கேங்க்ஸ்டர் கதை என்றாலே வெட்டு, குத்து, ரத்தம், துரோகம், பழிக்குப் பழி என்றிருக்கும். சாதாரண ரசிகர்கள் அக்கதையுடன் பொருந்திப் போவது எளிதல்ல.
‘தீவார்’ (தமிழில் ‘தீ’) போன்ற படங்கள் தாய்ப்பாசத்தையும் காதலையும் பிணைத்து, ஒரு நல்ல மசாலா படமாக மாறின.
பெருவெற்றி பெற்ற ‘கேஜிஎஃப்’ கூட அந்த விதையில் இருந்து கிளை விட்ட இன்னொரு விருட்சம் தான்.
இப்போது அந்த ‘கேஜிஎஃப்’ தாக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘மைக்கேல்’. சந்தீப் கிஷன், திவ்யான்ஷா, கவுதம் மேனன், அனுசுயா பரத்வாஜ், அய்யப்ப சர்மா, வருண் சந்தேஷ் மற்றும் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
யார் இந்த மைக்கேல்?
பதின்ம வயதில் இருக்கும் ஒரு சிறுவன் மும்பைக்கு வருகிறான். ஒரு தாதாவை ஒருவன் கொல்ல முயற்சிக்க, அவரைக் காப்பாற்றுகிறான். அதன்பின், அவரது கையாளிடம் வளர்கிறான். அவன் தான் நாயகன்.
வழக்கம்போல, பெரியவன் ஆனதும் அதே தாதாவிடம் வேலைக்குச் சேரும் சந்தர்ப்பம் வருகிறது. அப்போது, தன்னைத் தாக்கத் திட்டம் வகுத்த ஒருவரையும் அவரது மகளையும் கொல்லச் சொல்லி நாயகனை அனுப்புகிறார் அந்த தாதா.
அவரைக் கொல்வதற்குப் பதிலாக காதலில் விழுகிறார் நாயகன். ஏனென்றால், அந்த பெண் தான் நாயகி.
காதல் ஆக்கிரமித்தாலும், அப்பெண்ணின் தந்தையை
க் கொன்றே தீர்வது என்று களமிறங்குகிறார் நாயகன். அப்போது நடக்கும் மோதலில், அந்த தாதாவைக் கொல்லச் சொன்னது அவரது மகனே தான் என்று தெரிய வருகிறது.
அதற்குள் நாயகன், நாயகி, அவரது தந்தை மூவரையும் கொல்ல முயற்சிக்கிறார் தாதாவின் மகன்.
வழக்கம்போல நாயகியும் நாயகனும் தப்பிக்க வேண்டுமே? இதிலும் அது நடக்கிறது.
நடந்த உண்மையை அறிய விரும்பாத தாதா, தன் மகனுடன் மோதிய நாயகனைச் சும்மாவிட முடியாது என்று சூளுரைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்று சொல்கிறது ‘மைக்கேல்’.
‘யார் இந்த மைக்கேல்’ என்று அவரை வளர்த்த தாதாவின் கையாள் கதை சொல்வதாகவே திரைக்கதை தொடங்குகிறது.
அவரது வார்த்தைகளுடன் முடிவடைகிறது. இதிலிருந்தே மைக்கேல் யார், எப்படிப்பட்டவர், எதற்காக அடியாளாகச் சேர்கிறார் என்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவோம்.
ஏற்கனவே பார்த்த கேங்க்ஸ்டர் படங்களை வைத்துக்கொண்டு, மைக்கேல் கதையை யோசித்தால் நிச்சயம் அது அச்சுப்பிசகாமல் இருக்கும். காரணம், மைக்கேலும் ஒரு சினிமாத்தனமான தாதா தான்.
கேஜிஎஃப் வழியில்..!
ஒரு காட்சியிலுள்ள எல்லா ஷாட்களையும் செதுக்கி வைத்தாற்போல வடிவமைப்பதும், தொகுத்துப் பார்க்கும்போது பிரமிப்பை உருவாக்குவதும் ஒருவகை ஆனந்தம். அது, ‘மைக்கேல்’ இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடிக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.
