சத்தியவாணி முத்து நூற்றாண்டு சிறப்புப் பதிவு
திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100 – வது பிறந்தநாள் இன்று!
1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சென்னையின் ஜார்ஜ் டவுனில் ஜானகியம்மாள் – நாகைநாதன் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் சத்தியவாணி முத்து.
இவரது தந்தை நாகைநாதனுக்கு நீதிகட்சி மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் தொடர்பான இயக்கங்களில் ஈடுபாடு இருந்ததால், சத்தியவாணி முத்துவும் தனது தந்தையைப் பின்பற்றத் தொடங்கினார்.
தனது தொடக்க கல்வியை செங்கல்பட்டிலும் உயர்க்கல்வியை எர்ணாகுளத்திலும் படித்த சத்தியவாணி முத்து, ஹோமியோபதி மருத்துவம் பயின்று மருத்துவரானார்.
தனது 19-வது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட எம்.எஸ்.முத்து என்பவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட சத்தியவாணி, தனது 20-வது வயதில் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவரானார்.
சென்னைக்கு வந்த அம்பேத்கருக்கு பெரியார் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றிய சத்தியவாணி முத்துவின் பேச்சு பெரியாரை ஈர்த்தது.
பெரியார் அழைப்பின் பேரில் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.
1949-ம் ஆண்டில் திராவிடர் கழகத்தில் இருந்து திமுகவை அண்ணா தொடங்கியபோது, அக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
1953 ராஜாஜி குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக நிறைமாத கர்பிணியாக இருந்து ராஜாஜியின் வீட்டை முற்றுகையிட்டு சிறை சென்றார்.
1956-ம் ஆண்டில் திமுகவின் மகளிர் மன்ற தலைவரான சத்தியவாணி முத்து, திமுகவில் உள்ள தலைவர்கள் முதல் தொண்டர்களின் மனைவிகளை கட்சியில் இணைத்து மகளிர் பாசறைக்கு வலுசேர்த்தார்.
1965-ம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் நிறை மாத கர்பிணியாக சிறை சென்று சிறையிலேயே குழந்தை பெற்றார்.
1957-ம் ஆண்டில் பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற சத்தியவாணி முத்து 1962 தேர்தலில் தோல்வியை தழுவினார்.
1967-ம் ஆண்டு மீண்டும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் 8 அமைச்சர்களில் ஒரு அமைச்சராக பொறுப்பேற்று, சமூகநலம், மீன்வளம், செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட இலாகாகளை கவனித்தார்.
1968-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கீழ்வெண்மணி படுகொலைக்கு பின்னர் அப்பகுதியில் அமைதி திரும்பும் நடவடிக்கையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தினார்.
அண்ணா மறைவுக்கு பிறகு அடுத்து அமைந்த கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் அங்கம் வகித்த சத்தியவாணி முத்து கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து 1974-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
பின்னர் 1977 தேர்தலுக்கு முன்னதாக அதிமுக உடன் தனது கட்சியை இணைத்தார்.
1977 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சத்தியவாணி முத்து, 1979-ல் அமைந்த பிரதமர் சரண்சிங் அரசில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று திராவிடர் இயக்க வரலாற்றில் முதன்முதலில் மத்திய அமைச்சராகி புதிய வரலாற்றை படைத்தார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக 1999ஆம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி காலமான சத்தியவாணி முத்துவின் உடல் மீது அவரின் ஆசைப்படி திமுகவின் கருப்பு சிவப்பு கொடி போர்த்தப்பட்டு அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒடுக்கப்பட்ட இனத்திற்கான ஒளி சத்தியவாணி முத்து!
- நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இதழ்