– கலைஞர் கருணாநிதி
“பேசும் படம் வெளியிடும் சிறப்பு மலருக்குக் கட்டுரையொன்று கேட்டார்கள். கட்டுரை, திரைப்படத் துறையைப் பற்றியதாக இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல அவர்களே சில கேள்விகளை அனுப்பி, அந்தக் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் கட்டுரை அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்கள்.
உலகில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் சினிமாவும் அரசியலும் கலந்திருப்பதின் காரணம் என்ன என்பது அவர்கள் தொடுத்துள்ள முதல் கேள்வியாகும்.
திரைப்பட வாயிலாக அரசியல் கருத்துக்களைச் சொல்வது என்பது இந்திய நாட்டு விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோதே தொடங்கிய ஒன்றாகும். எந்தக் கருத்தினையும் கலைத் துறைவாயிலாக விரிவாகப் பரப்பி விட முடியும்.
நாடு விடுதலை பெற்ற பிறகும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு இயக்கக் கொள்கைகளும் பல்வேறு அரசியல் கோட்பாடுகளும் கலைத்துறை வாயிலாக குறிப்பாகவும் சிறப்பாகவும் திரைப்படத்தை துறை வாயிலாக பரப்பப் பெற்றன.
அரசியல் வாதிகள் கலையுலகில் தங்கள் எண்ணங்களை மிதக்கவிட்டனர். அதே நேரத்தில் கலையுலகைச் சேர்ந்த சிலரும் அரசியலில் தங்களை இணைத்துக் கொள்வதின் மூலம் ஆதாயம் பெறலாமெனக் கணக்கிட்டனர்.
(எல்லோருமல்ல) அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையைத் தங்கள் அரசியல் இலட்சியங்களுக்குப் பயன்படுத்தியதற்கும்.
ஒருசில திரைப்படக் கலைஞர்கள், அரசியல் துறையைத் தங்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும்.
வேறு இடங்களைப் போலன்றித் தமிழ்நாட்டு மக்களில் ஒரு பெரும் பகுதியினர் திரைப்படங்களில் தோன்றுகிற கதாநாயகர்களை வாழ்க்கையிலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே தங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டனர்.
இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதமாக்கிக் கொள்ள குறிப்பிட்ட சில கதாநாயகர்கள் தவறவில்லை. அது அவர்களின் குற்றமல்ல.
தானாகத் தேடிவரும் இதுபோன்ற நல்வாய்ப்பினை அவர்கள் எதற்காக நழுவவிட வேண்டும்.
இதுபோல ஏற்பட்ட நிலைதான் சினிமாவும் அரசியலும் கலந்துவிட்டநிலை நான் சினிமாவையோ, நடிகர்களையோ அல்லது சினிமா மூலம் கொள்கை கோட்பாடுகளைக் கூறுவதையோ எதிர்ப்பவனல்ல. மாறாக, ஆதரிப்பவன்.
ஆனால், கருத்துக்கள் பட்டுப்போகவும், தியாக உணர்வுகள், தியாகச் செயல்கள் பின்னுக்குத் தள்ளப்படவும், வெறுங்கவர்ச்சி மட்டும் பாமர மக்களின் ஆதரவை பெறவுமான ஒரு சூழல் எந்தக் காலத்திலும் நல்லதல்ல அரசியல் கொள்கைகளைப் பரப்ப சினிமா ஒரு கருவியாக இருப்பதில் தவறில்லை -ஆனால் அரசியலே சினிமாவாக ஆகிவிடுவது ஆரோக்கியமான நிலை அல்ல.
அடுத்த வினா, தி.மு.கழக ஆட்சியின் போது சினிமா தொழிலுக்கும் சினிமா கலைக்கும் போது மான ஆதரவு கொடுக்கப்பட்டதா இல்லையேல் அதற்கு காரணமென்ன என்பதாகும், திரைப்படச் சுருளுக்கான எக்சைஸ்ட்யூட்டி போன்ற மத்திய அரசின் வரிகளால் திரைப்பட உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான்.
அதேநேரத்தில் தி.மு.கழக அரசு படத்துறையின் மீது விதித்த வரிகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. தி.மு.க. அரசு விதித்த வரி ஏற்கனவே இருந்த வரிகளின் தொடர்ச்சியே தவிர புதுமையானதாக ஒன்றுமில்லை.
எனினும் வரியைக் குறைக்கவும் அதேநேரத்தில் தியேட்டர்களில் நடைபெறுகின்ற வரி ஏய்ப்பைத் தடுக்கவும் கழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு அதற்கென அதிகாரிகளும், திரைப்பட அதிபர்களும், வினியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு கழக அரசு கலைக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
வெளிப்புறக் காட்சிகளுக்கு அரசுக்கு தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வாடகை தொகையை விட கழக அரசு காலத்தில் பெரும்பகுதி குறைக்கப்பட்டதையும் திரைப்படத் தொழிலில் உள்ளோர் மறந்திடமாட்டார்கள்.
டூரிங் சினிமாக்களுக்கு ஒன்றரை ஆண்டுகாலம் என்று இருந்த கால வரம்பை கழக அரசு இரண்டு ஆண்டு காலமாகவும், அதற்குப் பிறகு இரண்டேகால் ஆண்டு காலமாகவும் ஆக்கியது. அதைத்தான் இப்போது மூன்று ஆண்டு காலமாக ஆக்கியிருக்கிறார்கள்.
