இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்!

எழுத்தாளர் இராசேந்திர சோழனுடன் சந்திப்பு

இராசேந்திர சோழன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமையாகத் திகழ்பவர்.

இலக்கியத்தின் பன்முக வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்ததோடு, தமிழ்த் தேச அரசியலிலும் காலூன்றி உறுதியாக நின்றவர் என்று சொல்கிறார் கண.குறிஞ்சி.

எழுத்தாளர் இராசேந்திர சோழனைச் சந்தித்து உரையாடியது பற்றி அவர் எழுதியுள்ள பதிவு நம்மை உருகவைக்கிறது.

பல்லாண்டுகளாக அவரோடான தோழமை தொடர்ந்திருந்த நிலையில், அண்மையில் அவர் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சமயத்தில் அவரைச் சந்திக்க மிகவும் விரும்பினேன்.

இந்த வாரம் சென்னை சென்ற பொழுது இனிய தோழர், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பாவேந்தன் அவர்களுடன் இராசோ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தோம்.

சக்கர நாற்காலியில்தான் இயக்கம். மிகவும் இளைத்திருந்தார். இருப்பினும் அவருக்கே உரித்தான கம்பீரம் குறையவில்லை.

மேலும் அவரால் தொடர்ந்து பேச இயலவில்லை. இருப்பினும், விடாப்பிடியாகப் பல செய்திகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பாகங்களாகக் கொண்டுவர இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் முதல் பகுதி தனிநூலாக வெளிவரும் எனவும் குறிப்பிட்டதோடு, அதற்கான மெய்ப்பையும் அப்பொழுது அவர் திருத்தம் செய்து கொண்டிருந்தார்.

மென்மேலும் பேசுவதற்கு அவர் விரும்பினாலும், அவரது பலவீனமும் சோர்வும் எங்களுக்கு மிகுந்த குற்ற உணர்வை உண்டாக்கியது. எனவே விரைந்து விடைபெற முயன்றோம்.

அப்பொழுது அவர் சொன்னார், “நண்பர்கள் வந்தால், நான் எப்பொழுதும் வாயிலில் சென்று வரவேற்பேன். அதேபோல், அவர்கள் விடைபெற்றுச் செல்லும்பொழுது, கதவு வரை வந்து வழி அனுப்புவேன். இப்பொழுது உங்களை அப்படி அனுப்பமுடியவில்லை” என்றார்.

நாங்கள் மிகவும் கரைந்துபோனோம்.

இதுதான் தோழர் இராசோ, அந்த மாமனிதர் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்பதே அனைவரது வேட்கை.

You might also like