அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-ல் இருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து ரூ.240 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் மூன்று ஆக்ஸில் வாகனங்களுக்கு ரூ.225-ல் இருந்து ரூ.260 ஆகவும், ஆறு ஆக்ஸில் வாகனங்களுக்கு ரூ.325-ல் இருந்து ரூ.375 ஆகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.395-ல் இருந்து ரூ.455-ஆகவும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தில் இருந்து குறைந்தபட்சமாக ரூ.10 முதல், அதிகபட்சமாக ரூ.60 வரைசுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.