‘தாய்’ தலையங்கம் :
அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.
அதோடு தந்தை பெரியார், கார்ல் மாக்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தமிழகத் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
டெல்லியில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான நிகழ்வுகள் வெவ்வேறு காரணங்களை முன்னிட்டு நடந்திருக்கின்றன்.
ஆனால், சாதி, மத பேதங்களைக் கடந்து கல்வியை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர்கள் ஒன்று சேரக்கூடிய பல்கலைகழகம் போன்ற ஒரு உயர்க் கல்வி நிறுவனங்களில் இம்மாதிரியான பாகுபாடுகளும், இம்மாதிரியான தாக்குதல்களும் நடப்பது எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல.
இது எந்த அளவிலும் நம்முடைய மன முதிர்ச்சியைக் காட்டுவதாக அமையாது.
அதே சமயம் எப்படி வட மாநிலங்களில் தமிழர்களோ அல்லது தமிழ் மாணவர்களோ தாக்கப்படக் கூடாது என்று சொல்லுகின்றோமோ அதே அடிப்படையில் இங்கு தமிழகத்திற்கு வந்து குடியேறி இருக்கிற வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்களையும் நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது சிலர் நடத்தியிருக்கிற தாக்குதல்கள் தொலைக்காட்சிகளில் வெளிவந்து அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
இங்கு தமிழகத்தின் வெவ்வேறு கட்டுமானப் பணிகளிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளிலும் தங்களுடைய உழைப்பால் பங்கேற்று இருக்கிற வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பை வளர்த்த நிலையில் இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பதையும் மனித உரிமை ஆர்வலர்களும் பாரபட்சமற்ற மனநிலை கொண்டவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவின் எந்த பகுதிக்கும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் படிக்கச் செல்லலாம் அல்லது பணியாற்றச் செல்லலாம் அல்லது குடியேறச் செல்லலாம். இது அவரவர் உரிமை சார்ந்த விஷயம்.
இதில் மாநிலப் பிரச்சனைகள் குறுக்கிட்டுத் தாக்குதல் நடத்தும் அளவிற்கு போயிருப்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்கிற கவனம் நம் அனைவரிடமும் இருக்கட்டும்.