் செய்தால் மட்டுமே, தூக்கமும் ஆழமானதாக இருக்கும்.
வேகயுகத்தின் நவீன வளர்ச்சிகள் பல்வேறு சாதனங்களை நம் கைகளில் திணித்திருக்கிறது. இதனால், நாம் பெற்றிருப்பவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை நிலவுகிறது.
காரணம், மனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சத்தான உணவும் ஆழமான தூக்கமும் சுறுசுறுப்பான உடல் செயல்பாடும் அமைதியான மனதும் வாய்க்கும்.
மொபைல், இண்டர்நெட், கம்ப்யூட்டர் போன்றவற்றைச் சார்ந்தே பெரும்பாலானவர்களின் தினசரி வாழ்க்கை இருப்பதும், எந்திரத்தனமான வாழ்க்கை முறையும், பொருளாதாரரீதியாக வளமாக இருப்பவர்களையும் இந்நான்கு காரணிகள் அண்டவிடாமல் துரத்துகின்றன.
போதையில் நாட்டம்!
சிகரெட், மது, குட்கா முதல் மிகக்கொடிய ஆபத்தை விளைவிக்கும் போதை பொருட்கள் வரை அனைத்தும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கின்றன. எத்தனை பணம் கொடுத்தும், அவற்றை வாங்கத் தயாராக இருக்கிறது ஒரு கூட்டம்.
‘அனுபவிக்கும் வரை வாழ்வு’ எனும் தத்துவத்தோடு இவற்றைக் கையிலேந்துபவர்கள், மனம் திருந்தினாலும் அவற்றைக் கைவிடமுடியாத கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதனால் உடல்நலம் கெட்டு, எளிதில் நோய்களுக்கு இரையாகும் நிலைமை உருவாகிறது.
இன்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரையும், பெரும்பணம் புழங்கும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் இளைய தலைமுறையினரையும் குறி வைத்து இயங்குகின்றன சில போதை மருந்து கும்பல்கள். அரசோ, சமூக ஆர்வலர்களோ மட்டும் அவர்களது செயல்பாட்டை தணிக்க முடியாது.
போதை தரும் இன்பத்தைவிட, அது மீளமுடியாத நரகத்தில் தள்ளும் என்ற உண்மையை இளைய தலைமுறையினர் உணரச் செய்ய வேண்டும். அதுவே, சுகாதாரம் குறித்த பல்வேறு முயற்சிகளை தானாக அறிவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கும்.
கொரோனா பயம்!
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா என்ற ஒற்றைச்சொல் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்ற பயங்களுக்கு நடுவே, ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்து வருகிறது மனித சமூகம்.
எந்தெந்த வயதினர் கொரோனா தடுப்பூசி இட வேண்டுமென்றும், எத்தகைய நோய்த்தன்மை கொண்டவர்கள் அதனைத் தவிர்க்கலாம் என்றும் மத்திய அரசின் சுகாதார துறை நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அது சார்ந்து, ஒவ்வொரு நாளும் கணிசமானோர் கொரோனா தடுப்பூசியை நாடி வருகின்றனர்.
நோய்த்தொற்று குறித்த பயத்துக்கு அப்பாற்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சுத்தம் சுகாதாரம் போன்றவற்றில் மக்கள் கவனம் செலுத்த வழி வகுத்திருக்கிறது கொரோனா.
சுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என்பதை சொன்னதோடு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தூண்டுதலையும் வழங்கியுள்ளது.
இதையெல்லாம் மீறி மேற்கண்ட நான்கு காரணிகளும் வாழ்க்கைக்கு எத்தனை முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
மருந்து, மாத்திரைகள், நோய் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாண்டி, காலையில் எழுவது முதல் இரவில் கண் மூடிப் படுப்பது வரை அனைத்து செயல்பாடுகளும் ஒருவகையான ஒழுங்கு வளையத்துக்குள் இருப்பது அவசியம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
‘கூழானாலும் குளித்துக் குடி’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்ற பழமொழிகள் தொடங்கி, நாம் நிற்கும் நிலத்தில் நமது வியர்வை சிந்தப்பட்டிருக்க வேண்டுமென்பது வரை பல்வேறு விஷயங்கள் மரபு வழியாக நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்கின்றன.
பழையன அனைத்தையும் கழித்துவிடாமல், புதியனவற்றோடு சேர்த்து பயன்படுத்துவதே எப்போதும் நலம் பயக்கும்.
உலக சுகாதார தினமான இன்று, நாம் சுகாதாரமாக இருப்பதோடு நம்மைச் சுற்றியிருக்கும் சமூகமும் அவ்வாறு இருப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்!
– உதய் பாடகலிங்கம்