உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் ராணுவ வீரர்களை குறி வைத்து ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் துருக்கியிடம் பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் உடனடியாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷிய வீரர்கள் இறந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போரின் போது ரஷிய வீரர்கள் ஆயுதங்களை மோசமாக கையாண்டதாலும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டதாலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷிய வீரர்கள் அதிகப்படியான மது அருந்தியதாலும் உயிரிழப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர சாலை விபத்துகள், தாழ் வெப்பநிலை போன்றவைகளாலும் உக்ரைன் வீரர்களின் தாக்குதலாலும் பலர் உயிரிழந்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா தனது ராணுவ வீரர்களின் இறப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்தே சரியான புள்ளிவிவர கணக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.