அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்றும் நாளை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும்
பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம் எனவும் விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுச்செயலாளா் பதவிக்கு போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி இன்று மனு தாக்கல் செய்தார்.
வேறு யாரும் போட்டியிடாத பட்சத்தில் பொதுச்செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.