மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும் காப்பாற்றிக் கொள்ள உத்தவ் தாக்கரே தரப்பு முயன்றது. ஏக்நாத் ஷிண்டே தரப்பும் சின்னத்தைக் கைப்பற்ற நினைத்ததால் சிவசேனையின் சின்னமாக வில் – அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியாக அறிவித்தது.
அதோடு அந்தக் கட்சியின் சின்னம் மற்றும் கொடியையும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஒதுக்குவதாகவும் அறிவித்தது.
இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணிக்கு சின்னம் வழங்கியது ஜனநாயகப் படுகொலை என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.