கழக அரசு காலத்தில் ‘டூரிங்’ சினிமாக்களுக்கு ‘கம்பவுண்டிங் வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால் ‘டூரிங்’ சினிமாக்காரர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அந்த வரி கட்ட மறுத்தார்கள். அதனால் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக ‘கம்பவுண்டிங்’ முறை அப்போது ரத்து செய்யப்பட்டது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பரிந்துரை செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கத்தான் கழக அரசு ஒரு குழுவை நியமித்தது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.
நடிகர்களுடைய சம்பளம் அளவிற்கு மீறி அதிகமானதும், தமிழக ஸ்டூடியோக்களில் உள்ள அரங்குகளுடைய வாடகை மிகவும் அதிகப்படுத்தப்பட்டதும், தயாரிப்பாளர்களிடையே தேவையில்லாத போட்டிகள் எழுந்ததும் நகர்ப் புறங்களில் உள்ள தியேட்டர்காரர்கள் சிறிய படங்களுக்குக் கூட வாராந்திர வாடகை என்று பெருந்தொகை நிர்ணயித்து அதைத் தர முடியாத படங்களை வெளியிட மறுத்ததும் தமிழ்த்திரைப்பட உலகின் இன்னல்களுக்கு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
சிறந்த தமிழ்ப் படங்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் எழுத்தாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகளும், பாராட்டுக்களும், பண முடிப்பும் தருகிற திட்டமும் வகுக்கப் பெற்று இரண்டு மூன்று ஆண்டுகள் நடைபெற்றது.
பரிசு பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள் அந்த விழாக்களுக்குத் தாங்களே நேரில் வராமல், தங்களுக்குப் பதிலாக வேறு யாரையேனும் அனுப்பி. அவற்றைப் பெற்றுக் கொள்கிற நிலையை ஏற்படுத்தினர்.
அதனையொட்டியும் வேறு சில காரணங்களாலும் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
மூன்றாவதாக எழுப்பப்பட்டுள் கேள்வி, “நட்சத்திர ஆதிக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? படத் தயாரிப்பில் முக்கியமானவர் கதாசிரியரா? அல்லது டைரக்டரா! யாருக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்” என்பதாகும்.
வெற்றிகரமாகவும், சிக்கனமாகவும் இழப்பு இன்றியும் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டுமானால் நடிகர்கள் ஆதிக்கமோ எழுத்தாளர், இயக்குநர் – யாருடைய ஆதிக்கமோ இல்லாமல் இருந்தால்தான் முடியும் என்பது என் கருத்து.
இந்ததுறையில் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால் தான் படம், பெரிய வெற்றியைப் பெறுகிறதோ இல்லையோ; இழப்புக்கு ஆளாகாமலாவது தயாரிப்பாளர்கள்.
விநியோகஸ்தர்கள் தப்பிட இயலும் மிகச் சிறிய காரணங்களுக்காக எல்லாம் படப்பிடிப்புகள் (ஷூட்டிங்) ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படுகிற இழப்பு இந்தத் துறையில் அளவிட முடியாததாகும்.
இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
“தமிழ்ப்படங்கள் கலைப்படைப்புகளாகவே விளங்கவேண்டும் என்று விரும்புகிறவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்பது மற்றொரு கேள்வியாகும். தமிழ்ப் படங்கள், கலைப்படைப்புக்களாகவும் இருக்கவேண்டும்.
அதே சமயம் கருத்துப் புதையல்களாகவும் விளங்கவேண்டும். என்ற கருத்துடையவன் நான்.
‘வேலைக்காரி’, ‘பராசக்தி’, ‘சொர்க்கவாசல்’ ‘மனோகரா’, ‘நாடோடிமன்னன்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘சாரதா’, ‘தெய்வம்’ இந்த வரிசையில் எத்தனையோ கலை ஒளியும் கருத்தொளியும் கொண்ட படங்கள் வரவில்லையா? அவற்றை மக்கள் வரவேற்கவில்லையா? நான் சில படங்களை மட்டுமே நினைவுபடுத்தினேன்.
இந்த வரிசையில் புகழ்பரப்பிய திரைக் காவியங்கள் பல உண்டு.
இறுதியாக, “திரைப்பட விழாக்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன? அவை, தமிழ் சினிமாக் கலைக்கு நன்மை பயக்குமா?” என்ற கேள்வியாகும்.
பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகிற படங்களின் வாயிலாக நமது தொழில் நுட்பம் வளர வாய்ப்பு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் “பால் உணர்வு’ தூண்டுகின்ற படங்களைப் பார்ப்பதற்கு நமது நாட்டுமக்கள் இப்படிப் பறக்கிறார்களே என்ற, இழிமொழிக்கு ஆளாவது நல்லதல்ல!
தமிழ்ப்பட உலகம் வெளிநாட்டுப் படங்களில் காணப்படும் கலைத்திறமையைத் தானும் ‘பெற்றிட முயல வேண்டுமே அல்லாமல், அந்தக் கலாச்சாரத்தை, அப்படியே தமிழ்க் கலாச்சாரமாக ஆக்கி, தமிழ்நாட்டைப் பாழாக்கி விடக்கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோளாகும்.”
– பேசும் படம். மலர் 1978