இளையபெருமாள் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்!

விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

சமூக சீர்திருத்தவாதி எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தலித் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான எல். இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் தொடங்குகிறது.

மக்களவையில் மூன்று முறை உறுப்பினராக இருந்த அவர், பட்டியல் சாதியினரின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை விசாரிக்கும் முதல் தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது விலைமதிப்பற்ற சேவையை ஒன்றிய அரசு அங்கீகரித்து அவரது நூற்றாண்டு விழாவை உரிய முறையில் கொண்டாட வேண்டும்.

எல்.இளையபெருமாள் அவர்கள் விரிவாக சுற்றுப்பயணம் செய்து, பட்டியல் சாதியினரின் மேம்பாட்டிற்கான மதிப்புமிக்க பரிந்துரைகளை வழங்கும் பட்டியல் சாதியினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு’ என்ற தனது அறிக்கையை சமர்ப்பித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு இந்த அறிக்கை முக்கிய காரணம்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு, தலித்துகளின் துயரங்களை அறிய இந்தியா முழுவதும் பயணம் செய்து அவற்றைத் தீர்க்க குரல் கொடுத்த ஒரே தலைவரான எல்.இளையப்பெருமாளின் நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அவருக்கு சிலை நிறுவ வேண்டும்” என்று விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like