நாயகன், ஜான் விக் உட்பட ஐந்து படங்களின் தாக்கம் இதில் உண்டு என்று இறுதியாக வரும் டைட்டில் கார்டில் காண்பித்திருக்கிறார்.
ஆனால், சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 1 & 2’ பலமாக அவரைப் பாதித்திருக்கிறது என்பதை திரைக்கதையாக்கமே சொல்லிவிடுகிறது.
கேஜிஎஃப்பின் கதைக்கும் இப்படத்திற்கும் அடிப்படை அம்சம் ஒன்றுதான்.
ஆனால், அப்படத்தில் அது ஒவ்வொரு காட்சிக்கும் ஆதாரமாக இருக்கும்; இதில், கிளைமேக்ஸில் ஒரு ஆச்சர்யமாக அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனைச் சொல்வது ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறேன்.
மற்றபடி, கடைக்கோடி ரசிகன் கூட ‘கேஜிஎஃப்’பின் காப்பி என்று சொல்லத்தக்க வகையிலேயே இதில் காட்சிகள், ஷாட்கள், வசனங்கள் அமைந்திருக்கின்றன.
வேண்டுமென்றே அப்படியொரு தொனி தென்பட வேண்டுமென்று மெனக்கெட்டிராவிட்டால், இப்படம் இன்னும் உயரத்தை அடைந்திருக்கும். காரணம், இப்படத்தில் அர்ப்பணிப்போடு கொட்டப்பட்டிருக்கும் உழைப்பு.
டிஐயின் பங்கை உணர்ந்து கேமிரா கோணங்களில் அபார கவனத்தைக் கொட்டியிருக்கிறது கிரண் கவுஷிக்கின் ஒளிப்பதிவு.
சத்யநாராயணாவின் படத்தொகுப்பு, இடையிடையே வரும் கடந்த காலத்தைக் குழப்பாமல் வழங்க மெனக்கெட்டிருக்கிறது.
காந்தி நடிகுடிகரின் கலை வடிவமைப்பு பிரேம்களைச் செதுக்கி வைத்தாற்போல அமைக்க ஒளிப்பதிவாளருக்கு உதவியிருக்கிறது; தரையில் அடித்த பந்துபோல அடியாட்களைக் காட்டாமல், ஓரளவுக்கு இதமான சண்டைக்காட்சிகளைத் தந்திருக்கிறார் தினேஷ் காசி.
சந்தீப் கிஷனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. ஒரேநேரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்யவும் ரசிகர்களின் கவனத்தைக் கவரவும் முயன்றிருக்கிறார்.
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போலச் செயல்படும் ஒரு பெண்ணாகவே திவ்யான்ஷா பாத்திரத்தைச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. அது திரையில் மிகச்சரியாக வெளிப்படவில்லை.
இது போன்றதொரு கதைக்கு நாயகிக்கு தரும் முக்கியத்துவம் ரொம்பவே முக்கியம்.
சந்தீப் உடன் திவ்யான்ஷா தோன்றும் காட்சிகளில் இன்னும் காதலை வாரியிறைத்திருந்தால் அவரை ரசிகர்கள் கொண்டாட வழி பிறந்திருக்கும்.
வில்லனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக வரும் அனுசுயா பரத்வாஜ், மகனாக வரும் வருண் சந்தேஷ் அனைவருமே அளவாக நடித்திருக்கின்றனர்.
தன் படங்களில் வரும் வில்லன் பாத்திரங்களுக்குக் குரல் தந்து பழக்கப்பட்டதனால், அதேபோன்ற வேடங்களை ரொம்பவும் எளிதாக கையாண்டு வருகிறார் கவுதம்.
கேங்க்ஸ்டரையே ஆட்டிப்படைக்கும் பொண்டாட்டியாகவும் ஒரு தாயாகவும் தோன்றியிருக்கிறார் அனுசுயா. அப்பாத்திரத்தின் பங்கு இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம்.
ஒருகாலத்தில் நாயகனாக நடித்த வருண் சந்தேஷ், இதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாதவாறு மாறியிருக்கிறார்.
பெரிதாக ‘க்ளோஸ் அப் ஷாட்கள் இல்லாததே அவரது முகம் நம் நினைவில் நிற்காமல் இருக்கக் காரணமாகியிருக்கிறது.
