பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வீ.முரளிதரன் எழுத்துபூா்வமாக பதிலளித்தார்.
அதில், “கடந்த 2019-இல் இருந்து பிரதமா் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை 21.
இதில், ஜப்பானுக்கு 3 முறையும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தலா 2 முறையும் சென்றார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 2019-இல் இருந்து குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.6.24 கோடி செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 7 பயணங்களும், தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பிரிட்டனுக்கு ஒரு முறையும் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 86 எனவும் இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.20.87 கோடி” என அமைச்சர் முரளிதரனின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.