தாய் – தலையங்கம்
*
கொரோனா மறுபடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன.
சென்ற முறை தமிழ்நாடு எங்கும் பரவலாக கொரோனாச் சோதனைகளை நடத்தினால், தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான விபரங்கள் தெரிய வரலாம்.
சென்னை போன்ற மாநகரங்களில் தட்பவெப்ப நிலை மாறிய பிறகு டெங்கு உள்ளிட்ட பல தொற்றுகளும் பரவிக் கொண்டிருக்கின்றன.
கொரோனா மீண்டும் தீவிரம் அடையும் பட்சத்தில் அதன் பாதிப்பை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு எளிய மக்கள் இல்லை.
ஜி.எஸ்.டி வரியைக் கொடுக்க மூலகாரணமாக இருக்கிற மக்களால் பொருளாதாரப் பற்றாக்குறையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதிலும் அண்மையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மளிகைப் பொருட்கள், காய்கறி உட்படப் பல பொருட்களின் விலை இன்னும் உயர வாய்ப்பிருக்கிறது.
எவ்வளவு சுமையத் தான் மக்களால் சுமக்க முடியும்?
ஜி.எஸ்.டி வருவாயையும் மத்திய அரசுக்குக் கொடுத்து விட்டு, மாநிலங்களுக்குச் சேர வேண்டிய தொகைக்காக மாநில அரசுகள் மன்றாடி வாங்க வேண்டியிருக்கிறது.
சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி கிராமத்து மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
செழிப்பான தஞ்சை டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் அறிவித்துள்ளது மத்திய அரசு.
அதற்கு தமிழ்நாடு அரசும், பல கட்சிகளும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.
சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டமும் குழப்ப நிலையில் இருக்கிறது.
வாழும் இடத்திலேயே நிம்மதியாக வாழ முடியாத அளவுக்கு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில், கடனாளியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் சாதாரண மக்கள்.
வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுப் பெரு முதலாளிகள் தப்பித்துவிடுகிற போது, பொதுத்துறை வங்கிகளில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாத நிலையில் தேங்கிக் கிடக்கும் பொது மக்களின் டெபாசிட் பணம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடி ரூபாய் என்கிற தகவலை மக்களவையில் மத்திய அரசு தெரிவிப்பது வேதனை!
கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாங்கும் சக்தியை இழந்து கொண்டிருக்கிறார்கள் எளிய மக்கள். அவர்களுடைய வலியை யார் உணரப் போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.