ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என்று ஒவ்வொரு வகைமை படமும் இப்படித்தான் தொடங்கும், இப்படித்தான் முடியும், இடைப்பட்ட பகுதிகள் இத்திசையில் பயணிக்கும் என்று திரைக்கதை சூத்திரங்கள் உலவுகின்றன. அன்னிய நாடுகளில் உளவு பார்ப்பதோடு சாகசங்கள் பல படைப்பதைச் சொல்லும் ‘ஸ்பை ஆக்ஷன்’ படங்களும் அதில் அடங்கும்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஆதித்ய சோப்ரா தயாரிப்பில், ஷாரூக்கான் நாயகனாக நடித்துள்ள ‘பதான்’, அப்படி ஏற்கனவே வகுக்கப்பட்ட ’க்ளிஷே’க்கள் பலவற்றைத் தாங்கி பழக்கப்பட்ட உளவாளிப் படமாக வந்திருக்கிறது. ஏற்கனவே பார்த்ததுபோல இருந்தாலும், அதையும் மீறி திரையில் சுவாரஸ்யங்களை அள்ளித் தந்திருக்கிறதா?
உளவாளிக்கு முன்னுதாரணம்!
இந்தியாவுக்காகப் பணியாற்றி மோசமான காயங்களால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட உளவாளிகளைக் கொண்டு ஜேஓசிஆர் (JOCR) எனும் ஒரு தனிப்படையை அமைக்க விரும்புகிறார் ஏஜெண்ட் பதான் (ஷாரூக்கான்). அவருக்கு மேலதிகாரியாக இருந்த நந்தினி (டிம்பிள்) அதன் பொறுப்பை ஏற்கிறார்.
எந்த நாட்டையும் சாராத தீவிரவாதக் குழுவொன்று துபாயில் நடக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் கலகம் விளைவிக்கத் திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறது ஜேஓசிஆர். அதில் இந்தியக் குடியரசுத்தலைவர் பங்கேற்கவிருக்கிறார்.
குடியரசுத் தலைவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, இந்திய பாதுகாப்புப் படையோடு பதானும் செல்கிறார். கணிப்பை மீறி, அந்த விழாவுக்குச் சென்ற இரண்டு இந்திய விஞ்ஞானிகளைக் கடத்திச் செல்கிறார் தீவிரவாதக் குழுவின் தலைவனான ஜிம் (ஜான் ஆபிரகாம்).
ஒருகாலத்தில் ‘ரா’ உளவுப்பிரிவில் பணியாற்றியவர் ஜிம்; அவரையும் அவரது கர்ப்பிணி மனைவியையும் கடற்கொள்ளையர்கள் கடத்தியபோது, அவர்களை விடுவிக்கப் பணயத்தொகை கொடுப்பதில் இழுபறி ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, இருவரும் கொல்லப்பட்டதாகத் தகவல்.
உண்மையில், ஜிம்மின் மனைவி மட்டுமே பலியாகிறார்; நாட்டுக்காக உழைத்த தன்னையும் குடும்பத்தினரையும் அரசு காப்பாற்றாத காரணத்தால் ரவுத்திரம் கொள்கிறார் ஜிம்.
அதன் எதிரொலியாக, தன்னைப் போன்றே பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் உளவாளிகளைச் சேர்த்துக்கொண்டு ஜிம் பயங்கரவாதத்தில் இறங்கியிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்குத் தலைவலியாக மாறுகிறது.
விஞ்ஞானிகளை கடத்துவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ரூபினா (தீபிகா படுகோனே) என்று கண்டறிகிறது ஜேஓசிஆர் குழு. அதன்பின், ரூபினாவைத் தேடிச் செல்கிறார் பதான்; அங்கே ஜிம்மை மீண்டும் சந்திக்கிறார்.
அவ்வளவுதான், தான் சாவது உறுதி என்று எண்ணும் நிலையில் பதானைக் காப்பாற்றுகிறார் ரூபினா.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இந்திய உளவாளியைக் காப்பாற்றுவது ஏன்? இந்திய விஞ்ஞானிகள் கடத்தப்படுவதற்கான காரணம் என்ன? எப்படிப்பட்ட பயங்கரவாதச் செயலை மேற்கொள்ள ஜிம் தயாராகி வருகிறார்? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பதான்’.
