ஒரு இயக்குநர் சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை ஒரு படத்தில் பிரச்சாரமாகச் சொல்லலாம். வசனங்களின் வழியே சொல்ல வேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்களிலோ அல்லது காட்சிகளின் தன்மையிலோ அதனை வெளிப்படுத்தலாம்.
அதை விடுத்து, வேறொரு உணர்வைத் திரை முழுக்கப் பரப்பி வைப்பதன் மூலமாகவும் தான் விரும்பிய விஷயத்தைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தலாம்.
‘அயோத்தி’ மூலமாகப் புதுமுக இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்தி அப்படியொரு மாயாஜாலத்தைச் செய்திருக்கிறார். ‘எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகுவதுதான் தமிழ் மண்ணில் வாழ்பவர்களின் இயல்பு’ என்பதைக் கூறியிருக்கிறார்.
இந்தி மட்டுமே தெரிந்த நான்கு மனிதர்களை தமிழ் மண்ணில் நடமாடவிட்டிருப்பதும், மொழி புரியாதபோதும் அவர்களுக்கு இங்கிருப்பவர்கள் உதவுவதும் தான் ‘அயோத்தி’யை நாம் ரசிப்பதற்கான அடிப்படை அம்சம்.
முதலும் முடிவும்..
அயோத்தியைச் சேர்ந்த நடுத்தர வயது மனிதரான பல்ராம் (யஷ்பால் சர்மா), தன் மனைவி ஜானகி (அஞ்சு அஸ்ரானி), மகள் ஷிவானி (ப்ரீத்தி அஸ்ரானி), மகன் சோனு (அத்வைத்) உடன் தீபாவளிக்கு முந்தைய நாள் மதுரைக்கு வருகிறார்.
அன்றிரவே டாக்ஸியில் ராமேஸ்வரம் சென்று, விடியற்காலையில் சூரியோதயம் பார்க்க வேண்டுமென்பது அவரது விருப்பம். ஆனால், அது நிகழவில்லை. காரணம், எல்லோருடனும் மோதலைக் கடைப்பிடிக்கும் பல்ராமின் சுபாவம்.
டாக்ஸி டிரைவரை (தருண் குமார்) வேகமாகச் செல்லுமாறு டார்ச்சர் செய்து, பாக்கைக் குதப்பி கார் கண்ணாடியில் துப்பி, ஒருகட்டத்தில் கெட்டவார்த்தையால் அர்ச்சனை செய்து, டிரைவருக்கும் தனக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்படக் காரணமாகிறார் அந்த மனிதர்.
அதனால், கார் தறி கெட்டுச் சென்று விபத்துக்குள்ளாகிறது. அதில், ஜானகி பலத்த காயமடைகிறார். அடிபட்ட ஐந்து பேருக்கும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
பின்னந்தலையில் காயப்பட்டிருக்கும் ஜானகியை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார் மருத்துவர்.
ஆம்புலன்ஸும் டிரைவரும் ஏதும் கிடைக்காத காரணத்தால், ஒரு தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வருகிறார் டாக்ஸி டிரைவரின் நண்பர் (சசிகுமார்) ஒருவர்
ஆனால், செல்லும் வழியிலேயே ஜானகியின் உயிர் பிரிகிறது. அதன்பிறகு, சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று உடற்கூறாய்வு உள்ளிட்ட செய்முறைகளை நிறைவேற்றியாக வேண்டும் என்கிறார் அரசு மருத்துவமனை ஊழியர்.
ஆனால், தன் மனைவியின் பிணத்தை ‘போஸ்ட்மார்ட்டம்’ செய்வது தன் மத தர்மத்திற்கு எதிரான செயல் என்று மறுப்பு தெரிவிக்கிறார் பல்ராம். தங்களை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறுகிறார்.
அப்போது ஏற்படும் களேபரத்தில், ஆம்புலன்ஸில் இருக்கும் மருத்துவமனை ஊழியரை அடித்து விடுகிறார் டாக்ஸி டிரைவரின் நண்பர். அதனால், அவர்களனைவருமே காவல் நிலையம் செல்ல நேரிடுகிறது.
