வ.உ.சியின் சித்த வைத்திய பார்வை!

– ரெங்கையா முருகன்

பல்வேறு அலைச்சல் மிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1927-களில் கோவில்பட்டியில் வசித்து வந்த பெரியவர் வ.உ.சி.

அந்த ஊரின் நாட்டாண்மை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வ.உ.சி.யின் சொற்பொழிவைக் கேட்க விருப்பப்பட்டனர்.

இச்சங்கத்தின் செயற்பாட்டாளராக இருந்தவர் கணியன் மற்றும் புலவர் சித்த வைத்தியத்தில் தேர்ந்த இ.மு.சுப்பிரமணியபிள்ளை.

பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நாளுக்கு முன்னதாக பெரியவர் வ.உ.சி.யின் கூட்ட நிகழ்வினை நினைவுபடுத்துவதற்காக இ.மு.சு. செல்லும் வேளையில் பெரியவர் வ.உ.சி.

முட்டிக்காலில் மாவைத்துக் கட்டி படுத்த படுக்கையாக இருப்பதைப் பார்த்து பதைத்துப் போனார் இ.மு.சு.பிள்ளை அவர்கள். என்ன அண்ணா ஆயிற்று என்று பதட்டத்துடன் கேட்டார் இ.மு.சு.

“தம்பி நான் ரணவேதனையுடன் பாடாய் படுகிறேன். நான் படும் வேதனை அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். அத்தனை தாங்க முடியாத வேதனை. வேதனை தாளமாட்டாமல் அரசாங்க மருத்துவமனை சென்று வந்தேன்.

பெரிய பிளவை உண்டாகும் மாக்கட்டு கட்டிப் பழுக்க வைத்து அறுக்க வேண்டும் என்று டாக்டர் கூறி மாக்கட்டு போட்டிருக்கிறார்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நான் நாளைய கூட்டத்துக்கு வர இயலாது தம்பி எனக் கூறுகிறார்.

இ.மு.சுப்பிரமணியபிள்ளை சித்த வைத்திய ஞாயிறு விருதை சிவஞான யோகிகளிடத்தில் சித்த வைத்தியம் பயின்ற மாணவர். அந்த சித்த வைத்திய பயிற்சியின் விளைவாக பெரியவர் வ.உ.சி. உடலின் நாடியைப் பரிசோதித்தார்.

“புளித்த பொருள்கள் உண்டீர்களோ” அண்ணா என்று கேள்வி கேட்க, ஆம் தம்பி நண்பர் சேலத்திலிருந்து மாம்பழங்கள் அனுப்பி வைத்தார். ஆசையில் சற்று மிகுதியாக சாப்பிட்டு விட்டேன் என்றார் பெரியவர் வ.உ.சி.

இப்போது புரிந்து விட்டது பிரச்சினை இதுதான். மாக்கெட்டை அவிழ்த்து எறிந்தார். இது வாதவலி; பிளவை கிடையாது.

இனி அஞ்சவேண்டாம் எனக் கூறிவிட்டு சுக்கு, கடுகு, உப்பு மூன்றையும் விழுபட அரைத்து கொதிக்க வைத்து தாங்கு சூட்டில் பத்து போடப்பட்டது.

மூன்று முறை இந்த பக்குவ வைத்தியம் செய்யப்பட ஆச்சரியம் என்னவெனில் வாதவலி வந்த வழியே உடனடியாக போய்விட்டது.

முறைப்படி மறுநாள் செல்லவேண்டிய சொற்பொழிவுக் கூட்டத்துக்கு வந்து பேருரையும் ஆற்றிவிட்டார் வ.உ.சி. அந்த உரை என்னவெனில் தான் கண்கூடாக பார்த்த சித்த வைத்தியத்தின் மகிமையை‌ விளக்கும் விதமாக “நோய்நாடி நோய் முதல் நாடி” என்ற தலைப்பில் பேருரையாற்றினார்.

தமக்கு வாதவலி வந்ததும், ஏன் வந்தது, எதன் மூலமாக வந்ததையும், அரசாங்க ரண வைத்தியர் பெரிய பிளவையை உண்டாக்கி பழுக்க வைத்து அறுக்க வேண்டும் என்பதையும், அதனால் மாக்கட்டு கட்டி தான் துன்புற்றதையும் அதன் பிறகு அரை அணாச் செலவில் சித்த வைத்தியத்தில் வந்த வாதவலி தெரியாமல் தான் குணமடைந்த நிகழ்வை பேருரையாக சொன்மாரி பொழிந்த உரையாற்றினார்.

நமது தமிழ் நாட்டில் நம் மூதாதையராகிய சித்தர்கள் திருவருளால் கண்கண்ட வைத்தியமே சித்த வைத்தியம். அதன் உண்மை நிலையை காட்டுவதே திருவள்ளுவர் திருக்குறளின் “மருந்து” அதிகாரம்.

சித்தர் முறையாகிய சித்த வைத்திய மந்திரப் பார்வையே பல பிளவைகளையெல்லாம் கரைத்து நலம் விளைவிக்கும் இந்த சாமான்யர்களுக்கு.

பணக்காரர்களுக்கு மேலைநாட்டு வைத்திய முறை ஓரளவு பயன்தரும். ஏழைகளுக்கு சித்த வைத்தியம் எளிய செலவில் நலம் விளைக்கும்.

மேலும் நமது நாட்டு தட்பவெப்ப நிலைக்கு சித்த வைத்தியமை சாலச் சிறந்தது என்றும் கேட்போர் நெஞ்சில் பதியுமாறு உரையாற்றினார்.

இதன் தொடர்ச்சியாக 1927 ம் ஆண்டு பெரியவர் வ.உ.சி. சேலம் அரசியல் மூன்றாவது மகாநாட்டில் “எனது பெருஞ்சொல்” அரசியல் பெருஞ்சொல்லாக தமிழர்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முதல் சித்த வைத்தியம் வரை தேவைப்படுவதை விளக்கமாக பேருரையாற்றுகையில் சித்தர்கள் செய்யுள் வடிவில் மறைபொருளாக குறிப்பிட்டவற்றை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிய கலைச் சொல்லாக்க வேண்டியதன் அவசியம்.

குறிப்பாக நவீன உலகத்தின் தேவைக்கேற்ப சித்த வைத்தியத்தின் மேன்மையை வளர்க்க வேண்டியும், குறிப்பாக மருத்துவம் பொதுமக்களுக்கு இலவசமாக கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இதனை தட்டச்சு செய்தபோது சுளுந்தி நாவலாசிரியர் முத்துநாகு அவர்கள் சித்த வைத்திய மேன்மை குறித்து பேசும் சொற்பொழிவில் தவறாது பெரியவர் வ.உ.சி. யின் சித்த வைத்திய பார்வை குறித்து பதிவு செய்து வருவதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

மூலம்: இ.மு.சுப்பிரமணிய பிள்ளை எழுதிய நெல்லை தமிழ்ப் புலவர்கள் நூலிலிருந்து.

You might also like