ஜேம்ஸ்பாண்ட் வகையறா படங்கள் பார்த்தவர்களுக்கு ‘ஸ்பை ஆக்ஷன்’ புதிதல்ல. அந்த வகைமை படங்களில் இருக்கும் திரைக்கதை திருப்பங்களும் ஆக்ஷன் வடிவமைப்பும் உற்சாகம் கூட்டுவதாக இருக்கும்.
அந்த வகையில், ஒற்றனுக்கு முன்னுதாரணம் என்று சொல்லும் வகையில் ஆக்ஷன் காட்சிகளை அள்ளி இறைத்திருக்கிறது ‘பதான்’.
மீண்டும் ஷாரூக்!
ஷாரூக் நடித்த முழுமையான ஆக்ஷன் படம் இது. அதேநேரத்தில், அவருக்கே உரித்தான குறும்பும் ஆங்காங்கே திரையில் கொப்பளிக்கிறது. ‘டமால் டுமீல்’ சத்தங்களைக் கண்டு அடங்கி ஒடுங்குபவர்களுக்கு அக்காட்சிகளே ஆறுதல்.
2018-ம் ஆண்டு இறுதியில் ‘ஜீரோ’ படத்தில் நாயகனாகத் தோன்றிய ஷாரூக் சுமார் நாலேகால் ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இதில் நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட், பிரம்மாஸ்திரா பாகம் 1 ஆகியவற்றில் கவுரவ வேடத்தில் வந்திருந்தார். அதனால் ஷாரூக் ரசிகர்களுக்கு இது விருந்து தந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே கவர்ச்சியின் உச்சம் தொட்டிருக்கிறார் என்று சொன்னால் அது ‘க்ளிஷே’வாகிவிடும். ஆனால், அதுதான் நிகழ்ந்திருக்கிறது. குழந்தைகளுடன் ஒரு ஆக்ஷன் படம் பார்க்கலாம் என்று நினைப்பதற்கும் அதுவே தடையாகியிருக்கிறது.
ஷாரூக், தீபிகா தவிர்த்து திரைக்கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் வில்லனாக வரும் ஜான் ஆபிரகாம். நாயகனுக்குச் சரிசமமான வில்லன் வேடம். அதனால், ஷாரூக் போலவே இவரும் பல காட்சிகளில் ’எய்ட்பேக்’ காட்டியவாறு உலாவுகிறார்.
டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா, பிரகாஷ் பெலவாடி போன்ற தெரிந்த முகங்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு டஜன் நபர்கள் முகம் காட்டியிருக்கின்றனர். அதற்கு ஈடு செய்யும் வகையில், பெரும்பாலான காட்சிகளில் குறைந்தபட்சம் 100 பேராவது பின்னணியில் உலவுகின்றனர்.
இந்த படத்தில் சல்மான்கானும் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறார். ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படங்களைப் பார்த்துச் சிலிர்த்தவர்களுக்கு, அவர் தோன்றும் காட்சி விசிலடிக்க வைக்கும்.
விஷால் சேகரின் இசையில் ‘பேஷ்ரம்’ பாடல் திரைக்கதையின் இடையே வருகிறது. இறுதியாக வரும் ’ஜூம் சே பதான்’ பாடலையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர். ஆனால், நாம் பார்த்தது தமிழ் வெர்ஷன் என்பதால் பாடல் வரிகள் எதுவும் மனதில் தங்கவில்லை.
பின்னணி இசை அமைத்திருக்கும் சஞ்சித் பல்ஹரா, அங்கித் பல்ஹரா இணை நிறைய வெளிநாட்டு ஆக்ஷன் படங்கள் பார்த்திருப்பார்கள் போல.. ஆக்ஷன் காட்சிகளில் இசை வாத்தியங்களை கொட்டி முழக்கியிருக்கின்றனர்.
ஒவ்வொரு பிரேமும் ஒரு புகைப்படம் போல இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சட்சித் பவுலோஸ். ஆக்ஷன் காட்சிகளில் கதாபாத்திரங்களோடு சேர்ந்து கேமிராவும் உருண்டிருப்பது நாமே அப்படியொரு நிலைமைக்கு ஆளான உணர்வைத் தருகிறது.
படத்தொகுப்பாளர் ஆரிஃப் ஷெய்க், அளவெடுத்தாற்போல காட்சிகளை வெட்டியிருக்கிறார். முக்கியமாக நம்மூர் அனல் அரசு வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் அவரது மெனக்கெடல் அதிகம்.
’பதான்’ இயக்குனர் சித்தார்த் ஆனந்த், குடும்பக் கதைகளை ஸ்டைலிஷாக தந்து கவனம் ஈர்த்தவர். ஏற்கனவே பேங் பேங், வார் போன்ற ஆக்ஷன் படங்களையும் கொடுத்தவர்.
