தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் ‘யோசி’. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார்.

பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவி ஒருத்தி மலைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள்.

முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர்பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறாள். அவளுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

படத்தின் நாயகன் அபய்சங்கர் பேசும்போது, “கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினர் நான்.

கொரோனா காலகட்டத்தில் ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்கி ஜான்சன் மூலமாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஜோசப்பை சந்தித்தேன். நடிக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்துவந்தது.

எனக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் குறித்து அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை.

படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்திமுடித்தோம்” என்றார்.

தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடவும் வேலைகள் நடந்துவருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

You might also like