அதானி விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்!

– மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதானி குழும விவகாரத்தால் 2-ம் தேதியும், 3-ம் தேதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த 24-ம் தேதி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கு சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை முடக்கி இருந்தனர்.

இந்த நிலையில் அதானி குழும விவகாரத்தால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் மற்றும் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மகுவா மைத்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும்.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடமை வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது பற்றியும், கடன் வழங்கி இருப்பது குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழும விவகாரத்தை கிளப்பினார்கள்.

அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின. 

இதனிடையே அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்திற்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை காட்டிலும் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும்.

அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான முக்கியத்துவததையும் தருகிறோம்” எனக் கூறியுள்ளார். 

You might also like