அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற யு19 மகளிர் அணி !

பதினொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தன. அதன் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக கோங்காடி வி த்ரிஷா 24 ரன்களும், சௌம்யா மணீஷ் திவாரி 24 ரன்களும், ஷபாலி வர்மா 15 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்தியா அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like