மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களைப் பற்றி வாசிப்பதும் விவாதிப்பதும் விடை தெரியாத புதிருக்கு மீண்டும் மீண்டும் தீர்வு தேடுவதைப் போன்றது.
திரைப்படங்களில் இது போன்ற அம்சங்களைக் கையாள்வது புலிவாலைப் பிடித்த கதை தான். கொஞ்சம் கூட பிடியைத் தளர்த்தாமல், தலையைப் புலி பின்னோக்கித் திருப்பா வண்ணம் சமாளிக்க முடிந்தால் அதுவொரு சாகசப் பயணமாக மாறும்.
ஏறக்குறைய அது போன்றதொரு அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறது லிஜோ ஜோஸ் பெலிசேரியின் இயக்கத்தில் மம்முட்டி நடித்திருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
பயணத்தின் நடுவே..!
ஜேம்ஸ் (மம்முட்டி), தன் மனைவி சாலி (ரம்யா), மகனுடன் வேளாங்கண்ணி செல்கிறார். அவரது மாமனார், மச்சினன், நாடகக் குழுவினரின் குடும்பத்தினர் என்று சுமார் 20 பேர் அந்த பயணத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். அனைவரும் ஒரு வேனில் வந்திருக்கின்றனர்.
வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிடுகின்றனர்.
மலையாள மொழி, கலாசாரத்தின் மீது பெருமிதம் கொண்டிருக்கும் ஜேம்ஸுக்கு, அந்த ஹோட்டலின் சூழலே பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறார்.
மீண்டும் வேன் கிளம்பும்போது, ‘உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு’ என்பதுபோல, அனைவரும் தூங்கி வழிகின்றனர். ஓட்டுநரையும் கூட தூக்கம் தொற்றுகிறது.
திடீரென்று கண் விழிக்கும் ஜேம்ஸ் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்கிறார். சாலையை ஒட்டியிருக்கும் சோளக்காட்டுக்குள் புகுந்து சென்றுவிடுகிறார்.
பழனி அருகேயுள்ள கிராமம் அது. அங்கிருக்கும் வீடொன்றில் புகுந்து காபி குடிக்கிறார். தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவரது கணவர் சுந்தரம் போலப் பேசுகிறார்.
சுந்தரம் காணாமல்போய் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர் என்னவானார் என்று உறவினர்கள் உட்பட எவருக்கும் தெரியவில்லை.
அந்த வீட்டில் இருக்கும் டிவிஎஸ் 50யை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார் ஜேம்ஸ். முகம் தெரியாத நபரொருவர் அங்கு வந்ததை அறிகின்றனர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள். ஜேம்ஸை தேடத் தொடங்குகின்றனர்.
அதேபோல, வேனில் இருக்கும் ஜேம்ஸின் மனைவி, மகன் உள்ளிட்டவர்களும் அவரைத் தேடி அந்த கிராமத்திற்குள் நுழைகின்றனர்.
ஜேம்ஸுக்கு என்னவானது? திடீரென்று அவர் ஏன் சுந்தரமாக மாறினார்?
உண்மையிலேயே அதுவொரு அமானுஷ்யமான விஷயமா அல்லது ஜேம்ஸின் திறமையான நடிப்பா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
பயணத்தின் நடுவே, ஒரு கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் இன்னொரு கலாசாரமுள்ள மண்ணில் கால் பதிக்கின்றனர்.
அப்போது, அவர்கள் என்னமாதிரியான அனுபவங்களைக் கடந்து வருகின்றனர் என்று சொல்வது தான் இப்படத்தின் சிறப்பு.
அடேங்கப்பா மம்முட்டி!
மௌனம் சம்மதம், தளபதி பார்த்து மம்முட்டியின் ரசிகனான ஒருவர், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ கண்டால் வியப்பின் உச்சத்திற்கே போவார். பெரிதாக மாறாமலிருக்கும் மம்முட்டியின் தோற்றத்திற்கு அவரது வாழ்க்கை முறையும் தனிப்பட்ட குணநலன்களும் அடிப்படை என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம்.
ஆனால், இந்த வயதிலும் சிறிது தளர்வு கூட இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக உருமாறியிருப்பதுதான் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.
அதிலும், டாஸ்மாக் பாரில் மது அருந்தும்போது ‘கௌரவம்’ பட பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவும் வழக்கறிஞர் கண்ணனாகவும் மாறி மாறி நடித்துக் காட்டுகிறாரே.. அக்காட்சி ’அடேங்கப்பா..’ ரகம்!
மம்முட்டியின் மனைவியாக வரும் ரம்யா சுவி, அசோகன், உறவினர்களாக வருபவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக வரும் ஜி.எம்.குமார், மறைந்த ‘பூ’ ராமு, ரம்யா பாண்டியன், சித்திரசேனன், ராமச்சந்திரன் துரைராஜ், நமோ நாராயணா உட்படப் பலரும் இயல்பான கதாபாத்திரங்களாகத் திரையில் தெரிகின்றனர்.
