ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.
மொயீன் அலி 23 ரன்களும், ஷிவம் துபே 19 ரன்களும், தோனி 7 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.
விருத்திமான் சகா 25 ரன்களும், சாய் சுதர்சன் 22 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழ்ந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். அவர் 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 4 ரன்களும், 18வது ஓவரில் 7 ரன்களும் எடுத்தனர்.
19வது ஓவரில் ரஷீத் கான் சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது. இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் ஹங்கர்சேகர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முன்னதாக 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வானவேடிக்கைகளுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் கோலகலமாக நடைபெற்றன.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழா மேடையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.