விடுதலைக்கு உழைப்பதே என் வேலை!

“உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!

என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே
பெரிதென்(று) இயங்குவேன்!

அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!

இம்மா நிலந் தனில்
எண்ணிலா ஏழைகள்
ஏற்றத் தாழ்வுகள்
எங்கணும் இருக்கையில்
சும்மா இருந்திட
மனம் வர வில்லையே!

எம்மா நிலத்தையும்
இனத்தையும் மொழியையும்
எத்தனை முயற்சிகள்
செய்தே ஆயினும்
வெம்மாப் பெரும்படை
நடத்தியே ஆயினும்
விடுதலை செய்வதே
உலகில், என் வேலையாம்!”

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
You might also like