ஜெயலலிதாவுக்கு அப்பாவாக நடிக்க மறுத்த நடிகர்!

சினிமாவில் சிலரின் அறிமுகப் படங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அது மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படியொரு படம் ‘வெண்ணிற ஆடை’.

இந்தப் படம் எல்லோரிடமும் ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், இந்தப் படம்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை, நாயகியாக அறிமுகப்படுத்தியது.

அந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா! கூடவே, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோருக்கும் இதுதான் முதல்படம்.

அதனால்தான் இவர்கள், ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம், 1965 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், ‘என்ன என்ன வார்த்தைகளோ’, ‘கண்ணன் என்னும்..’ என்பது உட்பட அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்.

முக்கோணக் காதல் கதையைக் கொண்ட இந்தப் படத்தை, 1962 ஆம் ஆண்டு வெளியான ‘டேவிட் அண்ட் லிசா’ என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பல படங்கள் ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்டன.

இந்தப் படத்தில் ஜெயலலிதா, தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஸ்ரீகாந்தை காதலிப்பார். ஸ்ரீகாந்த், நிர்மலாவைக் காதலிப்பார். இறுதியில் இவர்கள் காதல் என்னவாகிறது என்பதுதான் கதை.

இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக, தணிக்கையில் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். ரிலீஸ் ஆன நேரத்தில் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விமர்சனங்கள் வெளியான பிறகு, பிக்அப் ஆகி நூறு நாட்கள் ஓடியது.

இதில் ஜெயலலிதாவின் அப்பாவாக நடித்தவர் மேஜர் சுந்தர்ராஜன். அப்போது அவருக்கு அதிக வயதில்லை. ‘பட்டினத்தார்’ படத்தில் அறிமுகமான மேஜர் சுந்தர்ராஜன், ‘வெண்ணிற ஆடை’க்கு முன் நான்கைந்து படங்களில்தான் நடித்திருந்தார்.

அதனால், ஜெயலலிதாவுக்கு அப்பாவாக நடிக்க முதலில் மறுத்து விட்டார் மேஜர் சுந்தர்ராஜன்.

‘ஹீரோவாகத்தான் நடிப்பேன், அப்பா கேரக்டர் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கவும் செய்தார்.

அந்த நேரத்தில்தான் அவர் நண்பர் ஒருவர், “ஹீரோவாக நடித்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்காது.

அப்பாவாக நடித்தால், எப்போது வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும்” என்று சொன்னார்.

நண்பர் சொன்னது உண்மை என்று உணர்ந்த சுந்தர்ராஜன், பிறகு ‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஜெயலலிதாவுக்கு அப்பாவாக நடிக்க சம்மதித்தார்.
படத்தில் அவர் நடிப்புப் பேசப்பட்டது.

அவர் நண்பர் சொன்ன மாதிரியே, அதிகமான படங்களில் அவர் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலேயே நடித்தார். அதில் பெரும்பாலானவை, அப்பா வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– அலாவுதீன்

You might also like