தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கு செய்தவை?

இளங்குமரனார்.

இந்தப் பெயரைக் கேட்டதும் அவருடன் பழகியவர்களுக்கு அவருடைய தமிழின் கம்பீரம் தான் நினைவுக்கு வரும்.

தனித் தமிழை அவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் உச்சரிக்கிற அவருடைய உரையாடலை எளிதில் மறுக்க முடியாது.

சங்க இலக்கியத்திலும், குறிப்பாகத் திருக்குறளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பதை உணர்த்துபவை அவருடைய பேச்சும், எழுத்தும்.

மதுரையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கிருஷ்ணன் என்ற பெயரை ‘இளங்குமரன்’ என்று மாற்றிக் கொண்டவர். முது முனைவர் பட்டம் பெற்றவர்.

ஐநூறுக்கும் அதிகமான நூல்களைத் தன் வாழ்நாளில் எழுதியவர். செந்தமிழ்ச் சொற்களஞ்சியத் தொகுப்பை 14 தொகுதிகளாகக் கொண்டு வந்தவர் 25.07.2021 அன்று மதுரையில் இயற்கை எய்தினார்.

தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டம் பற்றிய நூலுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இளங்குமரனாரைச் சந்தித்தபோது, மொழிப் போராட்டம் குறித்த அவருடைய உணர்வைப் பகிர்ந்து கொண்டார்.

‘உயிருக்கு நேர்’ என்ற அந்த நூலில் உள்ள இளங்குமரனாரின் பதிவு இது:

“1962 இல் தமிழ் மொழியைக் காக்கவும் அதை மீட்டுருவாக்கம் செய்யவும், உருவாக்கப்பட்டதுதான் தமிழ்க் காப்புக் கழகம்.

மதுரைத் தியாகராயர் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார்.

அப்போது நான் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இயல்பாகவே தமிழுணர்வு மிகுதியாக இருந்ததனால் தமிழ்க் காப்புக் கழகத்தின் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

அப்போது அடித்தட்டு மக்கள் முதல் அதாவது உழவுத்தொழில் செய்பவன் முதற்கொண்டு அனைவரும் தமிழைப் பயில வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று மாதகராட்சியிடம் வேண்டுகோள் வைத்தோம்.

ஓர் அரசுப் பள்ளியை ஒதுக்கித் தந்து மாலை 6 மணி முதல் 10.30 மணி வரை வகுப்பெடுக்க அனுமதித்தனர்.

இந்த பள்ளியை நடத்த தமிழண்ணல் போன்றோரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

பல தமிழறிஞர்களின் உறுதுணையோடு எல்லா வகையான இலக்கியங்களும் பயிற்றுவிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்க் காப்புக்கழகம் களம் இறங்கியது. இந்தி வந்துவிட்டால் தமிழ் ஆரம்பப் பள்ளியிலிருந்தே விலக்கப்படும்

அபாயம் இருந்ததனால் ‘தமிழ் பயிற்று மொழி’ப் போராட்டத்தை நடத்தினோம்.
அதில் பெரும்பான்மையான மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழ் பயிற்று மொழித் திட்டத்தால் மக்களிடையே பிரிவினை வந்துவிடும் என்று கூறி இலக்குவனாரை கைது செய்ய பக்தவச்சலம் அரசு உத்தரவிட்டது.

அதற்கு இன்னொரு காரணம் அப்போது இலக்குவனார் ‘குறள் நெறி’ என்கிற இதழை நடத்திக் கொண்டிருந்தார். அதில் இந்தித் திணிப்புக்கு எதிரான கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

எனவே இலக்குவனார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 105 நாட்கள் சிறைப்படுத்தப்பட்டார்.

அதற்குப் பிறகு அந்த அமைப்பு தொல்காப்பியர் கழகமாக மாற்றப்பட்டது. எங்களுடைய போராட்டமும் வேறொரு வகையில் தொடர்ந்தது, அதாவது விளம்பரப் பலகையில் தமிழ் இருக்க வேண்டும்.

வேற்று மொழிகளை அகற்ற வேண்டும் என்று போராட்டம் செய்தோம். இளைஞர்களைக் கொண்டு ‘தொண்டர் குழு’வை அமைத்து அதன்மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பணிகளைச் செய்து வந்தோம்.

அன்றைக்கு மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரு பிரிவினராவர்.
ஒன்று மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் கொள்கையைப் பின்பற்றியவர்கள், மற்றொரு பிரிவினர் பெரியார், அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றியவர்கள்.

வ.சு.ப.மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் ஒரு மொழிக் கொள்கைதான் சிறந்தது என்றனர்.

வள்ளுவர் கருத்துப்படி, ஓர் அரசு செம்மையானதாக இருக்குமானால் அது அனைவருக்கும் கல்வியை அளித்திருக்க வேண்டும் என்பதனால்தான் இறைமாட்சிக்கு அடுத்த அதிகாரமாக கல்வியை வைத்திருக்கிறார் வள்ளுவர்.

ஆனால் இன்றைய அரசுகள் கல்வியை வியாபாரமாக்கும் நோக்கோடு தனியார் மயமாக்கியிருக்கிறன. விளைவு தமிழ் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.

அடையாறிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்ற சிறு மாணவி தவறி கீழே விழுந்தபோது ஏற்பட்ட வலியால், அம்மா என்று தமிழில் கத்தியதற்காக பள்ளி நிருவாகம் அக்குழந்தையை கடுமையாக தண்டித்திருக்கிறது.

அதனை எதிர்த்து நாங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடு கலைஞரைச் சந்தித்தோம்.

அவரும் ஒரு குழுவை அமைத்து, விவாதம் நடத்தி அதன்படி ஐந்தாம் வகுப்புவரை தமிழைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்கிற கட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால் அது நீதிமன்றத்தில் நிலுவை வழக்கில் இன்றுவரை கிடக்கிறது.

தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

நம் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் தமிழ் எப்போதோ தமிழகத்தில் முழுமையான ஆட்சி மொழியாகியிருக்கும்.

ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே பள்ளிகளில் மூன்றாம் வகுப்புவரை தமிழ் பயிற்று மொழியாக இருந்தது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மழலையர் பள்ளி முதலே ஆங்கிலத்தைக் கொண்டு வந்துவிட்டனர்.”

You might also like