ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15 

குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து,

தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு அருங்காட்சியகங்களும் அமைத்து கல்வியில் செயல் முறைக் கற்றலுக்குப் பங்காற்றியவர் – அலெக்ஸாந்தர் யுட்னோவிச் ஸெலென்கோ.

இவர் சோவியத் நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரைச் சேர்ந்த கல்வியாளர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இவர் இப்பணிகளைச் செய்துள்ளார்.

அதற்குக் காரணம், குழந்தைகள் அன்றாடம் கற்கும் கல்வி முறை வாழ்க்கையோடு தொடர்பு அற்றதாக வெறும் ஏட்டுச் சுரக்காய் நிலையிலேயே இருந்ததால் தான்.

கல்வி கற்பதன் நோக்கம் சமூகத்தை நேசிக்கும் மனிதர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். சமூகம் மாற்றம் பெற்று மனிதப் பண்புகள் தழைத்து சிறப்பாக வாழ்வதற்கு மனிதன் பெறும் கல்வியானது உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு என்ன நிகழ்கிறது? வாழ்வியல் திறன்களை முழுமையாகப் பெற்று முழு மனிதனாக ஆளுமை நிறைந்த மனித சமுதாயத்தை இந்தக் கல்விக் கட்டமைப்பு முறை உருவாக்கியுள்ளதா என்பதெல்லாம் நம் முன் எழும் நியாயமான வினாக்கள்.

மனிதநேயச் சார்பு குறித்துப் பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை என்பதால் தான் இந்த 2023 இல் கூட குடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலக்கும் மனிதர்கள் பற்றிய செய்திகள் தொடர்கின்றன.

நமது தற்போதைய கல்வி முறையின் மிகப் பெரிய பிரச்சனையே அது வெறும் காகிதப் புலிகளை உற்பத்தி செய்வது தான், அது மட்டுமல்ல, இந்தக் கல்வியின் வேலை நடக்கும் இடமாக இருக்கும் வகுப்பறைகளிலிருந்து எழுது பொருள்கள், காகிதப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து விட்டால் அங்கே கற்றலும் கற்பித்தலும் சாத்தியமா என்ற கேள்வியையும் முன் வைக்கிறார் தமிழ்நாட்டின் கல்வியாளர் ஆயிஷா நடராஜன்.

மிகச் சரியான மற்றும் நியாயமான கேள்வி. தமிழ்நாட்டுப் பள்ளிகளை எடுத்துக் கொள்வோம்.

பாட நூலில் உள்ள கருத்துகளைக் கற்றுத் தருவதென்பது எழுத்து, சொற்கள், வினாக்கள், விடைகள் படித்தல் எழுதுதல் என்று வரையறைக்குள் சுருங்கி விட்டன என்பது தான் எதார்த்தம்.

கல்வியை பாடநூலுக்குள்ளும் தேர்வு விடைத்தாட்களுக்குள்ளும் தேடும் ஆசிரியர் சமூகம் குழந்தைகளுக்கான நேரடி அனுபவங்களைத் தருவதற்கு தயங்குகிறது.

வாழ்க்கையில் நேரடியான அனுபவங்களைப் பெறுவதற்கான களங்களும் சூழ்நிலைகளும் உருவாக்கித் தருகின்றனவா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியவை.

கவிதை எழுதக் கூறி வரும் தேர்வு வினாத்தாள்களை உள்வாங்கும் கலையைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் பார் போற்றும் பாவலர்களாக நம் பள்ளிக் குழந்தைகள் ஆயிரக்கணக்கானவர்கள் உருவாகி இருக்க முடியும்.

ஆனால் கவிதைகளின் பொருள் தெரியாத குழந்தைகளாகவே பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கே மொழியைக் கையாளத் தெரியவில்லை என்றக் குற்றச்சாட்டு வெகு சாதாரணமாகவே சொல்லப்படுகிறது.

