மலை குலைந்தாலும் – தமிழா மனங்குலையாதே!

– சுத்தானந்த பாரதியின் எழுச்சி வரிகள்

தலை நிமிர் தமிழா – பெற்ற
தாயின் மனம் குளிர
மலை குலைந்தாலும் – தமிழா
மனங்குலையாதே!

1938-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பியவர் சுத்தானந்த பாரதி!

தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியவர்! செயல்முறைக் கல்விக்குப் பாடுபட்டவர்! மொழி பெயர்ப்புத் துறையில் முன்னோடியாக விளங்கியவர்!

கவிதை, நாடகம், புனைகதை, மகாகாவியம், வரலாறு, இதழியல், கல்வி, அறிவியல், ஆன்மிகம் எனப் பலதுறைகளில் சாதனை படைத்த கவியோகி சுத்தானந்த பாரதியார் பன்முக ஆற்றல் கொண்டவர்.

கவியோகி சிவகங்கையில் 10.05.1897 ஆம் நாள் ஜடாதர அய்யருக்கும் – காமாட்சி அம்மையாருக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வேங்கட சுப்பிரமணியன்.

ஆரம்பக் கல்வியைத் திண்ணை பள்ளியிலும், அதன் பிறகு சிவகங்கை அரசர் பள்ளியிலும் படித்தார். ஆசிரியர்களின் பிரம்படிகளுக்குப் பயந்து பள்ளிப் படிப்பை வெறுத்தார்.

தானாகவே கற்றுத் தன்னுடைய கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். புலவர் தெய்வ சிகாமணி என்ற ஆசிரியரிடம் தமிழ் கற்று, இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார்.

‘அரிஸ்டாடில், பிளாட்டோ, ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த்’ – போன்றோரின் படைப்புகளை இளம் வயதிலேயே கற்றார்.

பசுமலை கிறிஸ்துவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து முடித்தார். அரசர் கலாசாலையில் நூலகராகப் பணிபுரிந்தார்.

அப்போது நூலகத்தில் உள்ள அறிவியல், வரலாற்று நூல்களைப் பெரிதும் விரும்பியும், அயராது படித்தும் அறிவைப் பெருக்கிக் கொண்டார்.

காட்டுப்புத்தூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஆங்கிலம், புவியியல், கணிதம் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் கற்பித்தார்.

மாணவர்களுக்குச் சாரணர் பயிற்சி அளித்தார்; அதன்வழி, தொண்டுள்ளத்தையும், ஒழுக்கத்தையும், மது விலக்கையும், கல்வி, தொழில், சமுதாய ஒற்றுமையையும் கற்பித்தார். நடைப்பள்ளிக்கூடம் நடத்தினார்.

‘பாலபாரதி’, ‘சமரச போதினி’, ‘சுயராஜ்யா’, ‘இயற்கை’, ‘தொழிற்கல்வி’ – ஆகிய இதழ்களில் கல்வி குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

“அறிவு, பலம், ஒழுக்கம், தொழில், கலை ஆகியவற்றை ஒருங்கே வளர்க்க வேண்டும். மாணவர்கள் சமுதாயத் தொண்டுகளில் ஈடுபட பயிற்சி அளிப்பதும், மாணவர்களின் திறமையை வளர்ப்பதுமே நல்ல கல்வியாகும்”.

“அடிப்படைக் கல்வியை இலவசமாக, தாய்மொழியில் அனைவருக்கும் அளிக்க வேண்டும்.”

“மின் ஆற்றலை உள்வாங்கிக் கொண்டு மின் விளக்கு பிறருக்கு வெளிச்சத்தை அளிப்பது போல், ஆசிரியர்கள் பல நூல்களிலுள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைப்பதே ‘கற்பித்தல்’ என்னும் ஆசிரியப் பணியாகும்”.