சுந்தரத்தின் தாயாக நடித்தவரும் மகளாக நடித்தவரும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்படத்தின் பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. ஒரு ஹேண்டிகேம் வீடியோ போல தொடங்கி மெல்ல ஒரு ஆவணப்படத்தின் தொனிக்கு மாறும்போது, ரசிகர்களான நாமும் புதிய பயணத்திற்குத் தயாராகிறோம்.
தீபு ஜோசப்பின் படத்தொகுப்பு வெகுநேர்த்தியாக காட்சிகளைத் தீட்டியுள்ளது.
பின்னணி இசைக்குப் பதிலாக ‘ரத்தக் கண்ணீர்’ தொடங்கிப் பல தமிழ் திரைப்படங்களின் பாடல்கள், வசனங்களை ஒலிக்கவிட்டிருப்பது அருமையான உத்தி. அவை காட்சிகளின் தன்மைக்கு ஏற்றதாக இருப்பது இன்னும் சிறப்பு.
லிஜோவின் கதைக்கு ஹரீஷ் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். வேனில் பயணிக்கும்போதும் ஹோட்டல் வாசலில் மம்முட்டி உள்ளிட்டோர் ஒருவரையொருவர் கிண்டலடிக்கும்போதும் மலையாள வசனங்களை உற்றுக் கவனிக்கத் தோன்றுகிறது.
அதற்கு ஈடாக, ஜெயகுமார் மண்குதிரையின் தமிழ் வசனங்களும் சிரிப்பூட்டுகின்றன; நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
லிஜோவின் மாஸ்டர்பீஸ்!
‘அங்கன்மாலி டயரீஸ்’ பார்த்த எவரும் நிச்சயம் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரியின் ரசிகர்களாகிவிடுவார்கள். ஆனால், அதன்பின் வந்த ‘ஏ மா யூ’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ போன்ற படங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிப்பதாக அமைந்தன.
கலைப்படங்கள் என்ற பெயரில் வெற்றிலை பாக்கு பொடிக்கும் பாட்டியைக் காட்டிக் கொண்டிருப்பதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் அப்படியான காட்சிகள் உண்டு. ஆனால், அதெல்லாமே திரைக்கதையில், கதாபாத்திர அமைப்பில், குறிப்பிட்ட காட்சியில் அசைவை உண்டாக்குவதாக உள்ளன.
சுந்தரம் என்ற பாத்திரமாகத் தமிழ்நாட்டு கிராமத்தினுள் மம்முட்டி நுழையும் ஷாட்களின் மீது ‘ரத்தக்கண்ணீர்’ வசனம் ஒலிக்கும். இன்றும் கிராமங்களில் எம்.ஆர்.ராதா படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதாகவே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
சுந்தரத்தின் தாயாக வருபவர் கருநீல நிறக் கண்ணாடி அணிந்திருப்பார்; அவர் ஒரு கண் பார்வைத் திறனற்றவர். வீட்டினுள் இருக்கும் மரத்தூணில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருப்பார். அவர் எதிரே இருக்கும் தொலைக்காட்சி நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
சுந்தரம் என்ற பாத்திரமாக மாறி அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன், அந்த தாயின் அருகே அமர்வார் மம்முட்டி. மடித்து வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலையை எடுத்து அவரது கையில் கொடுப்பார். அதை வாங்கிச் சுவைக்கும்போது அத்தாயின் முகத்தில் ஒரு சிரிப்பு மெலிதாக மலரும். அந்த இடம்தான் லிஜோ சொல்லவரும் கதையின் முகடு.
இக்கதையில் அமானுஷ்யம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விகளுக்கு திரைக்கதையில் அவர் பதில் சொல்லவே இல்லை.
முக்கியமாக, அந்த கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் அப்படியொரு விஷயத்தை வெகு இயல்பாகக் கடப்பதாகக் காட்டியிருக்கிறார்.
பெரும்பாலான மலையாளப் படங்களில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கு உண்டு.
மாறாக, முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுகிற, நேசிக்கிற மனப்பாங்கு தமிழர்களுக்கு உண்டு என்று காட்டியிருப்பதுதான் இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு.
ஒரு மனிதன் என்பவன் யார்? அவனது அடையாளம் எது? முகமா, புறத்தோற்றமா, இதுவரை வாழ்ந்த வாழ்க்கையா, வெளிப்படுத்தும் குணமா அல்லது அதையும் தாண்டி அம்மனிதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஒளியுருவமா?
சுந்தரமாக மாறிய ஜேம்ஸ் பசுவிடம் பால் கறக்கும்போதும் சரி, இறுதியில் அவர் வந்த வாகனம் செல்கையில் பின்னால் ஒரு நாய் ஓடுவதும் சரி! இது போன்ற பல கேள்விகளை நம்முள் எழும்.
வெகு இயல்பான களம், கதாபாத்திரங்கள் மூலமாக அமானுஷ்ய நிகழ்வொன்றை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் லிஜோ.
அவர் இயக்கியுள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ புலிவாலைப் பிடிக்கின்ற ஒரு கதைதான். ஆனாலும், இறுதிவரை பிடியை விடாமல் இருந்த காரணத்தால், இது லிஜோவின் ‘மாஸ்டர்பீஸ்’களில் ஒன்றாகியிருக்கிறது.
-உதய் பாடகலிங்கம்