அந்த அனுபவமே, ‘பதான்’ படத்தில் ஷாரூக்கானை ரசிகர்கள் கொண்டாடுவதற்குத் தேவையான அம்சங்களை பார்த்துப் பார்த்து கோர்க்கச் செய்திருக்கிறது.
லாஜிக் தேவையில்லை!
ஆக்ஷன் படங்களுக்கே லாஜிக் தேவையில்லை என்றானபிறகு, உளவாளிக் கதைகளில் அப்படியொரு வஸ்துவை நிச்சயம் தேட முடியாது என்பது உண்மை. அதற்கேற்ப, இக்கதையும் மூன்றாண்டு காலத்தில் நிகழ்வதாக உள்ளது.
முக்கியமான திருப்பங்கள் எல்லாம் சில நிமிடங்களில் அமைய, ‘அப்படின்னா வருஷத்துல முக்கா நாளு இந்த ஸ்பை எல்லாம் என்ன செய்வாங்க’ என்று வடிவேலுதனமாக யோசிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
சண்டைக்காட்சிகள் நம்பமுடியாததாக இருப்பதில் பிரச்சனையில்லை; ஆனால், நம்பவைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் வரும் சண்டைக்காட்சி மட்டுமே அதனை நிறைவு செய்திருக்கிறது. மற்றவற்றில் ‘க்ரீன்மேட்’ பயன்பாடு அதிகம் என்பதால், ஹீரோ வில்லன் நேருக்கு நேர் மோதும் காட்சிகளில் நம்மை பதைபதைப்பு தொற்றவில்லை.
திரைக்கதையில் ரஷ்யா, துருக்கி, பிரான்ஸ் தேசத்து காட்சிகள் எல்லாம் வெளிப்புறங்களைக் காட்டவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
சர்ச்சைக்குரிய ’பேஷ்ரங்’ பாடலிலும் கூட, அந்த காவி நிற பிகினி திரையில் பெரிதாக இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்துவரும் காட்சியில், காவி நிறத்தை மறைக்கும் வகையில் அதே போன்றமைந்த வெள்ளை வண்ண ’டூ பீஸ்’ அணிந்து வருகிறார் தீபிகா. சர்ச்சைக்குப் பிறகுதான் இந்த மாற்றமா என்று தெரியவில்லை.
’ஸ்பை’ படங்கள் எனும்போது தேச பக்தி எனும் விஷயம் பிரதானப்படுத்தப்படும். வழக்கமாக சல்மான்கான், அக்ஷய்குமார் போன்ற இந்தி நாயகர்கள் செய்யும் வேலையை இதில் ஷாரூக் செய்திருக்கிறார். ஆனால், அதில் உயிர்ப்பு இல்லை என்பதே உண்மை.
காதல் பொங்கி வழியும் ஒரு குறும்புக்கார மனிதனாக ஷாரூக்கை ரசித்தவர்களுக்கு, இப்படம் நிச்சயம் ஏமாற்றம் தரும். அதேநேரத்தில், ஐம்பது வயதுக்குப் பிறகு கட்டுடல் அழகனாக அவர் வருவதைக் கண்டு பிரமிப்பவர்களுக்கு இப்படம் விருந்து தான்!
வழக்கமாக தமிழ் டப்பிங் படங்களில் வசனம் நம்மைச் சோதிக்கும். ஆனால் ‘கேஜிஎஃப்2’ வெற்றியைக் கண்டபிறகு பிராந்திய மொழிகளில் டப் செய்யும்போது ‘சுதி’ சுத்தமாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. அதற்கேற்றவாறு, துருத்தல்கள் இல்லாமல் அமைந்த வசனங்கள் ‘பதான்’ அனுபவத்தை இனிமையானதாக்குகிறது.
அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமொன்றைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ’பதான்’ திருப்தியைத் தருவது சந்தேகமே. ஆனால், பல நாடுகளில் நிகழ்வதாக அமைக்கப்பட்ட திரைக்கதை பரபரவென்று காட்சிகளை அமைக்க உதவியிருக்கிறது.
அதனால், 15 முதல் 30 வரையிலான இளைய தலைமுறையினருக்கு ‘கூஸ்பம்ஸ்’ உருவாக்கும் பல காட்சிகள் இதிலுண்டு. அதுதான் ‘பதான்’ படத்தின் பலமும் பலவீனமும்…