“புத்தகப் படிப்பு மட்டுமே கல்வியன்று; மூளை, மனம், உள்ளம், உணர்ச்சி, புலன்கள், உழைப்பு ஆகியவற்றின் மூலமாகவும் கல்வி கற்க வேண்டும்.” இவ்வாறான உயர்ந்த சிந்தனைகளை கல்வி குறித்து முன்வைத்தவர் கவியோகி. வரிப்பணத்தில் பாதி நிதியைக் கல்விக்கு ஒதுக்கிட வலியுறுத்தினார்.

இந்தியாவில் அக்காலகட்டத்தில் நடைபெற்றுவந்த சுதந்தரப் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பவராக இல்லாமல், சுதந்தரப் போரில் நேரடியாக ஈடுபட்டார் கவியோகி.

“நாம் கேட்பது பிச்சையன்று – சுதந்தர உரிமை. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும், தடியடி வஞ்சகச் சூழ்ச்சியும் கொண்ட அதிகார வர்க்கமா நமக்கு விடுதலையைத் தரும்? விடுதலை, போராடிப் பெற வேண்டியது” – என்று முழங்கினார்.

காவல்துறையின் அடக்குமுறைகளையும், தடைகளையும் மீறிப் பொதுக்கூட்டங்களின் மூலம் மக்களுக்குச் சுதந்தர உணர்வை ஊட்டினார்.

வ.வே.சு. ஐயருடன் இணைந்து ‘பாலபாரதி’யில் கட்டுரைகளை எழுதினார். கதர்த் துணி மூட்டையைத் தாமே சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார்.

மகாத்மா காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது, தனது ஆசிரியப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு, தாய் நாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

“அனைவருக்கும் அரசியல் விடுதலை வேண்டும். அதற்கு மன உறுதியுடன் போராட வேண்டும்” – என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்திலும், 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கங்களிலும் கலந்து கொண்டார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க.வுடன் இணைந்து கதர்ப்பணி, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சமூகச் சீர்திருத்தப் பணிகளிலும் ஈடுபட்டார்.

கவியோகி தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு, இலத்தீன், ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுப் பன்மொழியாளராக விளங்கினார். மேற்கண்ட மொழிகளிலிருந்து சிறந்த இலக்கியங்களை இனிய எளிய அழகு தமிழ் நடையில் மொழி பெயர்த்தார்.

திருக்குறளுக்கு எளிய நடையில், அனைவருக்கும் புரியும் வகையில் உரை எழுதி வெளியிட்டார். மேலும், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

‘அவரது மொழிபெயர்ப்பு’ வள்ளுவர் உள்ளத்தைக் காட்டும் வண்ணம் உள்ளது – எனத் திறனாய்வாளர்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

தமிழ் மொழியில் இறைவழிபாடு நடத்துவதற்குத் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், கவியோகி தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழில் அருச்சனைக்கான பாடல்களை இயற்றி அளித்துள்ளார்.

தமிழ் மொழியில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்கள் இயற்றித் தமிழிசையை வளர்த்தார்.

“ஒரு மனிதன் தன் இரைப்பையினால் மட்டுமே உணவைச் சீரணிக்க முடியும். அதுபோல் தாய் மொழியால் மட்டுமே அறிவைப் பெற முடியும்”- என்று தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்தினார் கவியோகி.

சிலப்பதிகாரத்தை உரைநடையில் ‘சிலம்புச் செல்வம்’ என்ற பெயரில் படைத்தளித்தார். மணிமேகலையை ‘மணிமேகலை அமுதம்’ என்ற பெயரில் உரைநடையில் எழுதியுள்ளார்.

சீவகசிந்தாமணியை நாடகமாகவும், வளையாபதி, குண்டலகேசி இரண்டையும் முறையே, காவியமாகவும், நாடகமாகவும் எழுதி வழங்கியுள்ளார்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, இசை, நாடகம், நாட்டியம் ஆகியன குறித்த இலக்கணங்களைக் கற்றறிந்தார். ‘பைந்தமிழ்ச் சோலை’, ‘நாடகக் கலை’, ‘இராணி மங்கம்மாள்’, ‘காலத்தேர்’ ஆகிய அரிய நூல்களை எழுதியுள்ளார்.

