பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து…

கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச மலர்’ படத்தில் சிவாஜியும், நீயும் அண்ணன் தங்கையாக நடித்தீர்கள்.

உடன் பிறந்த பிறப்பின் பாசத்தை ஆயிரம் பக்கங்கள் எழுதிய இலக்கியங்கள் காட்டியிருப்பதை விட, அதிகமான பாசத்தை அந்த நடிப்பும், படமும் மக்களிடத்தில் ஏற்படுத்திவிட்டதே?”

நடிகை சாவித்ரி : பாசமலர் படக் கதையின் முடிவை ட்ராஜடி பண்ணுவதா, காமெடி பண்ணுவதா என்று பலத்த விவாதம் இருந்தது.

நாங்க அதை டிராஜடி பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தோம். பண வசூலைப் பார்த்துக் காமெடியாகப் பண்ணிவிடுவது என்று முடிவு செய்து விட்டார்கள்.

நடுவில் ‘இந்து’ பத்திரிகையில் இரண்டு செய்தி போட்டிருந்தார்கள் இல்லையா? அண்ணன் இறந்தவுடன் தங்கை இறந்து போன செய்தி. அதோடு ஜூபிடர் சோமு இறந்தவுடன் அவருடைய பெண் இறந்த செய்தி. அதைக்காட்டி இயற்கையிலும் கதை இப்படி முடிந்தால் தானே பொருத்தமாக இருக்கும் என்று சொன்னோம்.

அந்தப் படத்தில் வரும் ட்ராஜடி காட்சிக்காக ஒரு மாதம் நான் சரியாகச் சாப்பிடாமல், வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வது, தண்ணீரைக் குடிப்பது என்று இருந்தேன். அப்போது தான் வெற்றிலை பாக்குப் பழக்கம் ஜாஸ்தியாகி விட்டது”

நன்றி : ‘இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?’ – என்ற தலைப்பில் திரைஞானி எழுதிய நூலில் இருந்து ஒரு பகுதி.

வெளியீடு : வசந்தா பதிப்பகம்,
சென்னை-88.

You might also like