ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்!

ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும் நூல் விமர்சனம்

*****

● கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் என். ராமகிருஷ்ணன். கம்யூனிச இயக்க வரலாற்றை நூலாகப் படைத்தவர். பெரியார் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

தனது 82வயதில் மதுரையில் மரணமடைந்தார். முதுபெரும் கம்யூனிசத் தலைவர் தோழர் என். சங்கரய்யாவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது !

● பெரியார் தத்துவ வாதியா? அரசியல் வாதியா? சமூக சீர்திருத்த வாதியா? என்ற கேள்விக்கு பதில் தருவதற்கு, பெரியாரின் வாழ்வையும் பணியையும் விஞ்ஞான ஆய்வியல் முறையில் பகுப்பாய்ந்து அந்த வரலாற்றை தருவதற்கே இந்த நூலில் முயன்றுள்ளதாக நூலாசிரியர் தன்னிலை விளக்கம் தந்துள்ளார் !

● பெரியாருக்கும் கம்யூனிச இயக்கம், தோழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தோழர் சிங்காரவேலர் – தந்தை பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவர்.

இருவரும் பெரியாரின் குடிஅரசு இதழில் நிறைய எழுதியுள்ளார்கள். அதே போலத்தான் பெரியார் – ஜீவாவின் நட்பு!

● இவ்வாறு கம்யூனிச இயக்கங்களோடும் அதன் தலைவர்களோடும் பெரியார் கொண்ட நட்பைப் பற்றியும் பணியைப் பற்றியும் எழுதப்பட்ட இரண்டு கம்யூனிச முன்னோடித் தலைவர்களின் நூல்களைப் பற்றி இங்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன்!

● கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஏ.எஸ்.கே (ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி) எழுதிய நூல் – பகுத்தறிவின் சிகரம் பெரியார் !
பெரியார் மீது நிறைய பற்றும் மரியாதையும் வைத்திருந்தார்.

பெரியாரைப் பற்றி கம்யூனிச தோழர்களுக்கு சரியான கணிப்பு இல்லாதிருந்ததால் மிக வருத்தமுடன் இருந்தார். அதனால் பெரியாரைப் பற்றி உண்மையான தகவல்களை கொண்டு வர விரும்பி அந்த நூலைப் படைத்தார் !

● அந்த நூலில் தோழர் ஏ.எஸ்.கே கோடிட்டு காட்டிய மிக முக்கியமான தகவல் இதோ :

“பொதுவுடைமையை பேசியது கம்யூனிசம் என்றால், பொதுவுரிமையைப் பேசியவர் பெரியார்! ” என ரத்தின சுருக்கமாக எழுதியுள்ளார்.. உண்மைதானே ?

● ஒருவனுக்கு பொதுவுரிமை கிடைக்காவிட்டால், அவனுக்கு பொதுவுடைமையால் என்ன பயன் ? பெரியாரியம் என்பது மார்க்சியத்தை நோக்கி செல்லும் பாதை தானே ? இதை ஏன் கம்யூனிச தோழர்களில் பலர் விளங்கிக் கொள்ள வில்லை என நம்மையும் கேட்க வைத்தவர் தோழர் ஏ.எஸ்.கே !

● இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த தோழர் தா. பாண்டியன் எழுதிய நூல் – சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் !
பெரியாரின் நூற்றாண்டு விழாவின் போது (18.03.1979) ஈரோட்டில் அவர் ஆற்றிய உரையின் தொகுப்பு !

● தந்தை பெரியாரைப் பற்றி விவரிக்கும் போது தோழர் பேசியது – “பெரியார் செய்ததை எந்தப் பல்கலைக் கழகம் செய்தது? எந்த விஞ்ஞானி செய்தார்? இந்த சமுதாயத்தின் மீது அன்பு கொண்ட ஒரு மனிதரைத் தவிர, வேறு யாரும் செய்ய மாட்டார்கள்! அதைத்தான் பெரியார் செய்தார்!” எனக் குமுறினார். அவரும் பெரியாரை கம்யூனிஸ்ட்கள் சரிவர புரிந்து கொள்ள வில்லை என மனம் வருந்தினார்!

● இந்த நூலின் அறிமுகவுரையை எழுதும் வேளையில் தோழர் ஏ.எஸ்கே, தோழர் தா. பாண்டியன் நூல்களை நினைவுக் கொண்டு வருகிறேன் என்றால், இந்த நூலாசிரியர் தோழர் என். ராமகிருஷ்ணன் பெரியாரின் வரலாற்றை பதிவு செய்யும் போது –

“பெரியாரின் நாத்திகம் முரட்டுத் தனமானது. அவர் பேசிய நாத்திகம் விஞ்ஞான பூர்வமானது இல்லை. கம்யூனிச நாத்திகம் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டது. வர்க்கப் போராட்ட அனுபவம் மூலம் காலப்போக்கில் எல்லாம் மாறும்!” – என்று தனது ஆய்வை தெரிவித்துள்ளார்! இப்போது புரிந்திருக்கும் கம்யூனிஸ்ட்களில் பலருக்கு பெரியாரைப் பற்றிய கணிப்பு சரியில்லை!

● பெரியாரின் நாத்திகம் சாமன்ய மனிதனை புரியச் செய்யும் நாத்திகம் ! ‘ உலகையே பாயாக சுருட்டினான் ‘ என்று புராணத்தில் வரும் போது – ” உலகை சுருட்டியவன் எதன் மீது நின்று சுருட்டினான் ? ” என கேட்டார் பெரியார் ! மக்களுக்கு தெளிவு வந்தது..

விஞ்ஞான பூர்வ நாத்திகத்தை எத்தனை பேரிடம் கொண்டு சேர்த்தார்கள் இவர்கள்? என்று கேட்டால் என்ன பதில்?

● இந்த நூலில் எவ்வளவோ தகவல்கள் இருந்தாலும் நூலாசிரியர் மனதில் பெரியார் பற்றிய சிந்தனைகள் குறிப்பாக அவர் முனைப்பாக எடுத்து சென்ற நாத்திகம் பற்றிய கருத்துக்கள் – தமிழகத்தில் 50 முதல் 70 களில் கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பெரியாரை’ ஒரு பிற்போக்கு வாதியாக ‘ பேசியதையும் எழுதியதையும் நினைவுக்கு கொண்டு வருகின்றது!

● இறுதியாக ஒரே ஒரு தகவல் :
நாத்திகர்கள் கம்யூனிஸ்ட்களாக இருக்க வேண்டியதில்லை !
ஆனால் கம்யூனிஸ்ட்கள் கட்டாயமாக நாத்திகர்களாக இருக்க வேண்டும் ! அதுதான் விஞ்ஞானப் பூர்வ பொருள் முதல் வாதம் !

● அதன்படி பெரியார் நாத்திகர்! ஆனால் கம்யூனிஸ்ட் இல்லை ! ஒத்துக் கொள்வோம்!

ஆனால் கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்களா? …
இல்லை என்பதைத்தான் மேற்கு வங்கமும் கேரளமும் நமக்கு பாடமாக காட்டுகிறது!

இனி வரும் காலங்களிலாவது தந்தை பெரியாரை கம்யூனிஸ்ட்கள் சரியாக புரிந்து கொள்வார்கள் என எதிர் பார்ப்போம் !

****

ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும்.

– என். ராமகிருஷ்ணன்

– பாரதி புத்தகாலயம்

– முதல் பதிப்பு 2015

– பக்கங்கள் 224

– விலை: ரூ.210/-

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்.

You might also like