புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி சரியாக நடத்த முடியாத சூழல் இருந்ததால், இந்த ஆண்டு பிரமாண்டமாகக் கண்காட்சியை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டது.
அதன்படி கடலூர் சாலையில் உள்ள ஏ.எஃப்.டி மைதானத்தில் நடந்த 33-வது மலர்க் கண்காட்சியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், தானியங்களால் தயாரிக்கப்பட்ட ஆயி மண்டபம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை, மயில், பென்குயின் உள்ளிட்ட அலங்காரத்தைப் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் விவசாயம் சார்ந்த துறைகளில் உள்ள புதிய விதைகள், உரம், பயிர் பாதுகாப்பு ரசாயனம், எந்திரங்கள், உபகரணங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 13,000 அலங்கார செடிகளும், மலர் செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்துடன் வேளாண் துறையால் உற்பத்தி செய்யப்பட்ட 33,000 மலர் செடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அரசு நிறுவனமான பாசிக் மற்றும் தனியார் விற்பனையாளர்கள் மூலம் தரமான மலர், கனி, அலங்கார செடி வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல மாடித் தோட்டம், தொட்டி வளர்ப்பு, மூலிகைத் தோட்டம், வீட்டுத் தோட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
கண்காட்சியின் இறுதி நாளான நாளை நடைபெறும் நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.