வானொலி வழிப்போக்கனின் அனுபவங்கள்!

நூல் அறிமுகம்:

உலகப் புகழ்பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் அழகிய நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வானொலியில் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெற்ற பெருமைக்குரியவர் ஹமீத்.

தன் வாழ்க்கை அனுபவங்களை மிக மிக சுவையான நடையில் எழுதியுள்ளார். நூலை கையில் எடுத்தால் படித்துவிட்டுத்தான் வைக்க முடியும்.

நூலுக்கு நயவுரை எழுதியுள்ள எழுத்தாளர் அ. முத்துலிங்கம், “அலுத்துப்போய் இருந்த சமயம், அப்துல் ஹமீத் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற நூல் கிடைத்தது.

அது நாவல் அல்ல. கட்டுரைத் தொகுப்பும் அல்ல. வானொலிப் பணியிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட அனுபவங்களை அவர் வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதியிருந்தார்.

பிரதியை கையில் எழுத்துப் படிக்க ஆரம்பித்த நான் கீழே வைக்கவில்லை. நின்றுகொண்டே வாசித்து, பின்னர் உட்கார்ந்து தொடர்ந்தேன். ஆறு மணி நேரம் நிறுத்தாமல் படித்துமுடித்த பினனர்தான் நிம்மதி ஏற்பட்டது.

ஒரு மர்ம நாவலைப் படித்ததுபோல அத்தனை ஈர்ப்பு இருந்தது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. படித்துமுடித்த பின்னர் அட
முடிந்துவிட்டதே என்று தோன்றியது” என்று வியப்புடன் எழுதியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையை மட்டும் நூலில் ஹமீத் பதிவு செய்யவில்லை. பல அபூர்வமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி இங்கிலாந்தின் செம்ஸ்போர்டு என்ற இடத்தில் சிறிய ஆய்வு மையம் ஒன்றை அமைத்தார்.

உலகம் வியக்கும் வண்ணம் முதல் ஒலிபரப்பை 1923 ஆம் ஆண்டு செய்தார்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் 1925 ஆம் ஆண்டு இலங்கையில் ஒலிபரப்பு ஆசிய சேவை தொடங்கப்பட்ட தகவல் ஆச்சரியம் தருகிறது.

ஹிலாரியும் டென்சிங்கும் 1953இல் எவரெஸ்ட் உச்சியை எட்டியபோது அங்கே ஒலித்த ஒரே வானொலி இலங்கை வானொலியின் ஆசிய சேவைதான்.

இன்னொரு முக்கியமான தகவலையும் அப்துல் ஹமீத், நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கோனி செம்ஸ்போர்டு நகரில் ஆரம்பித்த ஆராய்ச்சிக் கூடம் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆய்வகத்தை நேரில் சென்று பார்த்த ஒரே இலங்கையர் இவராகத்தான் இருப்பார்.

இலங்கை வானொலியில் பணியாற்றிய ஆளுமைகள் தமிழுக்குப் பலவகையில் வளம் சேர்த்தனர்.

படைப்பூக்கம் மிக்கவர்களாக இருந்தனர்.

அவர்களில் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் தனித்துவமான குரல் வளத்தோடு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நமது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் பங்கு முக்கியமானது என்று பாராட்டுகிறார் இயக்குநர் தசெ. ஞானவேல்.

வாழ்க்கைப் பயணத்தில் நாம் எல்லோருமே வழிப்போக்கர்கள் என்ற கவித்துவ வரியுடன் நூலைத் தொடங்குகிறார் ஹமீத்.

படிக்க படிக்க கல்கண்டாய் இனிக்கும் வானொலி அனுபவங்கள். படித்துப் பாருங்கள்.

*****

வானலைகளில் ஒரு வழிப்போக்கன்.

பி.ஹெச். அப்துல் ஹமீத்

வெளியீடு: தரு மீடியா பி லிட், 

10 / 55 ராஜூ தெரு,

மேற்கு மாம்பலம், சென்னை -33

விலை ரூ. 500

You might also like