– சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேங்கைவயல் விவகாரத்தில் புகார் அளித்து 90 நாட்களாகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாததால், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.