கேஜிஎஃப்பில் நடித்தது போலவே, இதில் சந்தீப்பின் கார்டியன் ஆக வருகிறார் அய்யப்பா.
படம் முழுக்க 50, 100 அடியாட்கள் அவ்வப்போது வந்து போயிருக்கின்றனர்.
அனைவரையும் தாண்டி விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமாரின் கௌரவத் தோற்றம் ‘வாவ்’ ரகம்.
அக்காட்சிகள் எல்லாமே 80, 90களில் வந்த கமர்ஷியல் படங்களுக்கான அர்ப்பணம் போன்றே அமைந்திருக்கின்றன.
இவர்களுக்கும் அப்பால் ஒரு நாயகன் இந்த படத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் தான் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இந்தப் படம் அவரை இந்தியா முழுக்க உற்றுநோக்க வைப்பது நிச்சயம்.
வன்முறை நிறைந்த காட்சிகளை ஒரு சாகசமாக, கேளிக்கையாக, திருப்தியாக உணர வைக்க, அதன் பின்னே ஒலிக்கும் இசையால் மட்டுமே முடியும்.
இப்படம் குறிவைப்பது இளைய தலைமுறையைத்தான் என்பதால், இதனை ஒரு குறையாகவும் முன்வைக்க முடியும்.
ஆனால், திரைக்கதையின் வகைமையைக் காத்து அதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார் சாம்.
தெளிவு கூடியிருந்தால்..!
கிளைமேக்ஸில் எந்த திருப்பத்தைக் காட்டியிருக்கிறாரோ, அதற்கு நியாயம் செய்யும் விதமான தகவல்களைத் திரைக்கதையில் தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.
அதற்கு ரஞ்சித் மணாளன் உடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும் வசனங்கள் உதவியிருக்கின்றன.
ஒரே நேரத்தில் நாயகனின் சாகசத்தைச் சொல்ல இரண்டு, மூன்று காட்சிகளை ‘இண்டர்கட்’டில் சொல்வது நல்ல உத்திதான். ஆனால், கேஜிஎஃப்பில் அது படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதனை வசதியாக மறந்திருக்கிறார் இயக்குனர்.
‘அவன் யார் தெரியுமா’, ‘எப்படிப்பட்டவன் தெரியுமா’ என்பது போன்ற நாயகனுக்கான பில்டப்களோடு பின்பாதி திரைக்கதையில் இருக்கும் தொய்வினைத் தவிர்த்திருந்தால் இன்னும் தெளிவு கூடியிருக்கும்.
வில்லனுக்கு ஒரு தம்பி உண்டு, நாயகனுக்கு ஒரு தாய் உண்டு என்பது போன்ற ஒரு வரித் தகவல்கள் தான் இறுதிக்காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
அதே போன்று கவுதமுக்கும் வருண் சந்தேஷுக்கும் இடையிலான மோதலையும் கூட இன்னும் கூர்மையாகச் சொல்லியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாத காரணத்தால், அவ ‘டபுள் கேம்’ ஆடுகிறார் என்பது வசனங்களில் மட்டும் தட்டையாகத் தென்படுகிறது.
அனுசுயாவின் பிள்ளைப் பாசமே ஒட்டுமொத்த கதைக்கும் ஆதாரமான விஷயம்.
அதனை விளக்க காட்சிகள் அமைத்தால் ‘க்ளிஷே’வாக இருக்கும் என்று தவிர்த்திருக்கிறார் இயக்குனர்; ஆனால், அதுவே படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் திரைக்கதை கட்டிய கோட்டையைக் குலைத்திருக்கிறது.
அனைத்தையும் மீறி காட்சிப்பூர்வமான அழகுக்காகவும் ரசனையோடு இழைக்கப்பட்டிருக்கும் இசைக்காகவும் மட்டுமே, இந்த கேங்க்ஸ்டர் ட்ராமாவை ரசிக்கலாம். ‘மைக்கேல்’ படத்தைக் கண்டு தீர்வதற்கான ஒரே காரணம் அவை மட்டுமே!
– உதய் பாடகலிங்கம்