அதன்பிறகுதான், தீபாவளி போன்ற ஒரு பண்டிகை நாளன்று அரசு அலுவலகங்களில் உரிய கடிதங்களைப் பெற்று சடலத்தை அயோத்திக்கு எடுத்துச் செல்வதென்பது முயற்கொம்பைப் பிடிக்கும் காரியம் என்பது புரிகிறது.
அது தெரிந்தபிறகும், மொழி தெரியாமல் அவதிப்படும் பல்ராம் குடும்பத்தினருக்கும் ஆம்புலன்ஸை ஓட்டிவரும் அந்த நபர் உதவுகிறாரா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘அயோத்தி’.
கதை காசியில் தொடங்கினாலும், இறுதியாக ராமேஸ்வரத்திலுள்ள ஒரு மசூதியில் முடிவடைகிறது. இதிலிருந்தே படம் பேசும் விஷயம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
மாறுபட்ட சசிகுமார்!
சிறிய சண்டைக்காட்சியின் வழியே சசிகுமாரின் அறிமுகம் காட்டப்படுகிறது. அதனைத் தவிர்த்துப் பார்த்தால், அவர் தனது ஹீரோயிசத்தை காட்ட திரைக்கதையில் இடமே இல்லை.
ஆனாலும், அதே ‘நாடோடி’, ‘போராளி’ சசிகுமாரை மீண்டும் திரையில் காண முடிவதுதான் ஆச்சர்யம். அதேபோல, இந்த படத்தில் அவருக்கு ஜோடியும் கிடையாது.
‘என்னய்யா மனுஷன் இவன்’ என்று ரசிகர்கள் சொல்லும்விதமாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் யஷ்பால் சர்மா. அவர்தான் இக்கதையில் வில்லன். மனைவி இறந்த துக்கத்தை அவர் உணருமிடம் நிச்சயம் படம் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கும்.
யஷ்பாலின் மகளாக வரும் ப்ரீத்தி அஸ்ரானிக்குத் தமிழில் இது முதல் படம். ஆனால், பல காட்சிகளில் குளோஸ்அப்பில் அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்த தைரியத்திற்குக் காரணம், அவரது அபாரமான நடிப்புத் திறமை.
அழுது சிவந்த முகத்துடன் இயல்பான வடநாட்டுப் பெண்ணைக் கண் முன்னே நிறுத்தினாலும், சோகத்தின் நடுவே பெருமிதமான நினைவுகளை அசை போடும் இடங்களில் மட்டும் ப்ரீத்தியின் முகம் புன்னகைப்பது போன்றிருக்கிறது.
அஞ்சு அஸ்ரானி தோன்றும் காட்சிகள் குறைவென்றாலும், அவை மொழி தெரியாத ரசிகர்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் அத்வைத் படம் முழுக்க சோகமாகவே இருப்பது அருமை.
நகைச்சுவைக்கு இடமில்லாதபோதும் சசிகுமார் உடன் திரியும் நண்பராகப் படம் முழுக்க வந்திருக்கிறார் புகழ். அதில் ஒரு நொடி கூட நெருடலாகத் தெரியவில்லை.
போலவே வினோத், சேத்தன், தமன் குமார், போஸ் வெங்கட், சாய் ரமணி, காஸ்ட்யூம் டிசைனர் தட்ஷா பிள்ளை உட்பட சுமார் ஒரு டஜன் பாத்திரங்கள் ஆங்காங்கே தங்களுக்கான முக்கியத்துவத்தோடு திரையில் தென்படுகின்றனர். இது வெகு அபூர்வம்.
எக்ஸ்ட்ரீம் குளோஸ் அப்பாக இருந்தாலும், பரந்து விரிந்த பரப்பைக் காட்டும் ஹெலிகேம் ஷாட்டாக இருந்தாலும், திரைக்கதையில் இருந்து துளியும் விலகிச் செல்லாமல் காட்சிகளின் தன்மைக்கேற்றவாறு அமைந்திருக்கிறது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு.
வெவ்வேறு லொகேஷன்களை தாண்டி, எந்தெந்த காட்சிகள் செட்டுக்குள் படம்பிடிக்கப்பட்டது என்ற வித்தியாசம் தெரியாதவண்ணம் அமைந்துள்ளது துரைராஜின் கலை வடிவமைப்பு.