இதே போலவே மற்ற பாடங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கணக்கு வல்லுநர்களையோ அறிவியல் கண்டுபிடிப்பாளர்களையோ வரலாற்று ஆய்வாளர்களையோ எத்தனை தூரம் இந்தக் கல்வி முறையில் உருவாக்கிவெற்றி கண்டிருக்கிறோம் என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டவை.

சமீபகாலங்களில் பெருகி வரும் இணைய வழிக் கல்வியும் ஸ்மார்ட் ஃபோர்டு கலாச்சாரமும் கூடுதலாகக் கல்வியைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

ஒரு தாவரத்தைப் பற்றியோ காய்கறிகள் பற்றியோ மரங்களைப் பற்றியோ கற்பிக்க வேண்டுமெனில், பள்ளிக்கு வெளியே அழைத்துச் சென்றால் தாவரத்தின் வேர், தண்டு, இலை எனத் தொட்டுப் பார்த்துக் கற்பிக்கலாம்.

மரங்கள் என்றாலும் அப்படியே. ஆகாயத்தைக் காட்டி பறவைகள் குறித்தான பாடத்தை மிக எளிதாக நடத்தலாம்.

ஆனால் இவற்றை ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் என்ற பெயரில் விர்ட்சுவல் வகுப்பறைகளில் கற்பிப்பதைப் பெருமையாகக் கருதும் ஆசிரியர்களும் அதை விரும்பும் பெற்றோர்களும் என்று மாறிவிட்டன கற்பித்தல் களங்கள்.

எல்லாவற்றையும் இந்தத் தொடு திரை வழியாகக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளிடம் மனிதப் பண்புகளைக் கடத்தும் கற்பித்தல் முறைகள் வேண்டும் என யார் கூறுவது?

இவற்றையும் கடந்து ஆசிரியர்களின் ஆர்வக் கோளாறு விவசாயக் குடும்பக் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் வயல்வெளிகளையும் தொடு திரையில் காட்டிக் கற்பித்தலை முன் வைக்கும் படச் செய்திகளைக் காண முடிகிறது.

சமீபத்தில் கல்வித் துறை அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழாக்களை நடத்தியது. அதில், 196 வகையான தலைப்புகளில் போட்டிகள் வைக்கப்பட்டு பள்ளி அளவிலிருந்து மாநில அளவு வரையிலான சுற்றுகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன.

அதில் பாரம்பரியக் கலைகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளும் அடங்கும்.

உதாரணம் நாத சுவரம், வீணை, புல்லாங்குழல், பறை, காற்றுக் கருவிகள், கம்பிக் கருவிகள், தோல் கருவிகள்… ஆனால் அதற்குரிய கருவிகள் எதுவும் பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட்டதாக இத்தனை வருடங்களில் இல்லை.

ஊர் சார்ந்த மரபு சார்ந்த கருவிகள் அந்தந்தப் பள்ளிகளில் நிலையாகக் காட்சிப் படுத்தப்படுவது ஒரு வகையான கற்றலே.

அன்றாடம் குழந்தைகள் அவற்றைப் பார்ப்பதும் உரையாடுவதும் அவற்றைப் பற்றிய செய்திகளை அறிவதும் புதியன சிந்திப்பதும் என கற்றல் தொடரும். ஆனால், அதற்கெல்லாம் நமது கல்வி முறையில் இடம் இருக்கிறதா?

கல்வியும் சமூகமும் பரஸ்பரம் புரிந்து கொள்ள வாய்ப்புகளை கல்விக் கூடங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

ஆனால் இன்றுள்ள கல்வி முறை அதை உறுதி செய்யவில்லை என்பதைக் காட்டிலும் அதை சிதைக்கும் வேலையையே செய்து வருகின்றன.

இந்த அபாயங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை கவனத்தில் கொள்வதோடு மாற்றங்களை முன்வைத்து கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதே தற்போதையத் தேவை.

– சு.உமா மகேஸ்வரி

You might also like