பத்து வயதில் திருமண ஏற்பாடு…!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை

சென்னை கான்சர் ஆஸ்பத்திரியை நிறுவிய இவர் மாகாண சட்டசபையின் முதல் பெண்மணி.

இவரது தந்தை நாராயணசாமி ஐயர். ஒரு தேவதாசியாகிய இவரது தாய் சந்திரம்மாளை மணந்து கொண்டதால் பல இன்னல்களைச் சந்தித்தவர். இதோ இவரது சுயசரிதையில் ஒரு பகுதி:

நான் புதுக்கோட்டையில் 1886-ம் ஆண்டு பிறந்தேன். என் அம்மாவுக்கு அப்போது வயது 16. அந்தக் காலத்தில் எட்டு வயதுக்கு மேல் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. 10, 12 வயதுக்கு மேல் எந்தப் பெண்ணுக்கும் திருமணம் ஆகாமல் இருக்க விடுவதுமில்லை.

எனக்கு பத்து வயது ஆனபோது ஒரு இளைய உறவினருடன் என்னுடைய திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தத் திருமணம் நடக்க முடியாமல் ஆயிற்று. திருமணப் பேச்சு எழுந்தபோது திருமணத்தின் பொருளைக்கூட அறியாத இளம் சிறுமியாக நான் இருந்தேன். என் கருத்தைக் கேட்பாரும் இல்லை.

என் ஆசிரியரின் வற்புறுத்தலின் பேரில் 13 வயது வரை படிப்பைத் தொடர எனக்கு அனுமதி கிடைத்தது.

என்னுடைய அம்மா என் படிப்பை நிறுத்தவேண்டும் என்றும், என்னை மணம்முடித்து தரவேண்டும் என்றும் எப்போதும் அப்பாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அவள் அதைக் குறித்து அடிக்கடி அழுவதும், அது பற்றி அப்பாவிடம் வெளிப்படையாகச் சண்டை போடுவதுமாக இருந்தாள்.

என்னுடைய திருமணத்துக்காகவும் பேரக்குழந்தைகள் பிறக்கவேண்டும் என்றும், அடிக்கடி ராமேஸ்வரம், மதுரை போன்ற புனித இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டாள். தினமும் பல மணி நேரம் சூரியனைப் பிரார்த்தனை செய்து வழிபடுவாள்.

என்னுடைய 13 வயதில் எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. எனவே, திருமண யோசனையை நிராகரித்தேன். எங்களுடைய அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும் நான் திருமணம் ஆகாமல் இருப்பதைப் பற்றி வம்பு பேசினர்.

குடும்பத்துக்கு அது நல்ல சகுனமல்ல என்றும் கூறினர். அந்தப் பெண்கள் வீட்டை விட்டு சென்ற உடனேயே, என் அம்மா, ஒரு வயதான மகளைத் திருமணம் செய்யாமல் வீட்டில் வைத்திருக்க வேண்டிய தலைவிதியை நினைத்து அழுவாள்.

பல கோவில்களுக்குச் சென்று தனக்கு பேரக் குழந்தைகள் கிடைக்க வரம் கேட்பாள்.

எனவே, நான் வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை. என் அப்பா படித்தவர்; அதனால், அம்மாவின் கருத்துக்களையும் உறவினர் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பாவால் சொல்லிக்கொடுக்கப்பட்டு நான் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் வெற்றிபெற்றேன்.

என்னுடைய இண்டர்மீடியட் தேர்வு முடிந்து, என் பட்டப்படிப்புக்கு வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்று அப்பாவிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் என் அப்பாவின் பழைய மாணாக்கர் டாக்டர் சீனிவாச ராவ் என் அப்பாவைப் பார்க்க வந்தார்.

அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் குறைவான பெண்களே மருத்துவம் பயில வருவதாகவும் என்னை மருத்துவம் பயில அனுப்பலாம் என்றும் யோசனை தெரிவித்தார். என் அப்பா என்னை கூப்பிட்டார். மருத்துவப் படிப்பில் சேர விருப்பமா என்று கேட்டார்.

நானும், இந்த இதமில்லாத சூழ்நிலையைவிட்டு வெளியேற வேண்டும் என்றும், எனது லட்சியங்களுக்கு சிறிதும் உதவிபெற முடியாத சூழ்நிலையிலிருந்து மாறவேண்டும் என்றும் நினைத்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். என் அப்பா அரசுக்கு எழுதிப்போட்டு நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க உதவித் தொகை பெற்றார்.

அது 1907ஆம் ஆண்டு. நான் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றபோது, 16 வயதான என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி என் பிரிவு தாங்காமல் அழுதாள்.

அவள் அப்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பிறந்தபின் கட்டாயம் சென்னை அழைத்துசென்று நகரத்தைச் சுற்றிக் காண்பிப்பதாக சத்தியம் செய்து சமாதானப்படுத்தினேன். நாங்கள் சென்னைக்கு ஒரு புதன்கிழமை வந்தோம்.

பிறகு ஒரு சனிக்கிழமை நானும் அப்பாவும் டிராமில் நகரத்துக்கு சென்று என் மருத்துவப் புத்தகங்களை வாங்கிவந்தோம்.

வீட்டுக்குத் திரும்பியபோது ஒரு தந்தி காத்திருந்தது. அந்த ஒன்றுவிட்ட சகோதரி முதல்நாள் இறந்துவிட்டதாகவும் அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் தந்தியில் இருந்தது.

நன்றி: இந்திரன், கலை இலக்கிய விமர்சகர்

You might also like