‘பீல்குட்’ திரைக்கதைக்கேற்ப ‘எபெக்ட்’ ஏதுமில்லாமல் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ். இரண்டு மணி நேரமே ஓடினாலும், படம் மெதுவாக நகர்வதாக உணர வைக்கிறது திரைக்கதை.
மதிச்சியம் பாலா திரையில் தோன்றும் ‘திருட்டுப்பயலே’ பாடல் யதார்த்தமாக நகரும் கதையில் சிறிதாகப் பொழுதுபோக்கைத் தருகிறது. அதேநேரத்தில் ‘காற்றோடு பட்டம் போல’ மனதை வாட்டுகிறது.
பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் கடைசி ரீல் வரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். ‘ஓம் வெள்ளிமலை’க்குப் பிறகு, இந்தாண்டில் அவருக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது ‘அயோத்தி’.
பீல்குட் அனுபவம்!
‘அயோத்தி’ தந்திருக்கும் இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி, 2023ஆம் ஆண்டின் பெருமைக்குரிய அறிமுகங்களில் ஒருவர்.
தான் சொல்ல வந்ததைத் திரையில் மிகச்சன்னமாகத் தெரிவிக்க, மாபெரும் தைரியம் வேண்டும்.
குழந்தைக்குச் சோறூட்டும் தாய் போல, எந்த கருத்தையும் ரசிகர்களுக்கு ஊட்ட முயலாதது அவரது சிறப்புகளில் ஒன்று.
கண்டிப்பாக இது வழக்கமான படம் அல்ல. ஆனால், அந்த தோற்றம் தரும் வகையில் ஒரு சண்டைக்காட்சியும் பாடலும் இதிலுண்டு. ஒரே நாளில் அரசு அலுவலகங்களில் ஒப்புதல் கடிதம் வாங்குவதெல்லாம் யதார்த்தத்தில் சாத்தியமில்லாதது.
அதையெல்லாம் ஏற்றுக்கொண்டோம் என்றால், மனிதம் தேடும் அற்புதமான பயணமாக ‘அயோத்தி’ இருக்கும்.
‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கும் யஷ்பால் சர்மாவின் பாத்திரம், மொபைலில் தனக்கு வேண்டியவரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்பதாக ஒரு காட்சி வரும்.
அதன்பிறகு, திரைக்கதையில் எங்குமே அதன் பலன் என்னவென்பது காட்டப்பட்டிருக்காது. அதுதான் இயக்குனர் மந்திரமூர்த்தியின் ‘டச்’ என நம்புகிறேன்.
அதேபோல காவல் துறையின், மருத்துவத் துறையின் தினசரிச் செயல்பாடுகள் மீதான விமர்சனமும் படத்தில் உண்டு.
குறிப்பாக, உடற்கூறாய்வு செய்யும் கீழ்நிலைத் தொழிலாளிகளை இயக்குனர் காட்டியிருக்கும் விதம் நிச்சயம் எதிர்ப்புகளைக் கிளப்பும். இது போன்ற குறைகள் மேலும் தென்படலாம்.
அவற்றை மீறி, யதார்த்தமான வாழ்வைப் பிரதிபலிக்கும் காட்சிகளைக் கொண்டு உணர்வுப் போராட்டமாகத் திரைக்கதையை மாற்றியதில் வெற்றி பெற்றிருக்கிறார் மந்திரமூர்த்தி.
முக்கியமாக, பெருங்கூட்டம் திரையில் தோன்றுமிடங்களில் அவர் உருவாக்கியிருக்கும் நேர்த்தி அபாரமானது. அதுவே, ஒரு ‘பீல்குட் படம்’ பார்த்த திருப்தியை நம் மனதில் நிறைக்கிறது.
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியாகியிருக்கும் ‘அயோத்தி’ ரசிகர்களின் கவனத்தைக் கவர்வதில் தாமதம் ஏற்படலாம். ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து அகற்றப்படும் நிலை உருவாகலாம்.
ஆனால், ஓடிடியில் வெளியானபிறகு இப்படம் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுவது நிச்சயம். அதுவே இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் படக்குழுவினர் மீது பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சும்!
– உதய் பாடகலிங்கம்