தனித் தமிழ் நாடகங்களைத் தமிழர் தயாரித்து, நடித்துத் தனித் தமிழ்க் கலையை வளர்க்க வேண்டுமெனவும், நாடகத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் பரப்பிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அய்ம்பத்து நான்கு நாடகங்களைத் தமிழில் எழுதியுள்ளார். “கலிமாவின் காதல்”, “நாகரிகப் – பண்ணை” – ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டார்.

‘கலைக்கோவில்’, ‘வீரத்தேவன்’, ‘வீராங்கனையின் வெற்றி’, ஆகிய நாவல்களைப் படைத்தளித்துள்ளார்.

எமர்ஸன், வால்ட் விட்மன் ஆகியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், ‘ஜப்பான் விஜயம்’, ‘நான் கண்ட ரஷ்யா’, ‘ஆப்பிரிக்கப் பயணம்’- ஆகிய பயண நூல்களையும் எழுதியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘லே மிசிரபிள் (Lay missirable)’ என்ற நவீனத்தைப் பாமரரும் படித்து மகிழும் வண்ணம் ‘ஏழைபடும் பாடு’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார்.

புவியெலாம் போற்றிய அக்கவியோகியின் “பாரத சக்தி, மகா காவியம்” என்னும் நூலுக்குத் தமிழக அரசினால் தோற்றுவிக்கப்பட்ட “மாமன்னன் இராசராசன் விருது”- 1984 ஆம் ஆண்டு முதன் முதலில் தஞ்சையில் வழங்கப்பட்டது.

தமிழாலயம் அமைக்க வேண்டுகோள் விடுத்தார். தமிழாலயத்தில், மொழி-இலக்கியம் – நுண்கலை-நல்வழி-வீரம்-தொழில்-வேளாண்மை-பொருளாதாரம்-கல்வி-அரசியல் போன்ற துறைகளை வளர்க்கத் திட்டம் தீட்டி வழி அமைத்துள்ளார்.

தமிழக அரசும் கவியோகியின் வேண்டுகோளின்படி தமிழாலயம் அமைத்து, அவரின் வழி முறைகளை நடைமுறைப்படுத்தினால் தமிழரும், தமிழும் உயர்வடையலாம். வளமான தமிழகம் படைக்கலாம்.

சிவகங்கை அருகில் சோழபுரம் என்கிற கிராமத்தில் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் ‘சுத்தானந்த யோக சமாஜம்’ அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் ‘சுத்தானந்த பாரதி வித்யாலயம் – மேல்நிலைப்பள்ளி’, நடைபெற்று வருகிறது.

சென்னை திருவான்மியூரில் ‘சுத்தானந்த நூலகமும்’, ‘கவியோகி நூல் வெளியீட்டு நிலையமும்’ நடைபெற்று வருகின்றன.

‘தன்மொழியே தலைசிறந்த மொழி என்பதை உணர்ந்து, தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்தவர் கவியோகி’ என நாமக்கல் கவிஞர் புகழ்ந்து போற்றியுள்ளார்.

சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகள் ‘கவியோகி’ – ‘பாரதி’ – என்று பட்டமளித்துப் பாராட்டினார்.

தமிழுக்கு உழைக்கவும், பிற மொழிகளைக் கற்கவும், தமிழ் மொழியை விரிந்த கலைக்கடல் ஆக்கவும் கடைசிவரை பாடுபட்டார்!

கவியோகி 07.03.1990 ஆம் நாள் மறைந்தார். அவரது வழியில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்படுவதே இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய அரிய செயலாகும்.

– பி.தயாளன்

– நன்றி : கீற்று இதழ்

You might also like