உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலமாகவும் வழக்கு விசாரணை!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 10-ம் தேதி முதல் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமைப் பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்  மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும்,

இதன்மூலம், நீதிமன்ற அறை மற்றும் வளாகத்தில் மனிதர்களின் நடமாட்டத்தைக் குறைத்து, கொரோனா பரவலைத் தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வசதியை வழக்கறிஞர்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும் வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

You might also like