பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 6.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில்,
தேசிய நீதித்துறை புள்ளிவிவர அமைப்பின் பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் படி, உயா்நீதிமன்றங்களில் 2,94,547 வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 6,71,543 வழக்குகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வழக்குகள் நிர்வாக தகவல் நடைமுறையில் இடம்பெற்றிருக்கும் ஜனவரி 27-ம் தேதி வரையிலான விவரங்களின் படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை 208 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் பொதுமக்களிடையே அவா்களின் உரிமைகள் தொடா்பான விழிப்புணா்வு அதிகரிப்பது போன்ற காரணங்களால் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.