அருமை நிழல் :
”காவியமா? நெஞ்சில் ஓவியமா?” “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய ’இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை.
“தெலுங்குக் கீர்த்தனைகளைச் சேர்த்துப் பாடுவதில் தவறில்லையே” என்று அவரிடம் சொல்லப்பட்ட போது, ஜெயராமனின் உறுதியான பதில்:
“நான் பாட மாட்டேன்”
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதால், திரையிசையில் வெற்றியை எட்டிய தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் குருவாக இருந்து இசையைக் கற்றுக் கொடுத்துவர் ஜெயராமன் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிற ஜெயராமன் ‘சம்பூர்ண ராமாயணம்” படத்தில் பாடிய “வீணைக் கொடியுடைய வேந்தனே” என்கிற பல ராகங்களை ஒருங்கிணைத்த பாடல் மிகவும் பிரபலம்.
எந்த இசை நிகழ்ச்சி என்றாலும் “வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே” என்கிற தமிழைப் பற்றிய பாடலுடன் தான் கச்சேரியை நிறைவு செய்வார் சிதம்பரம் ஜெயராமன்.
அவருடைய திருமணத்தின்போது வந்து வாழ்த்திய கலைவாணர் அவருக்கே உரித்தான கிண்டலுடன் அழுத்தம் கொடுத்து வாழ்த்தினார்.
“இவர் எனக்குச் சாதாரண தம்பி அல்ல.. தம்ம்மப்ப்பீ”
– சாருகேசி தொகுத்த இசைச்சித்தர் நூற்றாண்டுவிழா மலரிலிருந்து ஒரு பகுதி.