சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம், செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக மாதந்தோறும் அதற்கான தரவரிசையை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த டிசம்பா் மாதத்துக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநா் சாந்திமலா் அண்மையில் வெளியிட்டார்.
அதில், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2-ம் இடத்தையும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடா்ந்து முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.