டி.எம்.சவுந்தரராஜனுக்கு தமிழக அரசு கௌரவம்!

தமிழகத்தில் திரைப்பட பின்னணிப் பாடகர்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் டி.எம்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்காக சினிமா பாடல்களைப் பாடியுள்ளார்.

அந்தந்த நடிகர்களின் குரலுக்கு ஏற்றபடி குரலை மாற்றி பாடல்களைப் பாடுவது அவரது சிறப்புத் திறமையாகும். அவரது தமிழ் உச்சரிப்பும், பிசிறு தட்டாத குரல் வளமும் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

10 ஆயிரம் சினிமா பாடல்களையும், 2,500 பக்திப்பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.  டி.எம்.சவுந்தரராஜன் 1922-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி பிறந்தார். அவர் 25.05.2013 அன்று தனது 91-ம் வயதில் காலமானார்.

அவரது 100-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக மந்தைவெளி மேற்கு வட்டச் சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில்,

“டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார்.

பரிந்துரையை பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

You might also like