வ.உ.சி.யைக் கண்ட தியாகி ந.பாலசுந்தரம்!

திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சார்ந்த மதிப்புக்குரிய தியாகி ந‌.பாலசுந்தரம் பற்றி ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அந்தப் பதிவிலிருந்து…

என் சிறுவயதில் பார்த்த வேளையில் எப்போதும் காந்தி குல்லா போட்டு கதர் உடுத்தி வித்தியாசமாக இருப்பார். ஜோவியலாக இருப்பார்.

ஆனால் சமீபத்தில் திருவில்லிபுத்தூரைச் சார்ந்த துள்ளுக்குட்டி அவர்கள் இந்த தியாகி ந. பாலசுந்தரம் குறித்து பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகே எனக்கு இவர் இவ்வளவு முக்கியமானவராக இருந்தும் நாம் கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டோமே என்று குற்ற உணர்வு உண்டானது‌.

எங்கள் ஊருக்கு சென்ற வேளையில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

காமராஜர் அமைச்சரவையில் இருந்த கக்கன் அவர்கள் இவரைத் தேடி கிராமத்துக்கு வருவாராம்.

எங்க ஊருக்கு பூமிதான இயக்க வினோபா வந்ததையும் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் எதிர்பாராத விதமாக பெரியவர் வ.உ.சி. நம் ஊருக்கு வந்திருக்கிறார் தெரியுமா என்றார்?

எனக்கு ஒரே ஆச்சரியம். பெரியவர் காலடிபட்ட மண் எங்கள் ஊரா? விவரமாக சொல்லுங்க என்று நான் ஆவலுடன் கேட்க, திருவில்லிபுத்தூருக்கு கோர்ட் வேலையாக வந்த தருணத்தில் எங்க ஊருக்கு வந்து இன்று பஞ்சாயத்து நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடத்தில் பெரியவர் வ.உ.சி. அமர்ந்திருந்தாராம்.

இடுப்புக்கு கீழே பஞ்ச கச்சம் மாதிரி வேட்டி அணிந்து மேலே கோட் உடையும் தலையில் தலைப்பாகையும் அணிந்து காணப்பட்டாராம்.

கப்பலோட்டிய தமிழன் நம் ஊருக்கு வந்திருக்கிறாராம் என்று ஊரே பரபரப்புடன் பெரியவர் உட்கார்ந்த அலுவலகத்தை நோக்கி செல்லும் வேளையில் நானும் சிறுவயதில் போய்ப் பார்த்த ஞாபகம் இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது.

ஆனாலும் சிறுவயது என்பதால் வேறு ஒன்றும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரை பார்த்தது என் கொடுப்பினை என்று கூறி எனக்கு ஆச்சரியத்தை அளித்தார் இந்த 93 வயது பெரியவர் தியாகி.

பெரியவர் வ.உ.சி. எங்க ஊருக்கு வருகைதந்த வேளையில் எங்க கிராமத்து முன்சீப் குடும்பத்தார் அவரது வருகையையொட்டி கூடஇருந்து கவனித்த செய்தியையும் கூறினார். அந்த குடும்பம் தற்போது எங்க ஊரில் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு பெரியவர் குறித்த ஆய்வில் இயங்கியிருந்தால், இதுபோன்ற பல வாய்மொழி அளவிலான செய்திகளை சேகரித்து பெரியவர் குறித்த ஒரு அனுமானம் கூடுதலாக உருவாகியிருக்கும்.

இந்த தமிழ் சமூகத்தில் காந்தி அமர்ந்த ஒவ்வொரு இடத்தையும் இந்த தேதியில் இங்கு வந்தார், அமர்ந்தார் என்று ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

இவருக்கு அப்படி ஒரு ஆவணப்படுத்தும் எண்ணம் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தமும் மேலிடுகிறது.

இவர் பெரியவர் வ.உ.சி.யை சந்தித்த வருடம் 1934 அல்லது 1935 இருக்கலாம்.

இவருக்கு வயது அந்த சமயத்தில் நான்கு அல்லது ஐந்து வயது இருந்திருக்கலாம்.

கொசுறு தகவல்: ஆஷ் கொலை வழக்கில் எங்கள் ஊரைச் சார்ந்த நிலக்கிழார் கணபதியா பிள்ளை என்பவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்து அனுப்பப்பட்டவர் என்பதையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

You might also like