இயக்குநர் பிருந்தா சாரதியின் நெகிழ்சியான பதிவு
‘சண்டைக் கோழி- 2’ திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில்.
அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும் எல்லாச் சண்டைக் கலைஞர்களுக்கும் ஒரே நேரத்தில் விதவிதமாக இவர் குரல் தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
‘ஆனந்தம்’ படம் முதல் நான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் டப்பிங் குரல் கொடுக்க வருவார்.
கையில் ஏதேனும் வித்தியாசமான தின்பண்டம் இருக்கும்.
அவித்த பனங்கிழங்கு….
சுட்ட சோளக்கருது…
தேன் குழல் முறுக்கு… இப்படி….
அடைந்த புகழை விட பெரிய கலைஞன் அவர். ஆனால் குறையின்றி வாழ்ந்தார்.
தன்னைச் சுற்றி ஈரத்தையும் பசுமையையும் பரப்பினார். உதவி தேவைப்பட்ட நண்பர்களுக்கு உதவினார்.
பெருமழை, பெருந்தொற்று ஆகிய நெருக்கடி நேரங்களில் தன் பகுதியில் களப் பணி ஆற்றினார்.
சந்தித்தாலே சிரிப்பை உதடுகளில் அல்ல… உள்ளத்துக்கு உள்ளேயும் பற்ற வைத்து விடுவார்.
நாள் முழுக்க அது நமக்குள் வெடித்துக் கொண்டு இருக்கும். யாரேனும் பார்த்தால் தானே எதற்கு சிரிக்கிறான் என நம்மைச் சந்தேகிக்கப்படுவார்கள்.
ஏ முதல் இசட் வரை பல விதமான ஜோக்குகளைப் பரிமாறுவார்.
எல்லாவற்றையும் விட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பக்தர். பாடல் வரிகள், படக்காட்சிகள், அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றை உணர்ச்சி பொங்கக் கூறுவார்.
இருப்பதில் கொஞ்சம் இல்லாதவர்க்குக் கொடுப்பதற்கே எனும் பாடத்தை அவரிடம் கற்றுக் கொண்டவர்.
அவரோடு பழகிய நினைவுகள் நீர்க்குமிழிகளாக நெஞ்சில் கொப்பளிக்கின்றன.
எனக்கு மட்டும் அல்ல… அவரோடு பணியாற்றிய யாருமே அவரை மறக்க முடியாது.
நீரில் எழுதும் எழுத்துதான் வாழ்க்கை என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.
அன்பு பெருகும் சொற்களால் அஞ்சலி செலுத்துகிறேன். போய் வாருங்கள் மயில்…
*
– நன்றி: பிருந்தா சாரதி முகநூல் பதிவு
*