சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர்.
எனவே கடந்த ஏப்ரல் மாதம் பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் விதி மீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 09.02.2023 அன்று 159 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 9,523 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ஆன்லைன் கட்டணம் மூலம் ரூ.28,82,270 அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் சென்னையில் 166 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு இயக்கத்தில் 5,336 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 அபராதத் தொகையாக மாத தொடக்கத்தில் வசூலிக்கப்பட்டது.
இந்த தொடர் நடவடிக்கையின் விளைவாக நிலுவையில் இருந்த 14,859 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இந்த மாதத்தில் மட்டும் ரூ.90,52,690 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.